ஜெனீவா: உருளும் பகடைகள்!! (கட்டுரை)

Read Time:13 Minute, 43 Second

ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள்.

ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டது என்று, நம்பச் சொல்கிறவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இன்னமும் ஐ.நாவைக் கைகாட்டும் தமிழ்த் தேசியவாதிகளைப் பார்க்க முடிகிறது.

ஜெனீவாவை முன்னிறுத்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் எதுவுமே, மனித உரிமைகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. மாறாக, அவை இலங்கை மீதான செல்வாக்கை நோக்காகக் கொண்டவை. ஜெனீவாவை மையங்கொண்டு உருளும் பகடைகள், தமிழ் மக்களின் மீதோ, இலங்கை ஜனநாயகத்தின் மீதோ அக்கறை கொண்டு உருட்டப்படுபவையல்ல!

இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில், நாடுகள் முன்வைத்த கருத்துகள் இதை வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையோடு நட்புறவாகப் போக விரும்புகிற நாடுகள், இலங்கையோடு சேர்ந்து பணியாற்றுகின்ற நாடுகள், இலங்கைக்கான வேண்டுகோளோடு தமது அறிக்கையை முடித்துக் கொண்டன. இதற்கு நல்லதோர் உதாரணம் அவுஸ்திரேலியா; இது இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இலங்கை அகதிகள் பிரச்சினை, அவுஸ்திரேலியாவுக்குப் பெரியது.எனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட்டால், அது அகதி அந்தஸ்துக் கோரியுள்ள பலருக்கும் வாய்ப்பாகும். இலங்கையுடன் நல்லுறவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது, இலங்கை தொடர்பான அவுஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம். இதற்கு வாய்ப்பாகவே, அவுஸ்திரேலியாவின் அறிக்கை உள்ளது.

இதேபோன்ற அறிக்கையையே கனடாவும் வெளியிட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும், இதேவகையில் அமைந்த அறிக்கைகளையே வெளியிட்டன. அவை மொத்தத்தில், இலங்கையைத் தொடர்ந்தும் பேரவையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கக் கோரின. ஆனால், அதற்கு மேல், வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளின் அறிக்கைகளில், இரண்டு முக்கியமானவை. முதலாவது, இலங்கையின் தேசியரீதியில் அமைந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கு, ஐ.நா உதவ வேண்டும் என்று நெதர்லாந்து கோரியது.

இரண்டாவது, ஜேர்மனியின் அறிக்கையில், ‘கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆணையாளர் தனது அறிக்கையில், இதை சர்வதேச சட்டவரம்புக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார். இதை ஜேர்மனி நடைமுறைப்படுத்துகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு, ஜேர்மனியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மறுமுனையில், ஆசிய, ஆபிரிக்க நாடுகள், இலங்கைக்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தன. இதில் சீனாவும் ஜப்பானும் முக்கியமானவை. அதேபோல, ரஷ்யாவும் முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.பாகிஸ்தான் தனது அறிக்கையில், ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பான விடயத்தைத் தவிர்த்தமையும் நோக்கற்பாலது.

இந்தியா, தனது அறிக்கையில், இரண்டு அடிப்படைகளில் இலங்கையை ஆதரிக்கிறது. முதலாவது, இலங்கையின் ஒற்றுமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்; இரண்டாவது, இலங்கைத் தமிழரது சமத்துவமும் நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைக்கான அபிலாஷைக்கு உதவுவது.

அவ்வகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா கோரியது. அது, தனது அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுக்கான நீதி பற்றியோ, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை பற்றியோ பேசமால் கவனமாகத் தவிர்த்தது. இந்தியாவின் அறிக்கையானது, இலங்கைக்கு முழுமையான ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்ற நிலையையே காட்டுகிறது. ஒருவகையில் இலங்கைக்கு ஆதரவு; ஆனால், இலங்கை 13ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியே ஓங்கி ஒலித்தது.

இதேவேளை, இந்திய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், “இந்தியா, இலங்கையைக் கைவிடாது” எனத் தெரிவித்ததோடு, ஜெனீவாவில் செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவால் இலங்கையைக் கைவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையாக, இதை எதிர்பார்ப்பதாகவும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் காலங்கடந்தவொன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. முதலாவது, இலங்கை, இந்தியாவுக்குத் தரமறுத்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, மேற்கு முனையத்தை வழங்கும் முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது. இது செவ்வாய்கிழமை (02) அமைச்சரவை அறிவிப்புகளில் வெளியானது.

