தற்கொலை எண்ணத்தை தூண்டும் மாதவிடாய் பிரச்சனை!! (மகளிர் பக்கம்)
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளால் பல பெண்கள் அந்த மூன்று நாட்கள் பலவிதமான மனஅழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையானது அவர்களுள் தற்கொலை எண்ணத்தை தூண்டக் கூடும் என்கிறார் மகளிர்-மகப்பேறியல் துறையில் மூத்த ஆலோசகர் மற்றும் லாபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தென்றல்.
‘‘இந்த நிலையை மருத்துவ மொழியில் Premenstrual Dysphoric Disorder – PMDD என்று குறிப்பிடுவோம். (பிஎம்டிடி) 3-9% சதவீத பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் Premenstrual syndrome (பிஎம்எஸ்) என்ற பிரச்சனையைவிட இது தீவிரமானது. சமீபத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்த பெண், எதேச்சையாகக் கூகுளில் மாதவிடாய்+தற்கொலை எனத் தேடிப் பார்த்ததில் பிஎம்டிடி குறித்த தகவல்களைப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே மருத்துவரை அணுகி, தன் பிரச்சனையை உணர்த்தி அதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக்
கொண்டுள்ளார்.
இந்த பிரச்சனையில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், சரியான விழிப்புணர்வும் பிஎம்எஸ் – பிஎம்டிடி பிரச்சனைகளுக்கு இடையேயான வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியாமல் இது குணப்படுத்தப்படாமல் அன்றாட வாழ்க்கையில் தொடங்கி பெண்களின் வேலை, படிப்பு, குடும்பத்தினருடனான உறவையும் பாதிக்கிறது என்கிறார் மருத்துவர் தென்றல். “ஆரம்பத்தில் இது மாதவிடாயுடன் தொடர்பில்லாத வெறும் உளவியல் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. இப்பிரச்சனையைப் பல பெயர்களில் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இப்போது இதன் தீவிரத்தை உணர்ந்து, பிஎம்டிடி என்ற பெயரில் இப்பிரச்சனையை அணுகி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இது ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய். பிஎம்டிடி ஒருவரை தாக்குவதற்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும், நிபுணர்கள் நம் உடலில் செரோடோனின் என்கிற ஹார்மோன் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர். மாதவிடாய் தொடங்குவதற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன் இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். பொதுவாக பிஎம்எஸ் பிரச்சனையில் எரிச்சல், கோபம், மன-அழுத்தம் போன்ற அறிகுறிகள் மிதமாகத் தோன்றி சில நாட்களில் சரியாகிவிடும். பிஎம்எஸ் அறிகுறிகளை மருத்துவச் சிகிச்சை இல்லாமல் கூட பெண்களால் கடந்து செல்ல முடியும்.
ஆனால் பிஎம்டிடி அறிகுறிகள் அனைத்துமே மிகக் கடுமையாக இருக்கும். கவலை, எரிச்சல், கோபம் போன்ற மனநிலை மாற்றங்களுடன் கடுமையான சோர்வு, கவனம் செலுத்த இயலாமை, வயிற்று வீக்கம், பசியின்மை அல்லது அதிக பசி, இரைப்பை, குடல் பிரச்சினைகள், தலைவலி, முதுகுவலி மற்றும் தசைப் பிடிப்பு, தலைச் சுற்றல் எனப் பல அறிகுறிகள் கடுமையாகத் தோன்றும். இது தூக்கம், சாப்பாடு என அன்றாட வேலைகளைக் கூடச் செய்யமுடியாதபடி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தினர் – நண்பர்கள் இடையே மனக் கசப்பை உருவாக்கும்.
இந்த நோயை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணின் மாதவிடாய் சுழற்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவருடைய மனநிலையையும், உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். உடற்பயிற்சி, உணவு முறைகளில் மாற்றம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல் என ஆரம்பித்து, செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் எனப்படும் ஆண்டிடிப்ரஸண்ட் மருந்துகளும் உளவியல் நிபுணரின் உதவியும் இவர்களை குணப்படுத்தும்.
ஏற்கனவே பிஎம்எஸ் பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு பிஎம்டிடி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவர்கள் உப்பு, சர்க்கரையைக் குறைத்து, தேநீர், காபி, மது, சிகரெட் போன்றவற்றை தவிர்த்து, மன அழுத்தமில்லாத சூழ்நிலைக்கு மாற வேண்டும். பிஎம்டிடி பிரச்சனை உங்களுக்கு இருப்பதாகத் தோன்றினால், உடனே மகப்பேறு மருத்துவர் அல்லது உளவியல் நிபுணரை அணுக வேண்டும்” என்கிறார் மருத்துவர் தென்றல்.
Average Rating