டயாலிசிஸ்!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 34 Second

அறிந்ததும் அறியாததும்

டயாலிசிஸ்… இன்றைய சூழலில் நம் அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தை. ரத்தத்தில் உள்ள கழிவுகளைச் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பாளனான சிறுநீரகங்கள் செயலிழந்து விட்ட பின், இயந்திரத்தின் மூலம் அப்பணியை மேற்கொள்வதுதான் டயாலிசிஸ். நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரையிலும் டயாலிசிஸ்தான் தற்காலிக தீர்வாக இருக்க முடியும்.

ஆயுள் முழுவதும் டயாலிசிஸ்?

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் செழியன் டயாலிசிஸின் செயல்முறை குறித்து விளக்குகிறார்… ‘‘உடலில் தங்கும் தண்ணீர், உப்பு அளவைக் கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினினை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன. உடலுக்குத் தேவையான ஹார்மோன்களின் உற்பத்தி யையும் சிறுநீரகங்களே மேற்கொள்கின்றன. பிறவியிலேயே வரும் வளர்ச்சிக்குறைவு, நோய்த்தொற்று, வாழ்வியல் பிரச்னைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், அதீத வலிநிவாரணி பயன்படுத்துதல் போன்ற பல காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு டயாலிசிஸ் செய்வது அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதே தீர்வு.

டயாலிசிஸில் ஹீமோ டயாலிசிஸ், பெரிட்டோனியல் டயாலிசிஸ் என இரு வகைகள் இருக்கின்றன. உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தத்தை உறிஞ்சி அதை டயாலிசிஸ் இயந்திரத்தினுள் செலுத்தி சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மற்றுமொரு ட்யூப் வழியாக உடலுக்குள் ஏற்றுவது ஹீமோ டயாலிசிஸ். சிறு அறுவைசிகிச்சை மூலம் வயிற்றில் ட்யூப் ஒன்றை நிரந்தரமாகப் பொருத்தி, அதனுள் டயாலிஸேட் என்கிற சுத்திகரிப்பு நீரைச் செலுத்தி நோயாளிகளே டயாலிசிஸ் செய்து கொள்வது பெரிட்டோனியல் டயாலிசிஸ். வாரத்துக்கு 3 முறை டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு முறை டயாலிசிஸ் செய்வதற்கும் 34 மணி நேரம் ஆகும். என்னதான் வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும் அதனால் சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் மேற்கொள்ள முடியும்.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு என்றாலும் கூட, சிறுநீரகம் கிடைக்கவில்லை யென்றாலும், மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏதுவான உடல் நிலை இல்லாதபோதும் டயாலிசிஸ் மட்டும்தான் வாய்ப்பாக இருக்க முடியும். ஆயுள் முழுவதும் டயாலிசிஸ் செய்தே நலமுடன் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். 95 சதவிகிதம் ஹீமோ டயாலிசிஸ்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஹீமோ டயாலிசிஸ் தொடங்கப்படும் முன் ரத்தக்குழாய்களை எல்லாம் AV Fistula எனும் சிறு அறுவைசிகிச்சை மூலம் இணைப்போம். அறுவைசிகிச்சை முடிந்து 6 வாரங்கள் கழித்து டயாலிசிஸ் மேற்கொள்ளத் தொடங்கிவிடலாம். உடனடி சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு கழுத்து வழியாக குழாய் மூலம் டயாலிசிஸ் மேற்கொள்ளலாம்.

இதில் வலி பெரிதாக இருக்காது. டயாலிசிஸ் தொடங்கிய புதிதில் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படலாம். நாளடைவில் சரியாகிவிடும். ஹீமோ டயாலிசிஸ் மேற்கொள்ளப் பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் ஃபில்டர் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் படியாக இருக்க வேண்டும். பல முறை பயன்படுத்தும் நிலையில் அவற்றுள் கிருமித்தொற்று ஏற்பட்டு ஹெபடைடிஸ் பி வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதனால் தரமான குழாய்கள் மற்றும் ஃபில்டரை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும். பெரிடோனியல் டயாலிசிஸில் டயாலிஸேட் நீரை வயிற்றில் செலுத்தி பெரிட்டோனியல் ஜவ்வு மூலம் ரத்தத்தைச் சுத்திகரித்து அதன் கழிவுகளை மீண்டும் அக்குழாய் வழியாகவே வெளியேற்றி விடலாம். அக்குழாயை முறையாகப் பராமரிப்பது அவசியம். இல்லையென்றால் கிருமித்தொற்று ஏற்பட்டு வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’’என்கிறார் நடராஜன் செழியன்.