இதேவேளை, அமைச்சரவைக் குறிப்புகளில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் இந்திய நிறுவனமாக, ‘அதானி’ குழுமத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிசெய்துள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தவறானது என, இந்தியாவிலிருந்து வெளியாகும் The Wire இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, அவசரகதியில் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியதையிட்டு, உள்ளூரில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, சத்தமில்லாமல் இன்னொரு நிகழ்வும் செவ்வாய்கிழமை (02) நடந்தது. அது, ‘இலங்கை-இந்தியா-மாலைதீவு ஆகியவற்றை இணைத்த கரையோரப் பாதுகாப்புக் கூட்டுழைப்புக்கான செயலகம்’ (A Secretariat for Trilateral National Security Advisers (NSA) on Maritime Security Cooperation) கடற்படைத்தலைமையகத்தில் தொடக்கப்பட்டது.இவ்வாறு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, கடந்த நவம்பர் மாதம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கோரியிருந்தார். இதை, இலங்கை தொடர்ச்சியாக இழுத்தடித்து வந்த நிலையில், திடீரென இது செயல்வடிவம் பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடந்தேறிய இரண்டு நிகழ்வுகளும் தற்செயலானவை அல்ல. நீண்டகாலத் திட்டமிடலின் விளைவானவையும் அல்ல. ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு, இலங்கை செய்துள்ள காரியங்கள். இந்தியா, தனது நலன்களைக் காக்க மீண்டுமொருமுறை ஈழத்தமிழர் உரிமை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, தனது தேவைகளை நிறைவேற்றியுள்ளது. ஈழத்தமிழரின் மீது அக்கறை கொள்கிற இந்தியாவுக்கு, அங்கிருந்து இடம்பெயர்ந்து நூற்றாண்டுகாலமாய் அல்லலுறும் மலையகத் தமிழ் மக்கள் தெரிவதில்லை; அவர்தம் இன்னல்கள் தெரிவதில்லை.

இதேபோலவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் Yousef Al Othaimeen, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் உயர்மட்டக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில், “முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உள்ள உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பின்னர், வர்த்தமானி அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, ஜெனீவாவில் ஆதரவைப் பெறுவதற்கான வேலைகளே நடக்கின்றன. மேற்குலக நாடுகளின் அறிக்கைகளும் இலங்கையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதேயன்றி, இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையோ நீதியோ தொடர்பானவையல்ல.

இது ஒருபுறமிருக்க, ஜெனீவா தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவும் புலம்பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களும், எதிரெதிர்த் திசைகளில் நின்றபடி, ஓரே குரலில் பேசுகிறார்கள். இக்குரல்கள் மக்களுக்கான குரல்கள் அல்ல; நீதிக்கான குரல்கள் அல்ல. அவை தமது நலன்சார், குறுந்தேசியவாத நலன்சார் குரல்கள்; அவர்களது இருப்புக்கான குரல்களாகும்.

விடுதலைப் புலிகளின் கொடிகளுடனும் படங்களுடனும் நடக்கின்ற பேரணிகள், கோசங்கள், தொலைத்தழித்த காலத்தின் அந்தகாரத்தில் நிற்றுழலும் அபத்தங்களின் குரல்கள். இக்குரல்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளுடன் சமப்படுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கு உதவுகின்றன. இலங்கையில் நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்து மடைமாற்றுகின்றன. முன்சொன்னதுபோல, சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசியமும் எதிரெதிர்த் திசையில் நின்று, ஒன்றையே செய்கின்றன.

இலங்கையின் இன்றைய உடனடியான பிரச்சினை ஜனநாயகம் பற்றியது; நீதி பற்றியது; அடிப்படை உரிமைகள் பற்றியது. இவை, இலங்கையர் அனைவருக்கும் பொதுவானவை. அதைத் தக்கவைப்பதே, இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரதான சவால்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எட்டப்பட்டுள்ள தீர்வு, இன்று எவ்வாறு சிறுபான்மையினரை எதிர்த்திசைகளில் ‘கொம்புசீவி’ விடுகிறது என்பதை, நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நடப்பவை எதுவும், மக்கள் நல நோக்கிலானவை அல்ல.

இந்தியாவையோ வேறெவரையோ நம்பியிருப்பதன் ஆபத்துகளை, இவ்வார நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நிரூபணப்படுத்தியுள்ளன. ஆனால், வரைபில் திருத்தம் வரும்; அதில் வெற்றி வரும்; எமக்கு விடிவு வரும் என்ற கதைகள் இன்னமும் எம்மத்தியில் உலாவுகின்றன. அதை அழுத்தமாக நம்புகிறவர்களும் நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் அதிசயப்பட எதுவுமில்லை. ‘தீபாவளிக்குத் தீர்வுவரும்’ என்பதை நம்பியவர்கள் தானே நாங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிரளவைக்கும் வெறித்தனமான அழகு படைத்த உலகின் அழகான கிராமங்கள்!! (வீடியோ)
Next post எப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல் !! (கட்டுரை)