ஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’!! (கட்டுரை)
பொத ஜன பெரமுனக்குள் பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. காடும் சிங்கள பௌத்த வாதத்தை பின்பற்றும் அமைப்புக்கள் உட்பட இடதுசாரிகள் என தம்மை தற்போதும் எண்ணிக்கொள்ளும் சிறிய அமைப்புகளும் அங்கே உள்ளன. ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தின் மொத்த ஆதிக்கமும் அங்கே முழுமையாக உள்ளது. எனவே மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கு இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்தது என்பது சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் யதார்த்த நிலையாகும்.
தற்போது கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆன பின்பு கோத்தபாய ராஜபக்சவை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக மேலோங்கி வருகின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான விடயத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் முக்கியமான பௌத்த தலைவருடன் இணைந்து இரட்டைப் பிரஜாவுரிமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி தமது அதிருப்தியை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வந்தனர். இது பொதுஜன பெரமுனயின் முக்கிய ஒழுங்கு அமைப்பாளரான பசில் ராஜபக்சவை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட காய் நகர்த்தலாகும். அரசியலமைப்பின் 20ஆவது திருத்த இறுதிநேர சூழலில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது . இறுதியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசியல் யாப்பு வரைபில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் அமைதி அடைந்தனர்.
மீண்டும் பொதுஜன பெரமுன தலைவராக கோத்தபய ராஜபக்சே வர வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த விடயம் பொதுஜன பெரமுனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விமல் வீரவன்ச மன்னிப்பு கோரவேண்டும் என்ற நிலைக்கு எதிர்ப்புகள் மேல் வந்தன. மேலும் அபயராம விகாராதிபதி தலைமையில் விமல் வீரவன்சவுக்கு ஆதரவாகவும் குரல்கள் மேல் வந்தன. இவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொரனோவால் மரணமடையும் இஸ்லாமிய மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் வழங்கிய உத்தரவாதம் அடுத்த நாளே அங்கனம் செயற்பட முடியாதென ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே பகிரங்கமாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். நாட்டின் பிரதமரின் யோசனையை ராஜாங்க அமைச்சர் நிராகரிக்கும் நிலை உருவாகி இருந்தது.
மேலும் செராமிக் இ டைல்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த கட்டுப்பாட்டை பிரதமர் நீக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவரின் அறிவித்தலை தடுக்கும் விதத்தில் சுங்கப்பகுதி பணிப்பாளர் மீண்டும் தடை உத்தரவை அமுலுக்கு கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் விமல் வீரவன்ஸவே பின்னணியாக இருந்துள்ளதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர்களான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, டியூ குணசேகர போன்ற தலைவர்கள் அபயராம விகாரையில் தனியான சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். ஏன் கூடினர் எவற்றை விவாதித்தனர் என்பது தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தனர்.
மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் குழப்பத்தில் பயணிக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வேட்பாளர்கள்,தேசியப் பட்டியல் நியமனம்,அமைச்சரவையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பாக அவர்கள் திருப்தியற்ற நிலையில் இருக்கும் சூழ்நிலையில் ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளி வந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முகாமில் பெரிய அளவில் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது.
இவையாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி இவை தொடர்பாக எதுவித கருத்துகளையும் வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்றார். விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்பு அணியினர் ஜனாதிபதி அவர்களின் குரலாக உள்ளனரா என்ற நிலையும் காணப்படுகிறது. விமல் வீரவன்ஸவை பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக ஊடகங்களில் வர்ணனைகள் வெளிவந்துள்ளன.