நதி மாசும் அரசு அலட்சியமும் சேர்ந்து சிறுநீரகங்களை அழிக்கின்றன! உயர் நடுத்தர மற்றும் பணக்கார மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று டயாலிசிஸ் செய்து கொள்ளுமளவு பொருளாதார வலுவுடன் இருப்பார்கள். ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளைச் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அரசு மருத்துவமனைகளிலோ டயாலிசிஸ் மேற்கொள்வதில் போதிய கவனிப்பில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இது குறித்து மருத்துவரும் மருத்துவச் செயல்பாட்டாளருமான புகழேந்தி பேசுகிறார்… ‘‘சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை என்று சட்டம் சொல்கிறது. அந்த உரிமையை வழங்குவதில் பொறுப்பற்ற தன்மையுடன்தான் அரசு செயல்படுகிறது.

சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் என இரு வழிகள்தான் இருக்கின்றன. கிராம அளவில் சிறுநீரகச் செயலிழப்பு அதிகம் இல்லை. நகர்ப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகரித்திருக்கிறது. தாலுகா அளவிலான மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் மையங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இங்கோ, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட வசதி வாய்ப்புடன் கூடிய டயாலிசிஸ் மையங்கள் இல்லை. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பாலசுப்ரமணியம், தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அருகில் மற்றும் தொலைவில் உள்ள கிராமங்களில் நடத்திய ஆய்வில், அருகிலுள்ள கிராமங்களில் சிறுநீரகச் செயலிழப்பு அதிகம் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.

தாமிரபரணி தண்ணீர் மாசானதுதான் இதற்குக் காரணம் என்கிற தனது ஆய்வுக்கட்டுரையை ஜப்பான் ஜர்னல் ஆஃப் நெப்ராலஜியில் வெளியிட்டிருக்கிறார். தாமிர
பரணி மட்டுமல்ல… தமிழ்நாட்டில் உள்ள 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாகவும், அவற்றில் 5 நதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. ஏன் இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் அதிகம் சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல அந்தந்தப் பகுதிகளில் டயாலிசிஸ் மையங்கள் அமைக்க வேண்டும். மாவட்டந்தோறும் 3 5 டயாலிசிஸ் மையங்களை அமைக்கலாம்.

டயாலிசிஸ் மையங்களை அமைப்பது மட்டுமே போதாது… அந்த மையங்களையும், நோயாளிகளையும் Standard operating procedure படி பராமரிக்க வேண்டும். இன்றைக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பில்லாமல் மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் காரணமாகத்தான் நோயாளிகள் வேறு பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு முறை டயாலிசிஸ் செய்யும்போதும் புதிய குழாய்கள் மற்றும் ஃபில்டர் செட் பயன்படுத்த வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அது பின்பற்றப்படுவதில்லை. Standard operating procedure ஐ முறைப்படுத்த, மேற்பார்வையிட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை எதுவானாலும் நோயாளிகள் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலையில் தனது சிகிச்சை மறுக்கப்பட்டு விடுமோ என்கிற அச்ச உணர்வை நோயாளிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். டயாலிசிஸின் போது நோயாளிகளை மானிட்டர் செய்வதற்குக்கூட யாரும் இல்லாத அவல நிலைதான் நிலவுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நெப்ராலஜி யூனிட்டில் டயாலிசிஸ் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு இரண்டே நாட்களில் டயாலிசிஸ் மேற்கொண்ட 5 பேர் உயிரிழந்தனர். Distilled water எனும் தாது குறைவான தண்ணீரைத்தான் டயாலிசிஸ்க்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனால், அங்கு தாதுக்கள் அதிகம் உள்ள தரமற்ற நீர் பயன்படுத்தப்பட்டதால்தான் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன. மருத்துவத் துறையில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழல் காரணமாகத்தான் தரமற்ற பொருட்கள் வாங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதிய டயாலிசிஸ் மையங்கள் இல்லை… டயாலிசிஸ் மையங்களில் போதுமான கவனிப்பு இல்லை… லஞ்சம், ஊழல் காரணமாக தரமற்ற பொருட்கள் வாங்கப்படுவது என களையப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கின்றன’’ என்கிறார் புகழேந்தி. சிறுநீரகத்தைச் சிரமப்படுத்தக் கூடாது! சிறுநீரகச் செயலிழப்புக்கு சிறுநீரக மாற்று அல்லது டயாலிசிஸ்தான் தீர்வு என்கிறது அலோபதி. சித்த மருத்துவத்தில் வேறு ஏதேனும் தீர்வு இருக்கிறதா? சித்த மருத்துவர் கரிகாலன் கோபாலிடம் கேட்டோம்…

