இடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை!! (மகளிர் பக்கம்)
ஒரு பெரிய வளையம். நம் இடுப்பு அசையும் திசைக்கு ஏற்ப இந்த வளையம் சுழழும். ஹூலா ஹூப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இது விளையாட்டு மட்டுமல்ல… பெண்கள் தங்களின் இடுப்புப் பகுதியை அழகாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு உடற்பயிற்சியும் கூட. இந்த விளையாட்டில் கின்னஸ் சாதனை செய்துள்ளனர் சென்னையை சேர்ந்த ‘சென்னை ஹூலா ஹூப்பர்ஸ் நிறுவனத்தில்’ பயிற்சி பெற்று வரும் குழந்தைகள். இந்த நிறுவனத்தின் பயிற்சியாளர் மற்றும் இயக்குனரான விஜயலட்சுமி சரவணன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
‘‘எங்க பயற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்ட ஏழு குழந்தைகள் இந்த விளையாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்ற குழந்தைகள் யுனிவர்கள் சாதனையாளர்கள் புத்தகம், ஃபூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் போன்ற சாதனைகளை வென்று அடுத்ததாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தயாராகி வருகின்றனர்’’ என்ற விஜயலட்சுமி சரவணன், பத்து வருடங்களாக ஹூலா ஹூப்பர் பயிற்சி வழங்கி வருகிறார்.
பெங்களூரில் வசித்துவந்த இவர், இப்போது ஐந்து வருடங்களாக சென்னைக்கு குடிபெயர்ந்து, சென்னை ஹூலா ஹூப்பர்ஸ் என்ற பயிற்சி நிறுவனத்தை புரசைவாக்கத்தில் இயக்கி வருகிறார். குழந்தைகளுக்கு படிப்பை தாண்டிய விளையாட்டுகளும், உடற்பயிற்சியும் அவசியம் வேண்டும் எனக் கூறும் இவர், “பல பெற்றோர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், குழந்தைகள் உடற்பயிற்சியே இல்லாமல் வீடியோ கேம்கள் மட்டுமே விளையாடிவருகின்றனர். இது அவர்களது உடலை மட்டும் இல்லாமல் உள்ளத்தையும் சோர்வடையச் செய்யும்.
என் மாணவர்கள் சிலர், முதலில் இடுப்பைச் சுற்றவே சிரமப்பட்டனர். விரைவிலேயே சோர்வடைந்தும் போனார்கள். ஆனால் தொடர்ந்து இந்த விளையாட்டில் ஈடுபட்டால், உடலின் சமநிலை அதிகரித்து, இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சில நாட்கள் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால், தினமும் வீட்டிலேயே ஹூலா ஹூப் பயிற்சியை செய்துகொள்ளலாம்” என்கிறார். விஜயலட்சுமி பள்ளியில் படித்தபோது கற்றுக்கொண்ட ஹூலா ஹூப் விளையாட்டு, தன் மகன் தருண், பள்ளி நிகழ்ச்சியில் உதவியுள்ளது.
“என் மகன் பள்ளியில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக, அவனுக்கு ஹூலா ஹூப் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தேன். மேடையில் அவனது நிகழ்ச்சியைப் பார்த்து வியந்து போன பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கும் ஹூலா ஹூப் கற்றுக்கொடுக்குமாறு கேட்டனர். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த பயிற்சி
பள்ளி” ஒரு நிமிடத்தில் அதிக முறை கழுத்தில், காலில் என ஹூலா ஹுப்பை சுற்றி இந்த குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். இவரின் மகன், 16 வயதினருக்கான பிரிவில் கலந்துகொண்டு ஒரே கையில் ரூபிக்ஸ் க்யூபை அதிக முறை விளையாடிக்கொண்டே ஹூலா ஹூப்பிங் செய்தும், அதிக நேரம் ஸ்கேட்டிங் செய்துகொண்டே மூன்று ஹூலா ஹூப்களை சுழற்றியும் சாதனை படைத்துள்ளார்.
பதினொறு வயதாகும் இவரின் மகள் ஜனனி, முழங்கையில், அதிக முறை ஹூலா ஹூப் சுழற்றி கின்னஸ் சாதனையில் வென்றுள்ளார். இவர்களுடன் பயிற்சி பெற்ற மற்றவர்களான குரு பிரசாத் (9 வயது) ஒரு நிமிடத்தில் அதிக முறை ஹூலா ஹூப்பை கழுத்தை சுழற்றியும், தனருத் (10 வயது) ஒரு நிமிடத்தில் அதிக முறை முழங்கையில் சுழற்றியும், கன்ஷிகா (10) படுத்தபடியே முப்பது நிமிடங்களுக்குள் அதிக முறை சுழற்றியும் சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாணவி ஹாசினி (வயது 7) ஒரு நிமிடத்தில் பல வாகனங்களின் லோகோக்களை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். தொடர்ந்து ஹூலா ஹூப் செய்தபடியே ரூபிக்ஸ் க்யூப் செய்து கின்னஸ் சாதனை படைக்கவும் உள்ளார்.
‘‘குழந்தைகளைச் சிறு வயதிலேயே சாதனைகள் புரிய வாய்ப்பளிக்கும்போது, அவர்களது தன்நம்பிக்கையுடன் கற்றல் திறனும் அதிகரிக்கும்’’ என்று கூறும் விஜயலட்சுமி, ஜிம்மிற்கு செல்லாமலே, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்காமலே வெறும் ஹூலா ஹூப்பைக் கொண்டு முழுமையான உடற்பயிற்சி செய்து, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியும்” என்கிறார்.
Average Rating