கல்லீரல் சுருக்கமும் பாதிப்பும்!! (மருத்துவம்)
கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய் இது பல வருடங்களாக மது அருந்துதலால் ஏற்படக்கூடிய நோய்.
கல்லீரலின் வேலைகள்:
நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களாக அனுப்பிவைக்கப்படுகிறது. உடலுக்கு அவசியம் தேவையான சில வகைப் புரதச்சத்துக்களும் கல்லீரலில் உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகப் பெரிய பொறுப்பும் கல்லீரலுக்கு உள்ளது.
ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி வைரஸ்:
உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் பரவக்கூடியது ஹெபடைட்டிஸ் ஏ. இந்த வைரஸால் மஞ்சள் காமாலை வரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், சில மாதங்களிலேயே சரி செய்ய முடியும். ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரைலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது.
ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படும். இதற்குத் தடுப்பூசி கிடையாது. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. சமீபத்தில் இதற்கு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்த முடியும்.
ஆல்கஹால் ஆபத்து:
ஆல்கஹாலை கல்லீரல் ‘ஆல்கஹால் டீஹைட்ரோகீனஸ்’ (Alchohol dehydrogenase) என்ற என்சைம் மூலமாகச் செரிமானம் செய்கிறது. அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியும். அந்த நேரத்தில் கல்லீரலின் செயல்திறன் முற்றிலுமாக இழந்து, இவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்வதால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். உலக அளவில் கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைபவர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், மது அதிகம் அருந்துபவர்களே என்பது முக்கியமான செய்தி.
கொழுப்புக் கல்லீரல் நோய்:
ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்கூட, சில சமயங்களில் அதிகக் கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து (Fatty liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 – 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.
ஆல்கஹால் ஹெபடைட்டிஸ்:
வெகு சிலருக்கு அதிகமாக மது அருந்துவதால், ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் முற்றினால், மூன்றே மாதங்களில் மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தினமும் மது அருந்துபவர்களுக்கு, வயது வித்தியாசமின்றி திடீரென இந்த நோய் தாக்கும்.
கல்லீரல் சுருக்கம் தடுக்க டிப்ஸ்
மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை.
சிலர் வாரத்துக்கு ஒரு முறைதானே மது அருந்துகிறோம் என்று, அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இதுவும் தவறு.
மற்ற உறுப்புகளுக்கு இல்லாத சிறப்பு, கல்லீரலுக்கு உள்ளது. அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது. கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது. எனவே, மது அருந்துபவர்கள், கல்லீரல் பாதிப்பு அடைந்திருக்கிறதா என, முன்கூட்டியே கண்டறிந்து, மதுவைத் தவிர்த்தால், கல்லீரலைப் பாதுகாக்க முடியும்.
கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test), ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை மூலம், கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும். கல்லீரல் சுருக்கம் நோய்க்கு முந்தைய நிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில்தான், உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிறு வலி போன்றவை ஏற்படும். ஃபைப்ரோசிஸ் நிலையை அறிய, கல்லீரல் பயாப்சி எடுப்பதற்குப் பதிலாக தற்போது ஃபைப்ரோஸ்கேன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும்.
மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்வதும் கல்லீரலைப் பாதிக்கும். இதையும் தவிர்க்க வேண்டும்.
Average Rating