எனவே விமல் வீரவன்ச -பஸில் ராஜபக்ஷ அணியினர் மோதல்கள் தொடர்கின்ற நிலையில் வரவிருக்கும் தேர்தல்களில் இதன் தாக்கம் பெரிய அளவில் வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. பொதுவாகவே மஹிந்த ராஜபக்ச காலம் முழுவதும் இத்தகைய நாடகங்கள் காலத்துக்குக் காலம் மேடையேற்றப்படுவதும்,பின்னர் அந்த நாடகங்கள் சுவடே தெரியாமல் மறைவதும் வழமையான இது தொடர்பாக விமர்சனங்களையும் முன்வைப்பவர்கள் உள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்கள் வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் தவிக்கும் நிலையில் மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை திசை திருப்புவதற்காக இத்தகைய முன்னெடுப்புகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக கணிப்புக்களும் மேல் வந்துள்ளன. பொது ஜன பெரமுன க்கும் விமல் வீரவன்சவுக்கும் இடையே தோன்றியுள்ள முறுகல் நிலை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் டில்வின் சில்வாவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது டில்வின் சில்வா நாயும் உண்ணியும் என்றவாறு நாய்யாக பொதுஜன பெருமுனையையும் உண்ணியாக விமல் வீரவன்சவையும் விழித்திருந்தார். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என கூறியதுடன் அசுத்தங்களை கொண்டு செல்லும் இரண்டு வாகனங்கள் மோதினால் வெளியே நாற்றங்களே வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
இன்றுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவுடனான எம்சிசி உடன்படிக்கை இந்தியாவுடனான கிழக்கு முனையம் தொடர்பான சர்ச்சை என்பவற்றுக்கு அப்பால் பொது ஜன பெரமுன மூலம் ஒரு நாடு ஒரு சட்டம் மற்றும் நீதித்துறை செயற்பாட்டில் தேவையற்ற சட்டங்களை நீக்கி உகந்த சட்டங்களை உருவாக்குதல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் பொதுஜன பெரிய பதவிக்கு கொண்டு வந்தவர்கள் . அவை நடைபெறாமல் வேறு திசையில் நாடு போய்க் கொண்டிருப்பதால் அதனால் விரக்திஅடைந்தவர்களும் அம்முகாமில் உள்ளனர். பொது ஜன பெரமுன பதவிக்கு வருவதற்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்தவர் கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் நம்பிக்கை இழந்தவராக இருந்ததுடன் இந்தப் பிரச்சனையில் தமக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நாட்டில் பிரதமரின் அதிகாரம் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ உத்தரவுகள் கேள்வி குறியாகி உள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் கடந்த பாராளுமன்றத்தில் சபாநாயகராகவும் இருந்த கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில் 20 ஆவது திருத்தத்தின் பலனாகவே இத்தகைய நிலை உருவாகி இருப்பதாகவும் நாட்டின் தலைவர் ஒருவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவித்தல் ஒன்றை அதாவது கொரனோவல் மரணமடையும் இஸ்லாமிய மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழங்கிய உத்தரவாதத்தை அத்தகைய உத்தரவாதத்தை சர்வதேசத் தலைவர்கள்இ அமைப்புகள் வரவேற்றிருக்கும் நிலையில் அந்த நிலையை பிரதமர் தக்க வைக்க முடியாத நிலை தோன்றியிருப்பது பெரிய அவமானமாகும் என தெரிவித்திருந்தார்.
எனவே புதிய ஆட்சியாளர்கள் பாரிய தடைகளைத் தாண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலில் பொதுஜன பெரமுன இருக்கும் குழப்பங்களுக்கும் முடிவு காண வேண்டும். கிழக்கு முனையம் தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளில் இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்இ ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் சந்திக்கப்போகும் சவால்கள் இ ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளால் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் இவற்றோடு இலங்கையில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த போராட்டச் செயற்பாடுகள் இ வேகம் பெற்று வரும் புதிய வகை கொரனோ தாக்கம் இவை யாவற்றுக்கும் ஆட்சியாளர் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் சகல மக்களையும் சமமாக மதித்து நாடு எதிர்நோக்கும் இந்த பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் போக்கில் இன்றும் கூட அரசாங்கம் தயார் இல்லாத நிலையே தொடர்கிறது. ஜனாதிபதியின் 73 ஆவது சுதந்திர தின செய்தியும் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை. சர்வதேசத்தையும் பகைத்துக்கொண்டு தேசிய இனங்களையும் ஒருங்கிணைக்காமல் பயணிக்கும் அரசாங்கத்தின் பயணம் எவ்வளவு தூரம் வெற்றி பெறும்?.
Average Rating