கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை!! (கட்டுரை)
கழிவிலிருந்து மின் பிறப்பாக்கல் ஆலை கெரவலபிட்டிய பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மின்வலு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் இதர விருந்தினர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது.
அதிகரித்துச் செல்லும் திண்மக் கழிவு அகற்றல் தொடர்பான பிரச்சனை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சூழலுக்கு நட்பான மற்றும் நிலைபேறான பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு கொழும்பு மாநகர சபையினால் கேள்விமனுக் கோரப்பட்டிருந்த நிலையில், எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான த வெஸ்டர்ன் பவர் கம்பனி (பிரைவட்) லிமிடெட் இந்த விலை மனுக் கோரலை தன்வசப்படுத்தியிருந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை எயிட்கன் ஸ்பென்ஸ் முன்னெடுத்திருந்ததுடன், இதற்காக 15 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை பல ஆண்டு காலமாக கவனமாக திட்டமிட்டுள்ளது.
மேலும், 20 வருட காலப்பகுதிக்கு கொழும்பு மாநகர சபையுடன் கழிவு விநியோக (WSA) உடன்படிக்கையில் த வெஸ்டர்ன் பவர் கம்பனி கைச்சாத்திட்டதுடன், இலங்கை மின்சார சபையுடன் நியமப்படுத்தப்பட்ட வலுக் கொள்வனவு (SPPA) உடன்படிக்கையில் 2017ஆம் ஆண்டில் கைச்சாத்திட்டது. நவீன கழிவு சாம்பலாக்கல் ஆலையை வடிவமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் மாற்றம் செய்வதற்கு முன்னணி சீன பொறியியல் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றில் மேல் மாகாண சபை கைச்சாத்திட்டது. டென்மார்க்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் புகழ்பெற்ற பொறியியல் ஆலோசனை நிறுவனமான Ramboll AG, உரிமையாளரின் பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டம் தொடர்பில் தவிசாளர் ஹரி ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனம் எனும் வகையில், முதலீட்டுக்கு நாம் எப்போதும் முன்னேற்பாடான வழிமுறையை பின்பற்றுகின்றோம். நிலைபேறாண்மை, பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை வழிகாட்டல் எனும் கொள்கைகளின் பிரகாரம் வழிகாட்டப்படுவதுடன் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தியினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. பல ஆண்டு காமாக முறையான திட்டமிடல் மற்றும் கடுமையான பணி தற்போது பயனளித்துள்ளதைக் காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையர்களுக்கு தூய, புதுப்பிக்கப்பட்ட வலுவை பயன்படுத்தும் வாய்ப்பை இந்த மின் ஆலை வழங்குவதுடன், நகரின் அழகுமயமாக்கலுக்கு உதவியாக அமைந்திருக்கும். தூய, புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களுக்கான போக்கையும் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது கொழும்பு நகரில் நீண்ட காலமாக காணப்படும் பிரச்சனையாக அமைந்துள்ளது. கெரவலபிட்டிய கழிவிலிருந்து வலுப் பிறப்பிப்பு திட்டம் என்பது அந்தப் பிரச்சனையை தொடர்ச்சியாக தீர்ப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்ப நகரில் மாத்திரமன்றி, முழு இலங்கைக்கும் கழிவு முகாமைத்துவ திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாநகர சபை வழங்கியிருந்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் திட்டத்துக்கான நிதி உதவியை வழங்கியமைக்காக எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்த வலுச் சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
கழிவகற்றல் என்பது பாரதூரமான பிரச்சனையாக அமைந்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தில், தினசரி 3,500 மெட்ரிக் டொன்களுக்கு அதிகமான கழிவு உருவாக்கப்படுகின்றது. கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலையினூடாக, கொழும்பு மாநகர சபையினால் விநியோகிக்கப்படும் இந்தக் கழிவை சாம்பலாக்கும். தினசரி 600 – 800 டொன்கள் வரையான கழிவுகள் பதப்படுத்தப்படும் என்பதுடன், அதனூடாக பிறப்பிக்கப்படும் மின்சாரம் தேசிய மின் விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்படும். நிலைபேறாண்மை, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சூழல் வழிகாட்டல் எனும் எயிட்கன் ஸ்பென்ஸ் கொள்கைகளுக்கமைய, இந்த ஆலையில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்பதுடன், அதனூடாக தூய வலு பிறப்பிக்கப்படுவதுடன், சூழலுக்கு ஏற்படும் தாக்கம் பெருமளவில் குறைக்கப்படும். சாம்பலாக்கல் பகுதியில் எஞ்சும் சாம்பலைக் கொண்டு, நிர்மாணத்துறைக்கு அவசியமான தணல் தொகுதிகள் நிறுவுவதற்கு மீளப் பயன்படுத்தப்படும். இதன் போது வெளியேறும் வாயுவை முறையாக வடிகட்டி அதில் அடங்கியிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் துணிக்கைகள் அகற்றப்பட்டு 60m உயரமான புகைபோக்கியினூடாக வெளியேற்றப்படும்.
கழிவிலிருந்து மின்பிறப்பாக்கும் ஆலையினூடாக தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு 10 MW மின்சாரம் வழங்கப்படும். இது மேல் மாகாண மெகாபொலிஸ் திட்டத்துக்கமைவானதாக காணப்படுகின்றது. இந்தத் திட்டத்தினூடாக பிறப்பாக்கப்படும் பாரம்பரியமுறையற்ற புதுப்பிக்கத்தக்க வலு, மின் மற்றும் வலு அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள NCRE இலக்குகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. மேலும், நிர்மாணத்தின் போது சமூக, சூழல் ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கான சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் பொருந்துவதாக இந்த மின் ஆலை அமைந்துள்ளதுடன், செயற்பாட்டின் போது இந்த நியமங்களை விஞ்சும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating