பருவை பகுத்து அறிய 3டி!! (மகளிர் பக்கம்)
சிறந்த அழகு சிகிச்சை மருத்துவத்துக்கான மத்திய அரசு விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார் அழகு மற்றும் சரும சிகிச்சை மருத்துவரான சைத்ரா ஆனந்த். சமீபத்தில் சென்னை வந்திருந்த சைத்ராவிடம் ‘காஸ்மெட்டிக் மருத்துவத்தில் என்ன லேட்டஸ்ட்?’ என்பது பற்றி உரையாடினோம்.
‘‘சருமம், கூந்தல், நிறம் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளுக்குப் பொதுவான ரெடிமேட் சிகிச்சை அளிக்கும் முறையே பல நாடுகளிலும் இருந்து வருகிறது. பிம்பிள்ஸ் பிரச்னை என்று யார் சென்றாலும் எல்லோருக்கும் ஒரே சிகிச்சை தான். இதனால்தான், ஒரு சிகிச்சை பலன் கொடுக்காமல் அடுத்த முறை, அதற்கு அடுத்த முறை என்று மருத்துவர்களும் பல்வேறு முறைகளை முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் முற்றிலும் தனித்துவமானது என்பதை உணர்ந்து இப்போது புதிய 3டி முறை உருவாகியிருக்கிறது.
குறிப்பாக, ஆங்கிலேயர் அவர்களது உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கண்டு பிடிக்கும் ஒரு சிகிச்சை அப்படியே நமக்குப் பொருந்தாது. இந்தியரின் உடல் அமைப்பு, அதிலும் தென்னிந்தியரின் உடல் அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. அதனால்தான், இப்போது ஒவ்வொரு வரையும் தனிப்பட்ட முறையில் 3டி முறையின் மூலம் பரிசோதிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. இந்தப் பரிசோதனைக்கு 45 நிமிடங்கள் தேவைப்படும். பரு இருக்கிறது என்றால் தோலின் மேல் அடுக்கில் இருக்கிறதா, நடு அடுக்கிலா அல்லது கீழ் அடுக்கிலா என்பதைத் துல்லியமாக இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக க்ரீம் பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னை சரியாகிவிடாது.
3டி முறை பரிசோதனையுடன் மரபியல் ரீதியாக என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வகையிலும் பரிசோதனைகள் இருக்கின்றன. ஒருவருக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால், அவரது தோலில் இருந்து சிறு பகுதியை சாம்பிளுக்காக எடுத்து அதன் மூலம் ஆய்வு செய்வார்கள். பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சைதான் இது. க்ரீம்கள், பிரச்னைக்கு ஏற்ற சிகிச்சை, இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கொண்ட மாத்திரைகள் என்று பல புதிய சிகிச்சை முறைகள் வந்திருக்கின்றன. அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசியின் மூலமே எடையைக் குறைக்கும் ‘நான் சர்ஜிக்கல் சர்ஜரி’யும் இப்போது பிரபலமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகம் என்பதால் சூரிய ஒளியால் ஏற்படும் பிரச்னைகள், முகம் கருப்படைவது, அதிக வியர்வை, முடி உதிர்தல் போன்ற பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ரெட் லைட் லேஸர், ஸ்கின் லைட் லேஸர் போன்ற சிகிச்சைகள் இருக்கின்றன’’ என்பவர், ‘‘வெயிலை சமாளிப்பதற்காக வெளியில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் தடவிக்கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்கிறது. இது 40 சதவிகிதம்தான் பாதுகாப்பு கொடுக்கும். சன் ஸ்க்ரீனுக்கு முன் வைட்டமின் சி சீரம் சேர்த்துக் கொள்வது 85 சதவிகிதத்துக்கும் மேல் வெயிலில் இருந்து பாதுகாக்கும்’’ என்ற டிப்ஸையும் போனஸாக சொல்கிறார்!
Average Rating