காலம் கடந்த நல்ல முடிவு !! (கட்டுரை)
நீண்டதோர் இழுபறிக்குப் பிறகு, ஜனாஸா விவகாரத்தில் நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்படும் உடல்களைத் தகனம் செய்ய மட்டுமே முடியும் என்ற நடைமுறை, கடந்த 11 மாதங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்கள், அழுத்தங்களால்அரசாங்கம், தனது பிடிவாதத்தில் இருந்து ஒருபடி இறங்கி வந்திருக்கின்றது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியால், பெப்ரவரி 25ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2216/38ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம், மேற்படி உடல்களைப் புதைக்கவும் முடியும் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகையில், இது ‘காலம் கடந்த ஞானம்’ என்றாலும், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது மிகவும் சிறப்பானதாகும்.
இலங்கையில் வாழ்கின்ற ஏனைய மக்களுக்கு, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து வாழ்வது மட்டுமே பிரச்சினையாக இருந்தது.ஆனால், முஸ்லிம்கள் இதற்கு மேலதிகமாக ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அடிப்படை உரிமைசார் பிரச்சினைக்கும் முகம் கொடுத்தனர்.
இன்று அதற்கு சுமுகமாக ஒரு தீர்வு கிடைத்திருக்கின்றது. எல்லா முஸ்லிம்களும் தமது மரணக் கிரியைகள் பற்றிய நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு இது காரணமாகியுள்ளது. அதுமட்டுமன்றி, நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில், நல்லடக்கம் செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கிடக்கும் கணிசமான ஜனாஸாக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இது ஓர் ஆறுதலான செய்தி என்பதை மறுக்க முடியாது.
எனவே, காலத்தை இழுத்தடித்து விட்டேனும், இவ்வாறான ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டமைக்காக அரசாங்கத்தை முஸ்லிம்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். ஆயினும், இலங்கை அரசியலமைப்பால் உறுதிசெய்யப்பட்ட ஓர் உரிமையைப் பயன்படுத்துவதற்கான அனுமதியையே ஆட்சியாளர்கள் வழங்கியுள்ளார்களே தவிர, புதிதாக ஓர் உரிமைக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
முஸ்லிம்களின் இந்த முன்னெடுப்பில் கைகோர்த்த சிங்கள, தமிழ் மக்கள், முற்போக்கு அரசியல்வாதிகள், வெளிநாடுகள், மனித உரிமைசார் அமைப்புகள் நினைவில் கொள்ளத்தக்கவை.
மிக முக்கியமாக, கொரோனா வைரஸ் தாக்கியதால், உயிரிழப்போரை நிலத்தில் புதைத்தால், நிலத்துக்குக் கீழால் வைரஸ் பரவும் என்றொரு பொய்க் காரணம் கூறப்பட்டு, சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், முதலாவது நிபுணர் குழுவும் எரிக்க மட்டுமே என்ற முடிவை அறிவித்தது.
இந்தப் பின்புலத்தில், விஞ்ஞான பூர்வமான காரணங்களை, மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தைரியமாக முன்வைத்த, பேராசிரியை ஜெனிபர் பெரேரா தலைமையிலான இரண்டாவது நிபுணர் குழுவுக்கு, இலங்கையில் வாழ்கின்ற 20 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர்.
இனவாதம் என்னதான் செய்த போதும், அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினையை வைத்து அரசியல் செய்தபோதும், படித்தவர்கள், புத்திஜீவிகள், நியாயத்தின் பக்கம் நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும் என்பதற்கும், அதன்மூலம் இன ஐக்கியத்தை உருவாக்கலாம் என்பதற்கும் இந்த நிபுணர்கள் குழுவினரை, வரலாற்றில் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
உலக சுகாதார ஸ்தாபனம், ‘கொவிட்-19 நோயால் மரணிப்போரின் உடல்களைத் தகனம் செய்யவோ புதைக்கவோ முடியும்’ என்று, 2020 மார்ச் மாதத்திலேயே தெட்டத் தெளிவாக அறிவித்து விட்டது. இதை விஞ்சிய சுகாதார அமைப்பொன்றும் கிடையாது. எனவே, ஆரம்பத்திலேயே சுகாதார அமைச்சு, உடல்களைப் புதைப்பதற்கான அனுமதியையும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரம் அரசியலாக்கப்பட்டது.
பின்னர், சிங்கள சமூகத்திலிருந்தே ஜனாஸாக்களை அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டதால், சகோதர சிங்கள, தமிழ் மக்களுக்கும் தெளிவுபிறந்தது.
அப்போது, அரசாங்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒரு தரப்பினர், இவ்வுரியை வழங்கும் நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால், ஏற்கெனவே நிலத்தடியில் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என்று, அவர்களே கட்டமைத்த தோற்றப்பாட்டை தகர்த்தெறிய முடியவில்லை. அத்துடன் அரசாங்கத்துக்குள் பலமான இன்னுமொரு தரப்பினரும், பௌத்த துறவிகள் சிலரும் இதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டே இருந்தனர்.
சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் பாங்கில், இவ்விவகாரத்தையும் கையாள ஆட்சியாளர்கள் நினைத்திருக்கலாம். “நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில், கடைசி வரையும் தளராமல் இருந்தோம்” என்று சொல்லி, அடுத்த தேர்தலில் பிரசாரம் செய்ய, மனக்கணக்குப் போட்டிருக்கலாம். ஆனால், ஒரு கட்டத்தில் இதற்குமேல் இவ்விவகாரத்தை இழுத்தடிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.