‘‘சித்த மருத்துவத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரக செயலிழப்பைப் படிப்படியாக குணப்படுத்த முடியும். அதே நேரம் சிறுநீரகத்துக்கு ஓய்வும் அவசியம் என்பதால் அதற்கு அதிக பணியைக் கொடுக்கக்கூடாது. உணவுப் பொருட்களில் உள்ள உப்பு மற்றும் எண்ணெய் பொருட்களைச் சுத்திகரிக்கும் வேலையை சிறுநீரகம் மேற்கொள்கிறது. சிகிச்சை காலத்தில் அதன் பணியைக் குறைக்கும் பொருட்டு எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரகப் பெருக்கிகள் எனப்படும் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தர்பூசணி என நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மசாலாக்கள் மற்றும் அஜினோமோட்டோ போன்ற உப்புகள் கடினமானவை என்பதால், நமது சிறுநீரகத்தால் செரிமானம் செய்ய முடியாமல் தேங்கி விடும். அதனைத் தவிர்த்தல் நல்லது. உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் ரசாயனங்களைத் தவிர்ப்பது அவசியம். மூக்கிரட்டைக்கீரை, மாவிளங்கப்பட்டை, பெரு நெருஞ்சில் ஆகியவை சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்தும் முக்கியமான மூலிகைகள். திருவண்ணாமலையில் ஒருவர் பெரு நெருஞ்சிலின் இலையை மட்டுமே சாப்பிட்டு வந்ததால் டயாலிசிஸ் செய்வதையே நிறுத்தி விட்டார். மணத்தக்காளி, நன்னாரி, காசினிக்கீரை, சீந்தில் கொடி, வெட்டிவேர், பப்பாளி, மஞ்சள் ஆகியவையும் சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்துவதற்கு பயன்படும்.

சாப்பிட்டு செரிமானம் ஆன பிறகு போதிய உறக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானதாகும். புற்றுநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் நிரந்தரமானது என்கிற கருத்து தவறானது. சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப கால கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால் மருந்தே அல்லாமல் நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவே அதனை சரி செய்து கொள்ள முடியும். யாமம் என்று சொல்லக்கூடிய அதிகாலை 46 மணிக்கு எழுந்து அப்போது வீசக்கூடிய அமுதக்காற்றில் பிராணாயாமம் செய்யும்போது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. செயல்படாமல் இருக்கும் உறுப்பை மீண்டும் செயல்பட வைக்கும் பணியை மருந்துகள் செய்யும் என்றாலும், அது பூரண குணமடையும் வரை அதற்கான வேலையைக் குறைப்பது அவசியமானது. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு பசியோடு இருக்கச் சொல்வது போலத்தான் இதுவும். மூளை, சிறுநீரகம், கல்லீரல், இதயம் இவை நான்கும் ராஜ உறுப்புகள். இதற்கு அதிக பணிச்சுமையைக் கொடுப்பதுதான் பிரச்னையே’’ என்கிறார் கரிகாலன் கோபால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post பித்தம் தலைக்கேறுமா? (மருத்துவம்)