ஐ.நா.தடைவிதிப்பை வட கொரியா நிராகரித்தது உலக நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக கண்டனம்

Read Time:3 Minute, 50 Second

North.korea.gifஅணு ஆயுத சோதனை நடத்தியதற்காக வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதாரத் தடையை விதித்தது. இந்த தடையை வட கொரியா நிராகரித்தது. அதோடு உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவதாக வட கொரியா கண்டித்தது. வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியதை தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதாரத்தடையையும், ஆயுதத்தடையையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள வட கொரிய தூதர் பார்க்கில் யோன் கூறியதாவது:-

போர்ப்பிரகடனம்

ஐ.நா.வின் இந்தத் தடையை எங்கள் நாடு நிராகரிக்கிறது. நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கையை நாங்கள் போர்ப்பிரகடனமாக எடுத்துக்கொள்கிறோம். அணு சக்தி பிரச்சினையில் உலக நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன.

இவ்வாறு வட கொரியா தூதர் கூறினார்.

வட கொரியா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் ஐ.நா. சபை தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கப்பல்களில் சோதனை

வட கொரியாவுக்கு அணு ஆயுதம், ரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் ஆகியவை கொண்டு செல்லப்படாமல் தடுப்பதற்காக அந்த நாட்டுக்கு வரும் அல்லது அங்கு இருந்து வெளியேறும் கப்பல்களை எந்த ஒரு நாடும் சோதனை போடலாம்.

வட கொரியா அனைத்து விதமான அணு ஆயுத திட்டங்களையும், ஏவுகணை திட்டங்களையும் கைவிட வேண்டும்.

ஆயுதம் விற்கத்தடை

வட கொரியாவுக்கு ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை வட கொரியாவுக்கு விற்கக்கூடாது.

வடகொரியாவின் அணு ஆயுதத்திட்டத்துக்கு உதவக்கூடிய பொருள்களையும், ஆடம்பரப்பொருள்களையும் வட கொரியாவுக்கு எந்த ஒரு நாடும் விற்கக்கூடாது.

சொத்துகள் முடக்கம்

வட கொரியாவின் அணு ஆயுதத்திட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மற்றும் அதற்கு உதவக்கூடியவர்களின் வங்கிக்கணக்குகள், சொத்துகள், நிதிகள் ஆகியவற்றை அனைத்து நாடுகளும் முடக்கிவைக்கவேண்டும். அதேபோல இந்த அணு ஆயுதத்திட்டத்தில் ஈடுபட்டு உள்ள வட கொரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

வட கொரியா மீது ஐ.நா. சபை பொருளாதாரத்தடை விதித்ததை அமெரிக்க ஜனாதிபதி புஷ் வரவேற்று இருக்கிறார். அணு ஆயுதத்திட்டத்தை வட கொரியா கைவிட்டால் அதற்கு பொருளாதார உதவி அளிக்கப்படும் என்றும் புஷ் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக் குழு நாளை கூடுகிறது
Next post நிராயுதபாணிகளான கடற் படையினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்! 69 பேர் சம்பவ இடத்தில் பலி!!