சிறுநீரகப் பரிசோதனை!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 33 Second

நம் உடலில் அதிகம் உழைக்கும் உறுப்பு என்ற பெருமையும்,80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருந்தாலும் நம்மை சிரமப்படுத்தாமல் சமாளித்துக் கொள்ளும் ஆற்றலும் சிறுநீரகங்களுக்கு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சிறுநீரகங்களில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன, எப்படி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பது பற்றி சிறுநீரக சிறப்பு மருத்துவரான தியாகராஜன் விளக்குகிறார்…

பரிசோதனை யாருக்கு அவசியம்?

சிறுநீரகக் கோளாறு இவருக்குத்தான் வரும் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வயதாக ஆக சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும். குறிப்பாக, 60 வயதுக்கு மேல் சிறுநீரகங்களின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். அதேபோல நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அதனால், இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். குறிப்பாக, நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய சிறுநீரக பாதிப்பை மட்டும்தான் முன்னரே தடுக்க முடியும். அதனால், நீரிழிவு நோயாளிகள் பரிசோதனையை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. பரம்பரை ரீதியான காரணங்களாலும் சிறுநீரகப் பிரச்னைகள் வரலாம் என்பதால், வீட்டில் யாருக்காவது சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால், மற்றவர்கள் பரிசோதனை செய்வதும் நல்லது.

கண்டுபிடிப்பது சுலபமே!

மற்ற பரிசோதனைகளைப் போல கடினமானதாகவோ, அதிகம் செலவுடையதாகவோ சிறுநீரக பரிசோதனை இருக்காது. சாதாரண சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனையின் மூலமே சிறுநீரகச் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம். வழக்கமாக சிறுநீரில் கழிவுகள் மட்டுமே வெளியேற வேண்டும். மாறாக, ரத்தத்தில் இருக்கும் அல்புமின் என்ற புரதம் வெளியேறினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

கழிவுகளை வடிகட்டும் வேலையை சிறுநீரகத்துக்குள் இருக்கும் நெப்ரான் என்ற வடிகட்டிகள் செய்து வருகின்றன. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என்ற விகிதத்தில் 20 லட்சம் நெப்ரான்கள் நம் சிறுநீரகங்களில் அமைந்திருக்கும். நெப்ரான்கள் கழிவுகளை சரியாக வடிகட்டாவிட்டால் ஏற்படும் சிறுநீரகப் பிரச்னையை ரத்தப்பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்துவார்கள். சிறுநீரகத்தில் கல், அடைப்பு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம். ஒரு சிறுநீரகம் சராசரியாக 150 கிராம் எடையும், 12 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த அளவு குறைந்தாலும் சிறுநீரகத்தில் ஏதோ பிரச்னை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

சில அறிகுறிகள்

சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் மற்ற நோய்களைப்போல வெளிப்படையாகத் தெரியாது. இதனால்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகளை முன்னரே கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால், சின்னச் சின்ன உடல் மாற்றங்களையும் பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் இருந்தால் சிறுநீரகக் கோளாறுகளை ஓரளவு தவிர்க்க முடியும். சிறுநீரில் அல்புமின் புரதம் அதிகமாக வெளியேறினால் கால்வீக்கம், வயிறு வீக்கம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகளையும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். முக்கியமாக, ரத்த அழுத்தம் உள்ளவர்களும் நீரிழிவு உள்ளவர்களும்தான் சிறுநீரகக் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், இவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிகிச்சைகள்

சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் தானாகவே கரைந்துவிடும் வாய்ப்பு கொண்டது. ஆனால், சிறுநீரகத்தின் பணி 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடும். இந்த நிலைமையை முன்னரே சமாளிக்க உணவு முறையில் மாற்றம், மருந்துகள் போன்றவற்றின் மூலம் மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். பலன் தராத பட்சத்தில் டயாலிசிஸ் முறையின் மூலம் செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டியிருக்கும். டயாலிசிஸ் ஒரு தற்காலிக நிவாரணம்தான் என்பதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துதான் சிறுநீரகக் கோளாறுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க!! (மருத்துவம்)
Next post கலைக்காகவே வாழ்கிறேன்! (மகளிர் பக்கம்)