ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல உறுப்புகளையும் மாற்றலாம்! (மருத்துவம்)
தமிழகத்தின் டாப்மோஸ்ட் பிரபலங்களின் சிறுநீரக சிறப்பு மருத்துவர். ஆனால், அதற்கான எந்த பெருமையையும் அவரிடம் தேடினாலும் கிடைக்காது. ‘சீக்கிரமாக வந்துவிட்டு, தாமதமாக செல்பவர்’ என்று சக மருத்துவர்களால் பாராட்டப்படும் அளவு தொழிலில் ஈடுபாடு கொண்டவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் இவரது மனைவி என்பது ஸ்பெஷல் தகவல்.
சிறுநீரகத் துறையில் இப்போது நவீன சிகிச்சைகள் என்னென்ன வந்திருக்கின்றன என்பது பற்றியும், தன்னிடம் சிகிச்சை பெற்றவர்களில் மறக்க முடியாத ஒருவர் பற்றியும் இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
‘‘சிறுநீரகம் முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மாற்று சிறுநீரகம் பொருத்துவதுதான் தீர்வாக இருக்கிறது. இதற்குப் பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் சிறுநீரகத்தை மாற்றாமலேயே சரி செய்ய முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதாவது, பழைய பழுதடைந்த செல்களை மட்டும் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய ஆரோக்கியமான செல்களை வைத்து சரி செய்ய முயற்சித்து வருகிறார்கள். இதயம், நரம்பு மண்டலங்கள் போன்ற மற்ற உறுப்புகளில் ஸ்டெம் செல் சிகிச்சை நடந்துகொண்டிருந்தாலும், சிறுநீரகத்தில் இப்போது தான் வேகம் பெறுகிறது.
சிறுநீரகம் செயல் இழந்தால் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஒரு செலவு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலின் தாங்கும்
சக்திக்காக வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய செலவு என இரண்டு பெரிய செலவுகள் இருக்கின்றன. ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலம் இவற்றைத் தவிர்க்க முடியுமா என்றும் ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சைக்காகவே தனி பல்கலைக்கழகம் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே சிறுநீரகத்துக்கான முதல் பல்கலைக்கழகம் இது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மாற்று சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை என்பதை திசு வளர்ப்பு முறையின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். உறுப்பு தானத்தில் பற்றாக்குறை என்பது எல்லாத் துறைகளிலுமே இருக்கிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக திசு வளர்ப்பு (Tissue culture) முறையின் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இதன்மூலம் ஆய்வகத்திலேயே உறுப்புகளை உருவாக்க முடியும்.
எதிர்காலத்தில் Bioartificial kidney என்கிற இந்த முறையின் மூலம் வாகனங்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல சிறுநீரகத்தையே மாற்றிக்கொள்ள முடியும். இது எல்லா உறுப்புகளுக்குமே பொருந்தும். சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குப் பதிலாக, Wearable Artificial Kidney (WAK) என்கிற செயற்கை சிறுநீரகம் இருக்கிறது. செல்போனை பெல்ட்டில் மாட்டி வைத்துக் கொள்வதைப்போல, இடுப்பில் இந்த WAK சிறுநீரகத்தை மாட்டிக் கொள்ளலாம்.
இதோடு,சிம்பன்சி குரங்கிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மனிதனுக்குப் பயன்படுத்த முடியுமா என்று Genometransplantation என்ற ஆய்வு நடந்து வருகிறது. Home haemodialysis சிகிச்சை முறை இப்போது பரவலாகி வருகிறது. இதன் மூலம் இன்சுலின் ஊசியைத் தானே போட்டுக் கொள்வதைப் போல, வீட்டிலேயே டயாலிசிஸ் எந்திரத்தை வைத்துக்கொண்டு டயாலிசிஸ் செய்துகொள்ளலாம். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு அலைவதைத் தவிர்க்க முடியும்.
தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறட்சி, சிறுநீரகக் கல்லை உருவாக்குகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த Dehydration நாளடைவில் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் காரணமாகிறது என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் காரணம் தெரியாத 15 சதவிகித சிறுநீரகச் செயல் இழப்புகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையே காரணம். எனவே, இந்த Dehydration nephropathy வராமல் தவிர்க்க போதுமான தண்ணீர் அருந்துங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
பாஸ்பேட் உரங்களால் காட்மியம் என்ற கன உலோகம் உணவின் வழியாக வந்து சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகிறது என்றும், புகை தொடர்பான பிரச்னைகளால் சுவாசக் கோளாறுகள் உண்டாவதுடன், ஹைட்ரோ கார்பன் நெப்ரோபதி என்கிற சிறுநீரகச் செயல் இழப்பில் கொண்டு போய் விடுவதாகவும் கூறியிருக்கிறார்கள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு பெண்ணுக்கு நான்கு முறை கரு உருவாகி கலைந்துவிட்டது. குழந்தையின்மை காரணமாக அவர்களது வீட்டிலும் இதனால் பல பிரச்னைகள் உண்டாகி இருக்கிறது.
கரு கலைவதற்கு என்ன காரணம் என்று பரிசோதித்த போது அந்தப் பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தமும், சிறுநீரகம் வழியாக புரத இழப்பு ஏற்படுவதும் தெரிந்தது. இதைத் தடுக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும், சிகிச்சையும் அவசியம் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், மருத்துவமனையிலேயே 7 மாதங்கள் In Patient ஆக அட்மிட் செய்து சிகிச்சை அளித்தேன்.
அதிகபட்சமாக ஒரு நோயாளியை 3 மாதங்களுக்கு மேல் உள்நோயாளியாக வைக்க முடியாது. ஆனால், என்னுடைய முடிவு சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வைத்த மருத்துவமனை நிர்வாகம், போதுமான சுதந்திரம் கொடுத்தது. என்னுடைய சக மருத்துவர்கள், செவிலியர்களின் சிகிச்சைக்குப் பலனாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண்மணி. அந்தக் குடும்பமே நெகிழ்ந்துபோனது. எங்களுக்கும் பெரிய மனநிறைவு ஏற்பட்டது.
இதைவிட நெகிழ்ச்சியான விஷயம், 2011ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவருடன் சிங்கப்பூர் சென்றிருந்தேன். இந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்ததைக் கேள்விப்பட்டு ஓர் இளைஞன் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்திருந்தான். ‘தஞ்சாவூர்ல நீங்க காப்பாத்துன அந்த பையன் நான்தான் சார். இங்கே ஒரு ஹோட்டல்ல ரிசப்ஷன்ல வேலை பார்க்கறேன். உங்க ஞாபகமா சௌந்தர்ராஜன்னே எனக்கு பேர் வைச்சிருக்காங்க’ என்றான். இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேணும்!’’
Average Rating