‘ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவும் முடியும்’ என்ற அறிவிப்பை, சுகாதார அமைச்சு வெளியிடுவதற்குப் பல பின்புலக் காரணங்கள் இருக்கின்றன.அந்தவரிசையில், ஒரு சமூகத்தின் இறுதிச் சடங்கில் கைவைப்பதில் உள்ளுறைந்துள்ள ஆபத்து, அத்துடன் உரிமைகளை மையமாக வைத்துத் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் ஆகிவற்றைக் குறிப்பிடலாம்.
இவை எல்லாவற்றையும் மிகைத்த உடனடிக் காரணம், சர்வதேச அழுத்தங்கள் ஆகும். இவற்றுள் ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு, சர்வதேச நாடுகளின் நோட்டம், முஸ்லிம் நாடுகள் ஒன்றியத்தின் காட்டம், இம்ரான் கானின் ராஜதந்திர ஆட்டம் ஆகியவை முக்கியமானவையாகத் தெரிகின்றன.
தமிழர்கள் முன்னரே, தமது பிரச்சினைகளை ஐ.நாவுக்கு கொண்டு சென்று விட்டனர். கத்தோலிக்க பேராயர் ‘தமக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடப் போவதான’ அறிவிப்பை விடுத்துள்ளார். இத்தனை நடந்த பிறகும், இலங்கை முஸ்லிம் சமூகம் திட்டமிட்ட அடிப்படையில், தமது பிரச்சினையை ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளுக்குக் கொண்டு செல்லவில்லை.
ஆயினும், முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம் இவற்றையெல்லாம் தாண்டி சர்வதேச விவகாரமாகி விட்டது. இதற்குக் காரணம் அரசியல் இலாபங்களை எதிர்பார்த்து, அரசாங்கத்தைப் பிழையாக வழிநடத்தியவர்களே ஆகும்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில், இலங்கை அரசாங்கத்தின் மீதான பிடி இறுகத் தொடங்கியுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு பல அநியாயங்கள் நடந்த வேளையிலும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு அனுசரணை வழங்கின. இலங்கை முஸ்லிம் தலைவர்கள் அதற்கு தரகர் வேலை பார்த்தனர். இப்படியிருக்க, இம்முறை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலிந்து எரிக்கப்படுகின்றமையால் முஸ்லிம் நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியங்கள் குறைந்துள்ளன.
இம்முறை மெய்நிகர் (வேர்ச்சுவல்) அடிப்படையில் இணையவழி கூட்டத் தொடரே நடைபெறுவதால், வேறு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு தேடுவதும் இலங்கைக்கு சாத்தியமற்றுப் போயுள்ளது. அத்துடன், இரு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது என்ற தோற்றப்பாட்டை ஜனாஸா விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை எதிர்த்தாட வேண்டிய சூழ்நிலையில் இம்ரான் கானை புறந்தள்ள முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. எனவே, இச் சிறிய விவகாரத்தைத் தீர்த்து வைப்பதன் மூலம் பெரிய தலையிடியில் இருந்து விடுபடலாம் என்ற துலங்கல் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அந்தவகையில், மேற்படி வர்த்தமானி வெளியாவதற்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தமும் முஸ்லிம் நாடுகள் அமைப்பின் இரண்டாவது மிகப் பெரிய உறுப்புரிமை நாடான பாகிஸ்தான் பிரதமரின் விஜயமும் உடனடிக் காரணமாக அமைந்துள்ளன.
இருப்பினும், அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு தாமாகவே மாற்றிக் கொண்டுள்ளமையானது, ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதால் நிலத்தடியில் வைரஸ் பரவும் என்று சொல்லப்பட்ட நியாயங்கள் தவறானவை என்று, மறைமுகமாக ஒப்புக் கொண்டதைப் போன்றதாகவும் அமைகின்றது.
அப்படிப் பார்த்தால், இதுவரை கொரோனாவால் மரணித்து, வலுக்கட்டாயமாக எரியூட்டப்பட்ட 20 நாள் பாலகன் உள்ளடங்கலாக, 250 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை, கண்ணீரோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.
இதையெல்லாம் தாண்டி, அரசாங்கம் எதிர்பார்த்தபடி அரசாங்கத்தின் மீதான மனித உரிமைசார் அழுத்தங்களும் குறைவடைய இது காரணமாகும். இது இராஜதந்திர, அரசியல் அனுகூலங்கள் கிடைப்பதற்கு காரணமாகலாம்.
ஆனால், இந்த பத்தி எழுதி முடிக்கப்படும் வரை, ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்படவில்லை என்பதால், பிரேத அறைகளில் உள்ள ஜனாஸாக்களை விடுவிப்பதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வர்த்தமானியை வெளியிட்டதுடன் நின்றுவிடாது, உடனடியாக வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையையும் சுகாதார அமைச்சு வெளியிட வேண்டும். ஏற்கெனவே, தாமதமாகிவிட்ட ஒரு நல்ல காரியத்தை, இனியும் இழுத்தடிக்கக் கூடாது.
Average Rating