கோவிட் போராளிகள்…!! (மகளிர் பக்கம்)
உலகம் முழுதும் கோவிட் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பல போராட்டங்களை சந்தித்து வருகிறோம். இன்னும் அந்த போராட்டத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த ஒரு வருடம் காலம் மட்டுமில்லாமல் இன்றும் நம்முடைய ஆரோக்கியத்தை முக்கியமாக கருதி போராடி வருபவர்கள் மருத்துவம் மற்றும் சுகாதார துறையினர். நேரம் காலம் பாராமல் இன்றும் தங்களின் சேவையினை தொடர்ந்து வருகிறார்கள்.
சசிகலா, சுகாதார தொழிலாளி
‘‘ஏழு வருஷமா சுகாதாரத் துறையில் வேலை பார்க்கிறேன். கோவிட் வார்டில் எனக்கு டியூட்டின்னு சொன்னபோது, கொஞ்சம் பயமாதான் இருந்தது. என் இரண்டு பெண்களும் நர்சிங் படிக்கிறாங்க. அவங்க தான் பயப்படாம போமா… மக்களுக்கு நம்முடைய சேவை இந்த நேரத்தில் ரொம்ப அவசியம்ன்னு சொன்னாங்க. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் என் சூப்பிரவைசரும் தைரியம் கொடுத்தாங்க. உடல் முழுக்க உடை கையில் கிளவுஸ், மாஸ்க் எல்லாம் போட்டுக் கொண்டுதான் வார்ட் உள்ள போகணும். நோயாளிகள் வரும் முன்பும் சிகிச்சை பெற்று சென்ற பிறகும்… அந்த அறையில் உள்ள அனைத்து பொருட்
களையும் சோடியம் போட்டு துடைச்சிடுவோம். அதன் பிறகு கெமிக்கல் கொண்டு மாப் செய்வோம். அடிக்கடி கைய கழுவிக்கொண்டே இருப்போம். டியூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு போகும் முன் குளிச்சிட்டுதான் வெளியே போவோம். இப்பவும் நோயாளிங்க வராங்க, குணமாகி போறாங்க’’ என்றவர் முதல் கட்ட கோவிட் தடுப்பு ஊசியினை போட்டுள்ளார்.
ரேசல், செவிலியர்
போன வருஷம் இதே மாதம் கோவிட் தொற்று பரவுவதாகவும் என்னென்ன புரோடோக்கால் செய்யணும்னு சொன்னாங்க. அவங்க சொன்ன போது, நர்சாக இருந்தாலும் எனக்குள் ஒரு பயம் வந்தது. எங்களுக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வதுன்னு தெரியல. சேவைன்னு வந்தாச்சு, பின்வாங்க முடியாதுன்னு தைரியமா இறங்கினேன். தொற்று ஏற்பட்டு பேஷன்ட் அட்மிட் ஆன போது, அவங்க கண்களின் பயம் தவிர வேற எதுவும் இல்லை. தனியா இருக்கணும், யாரும் பேசமாட்டாங்கன்னு பயந்தாங்க. அந்த எண்ணத்தை போக்கி, ஆறுதல் அளித்து, பாதுகாப்பா உணர செய்தோம். அவங்கள கவனிக்கும் போது பிபிஇ உடை மாஸ்க், கிளவுஸ், அதற்கு மேல ஷீல்ட் அணியணும். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்தது என்றாலும், நம் பாதுகாப்பு முக்கியம். இந்த தொற்று இன்றும் முழுமையா சரியாகல. பேஷன்ட் வராங்க, குணமாகி போறாங்க. ஒரு சிலர் கொஞ்சம் கிரிடிக்கல்லா இருப்பாங்க. அவங்களையும் குணப்படுத்தி இருக்கோம். ஒவ்வொரு வரும் குணமாகி போகும் போது எதையோ சாதித்த உணர்வு ஏற்படும்.
ஸ்ரீ வித்யா, தொற்று நோய் மருத்துவர்
பாண்டமிக் சொன்ன போது ஒன்னுமே புரியல. என்னத்தான் நான் தொற்று நோய் நிபணரா இருந்தாலும், இந்த நோயின் தாக்கம் என்ன என்று முதலில் எல்லாரும் குழம்பி தான் போனோம். ஒவ்வொரு நாளும் பேஷன்ட் வரும் போது அவங்க நல்லபடியா குணமாகணும் தான் நினைப்போம். தொற்று அதிகமா இருந்தா, அட்மிட் செய்திடு வோம். குறைவாக இருந்தால் வீட்டில் க்வாரன்டைன் செய்ய சொல்வோம். வீட்டில் தனிமையில் இருந்தாலும், தினமும் வீடியோ அழைப்பு மூலம் உடல் நலத்தை கணிப்போம். பல்ஸ், பிபி மற்றும் ஜுரம் மூன்றையும் கணக்கெடுத்து எங்களுக்கு ரிப்போர்ட் தரணும். பலர் குணமாகி சென்றுள்ளனர். ஆனால் ஒருவர் அட்மிட் ஆன போதே அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. குணமாக்கிடலாம் என்ற தைரியத்து டன்தான் செயல்பட்டோம். ஆனால் மறுநாளே அவர் எங்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டார். அந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. இன்றும் பலர் குணமாகி சென்றாலும், அவரின் இழப்பு என் மனதில் அழிக்க முடியாத பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating