வேனிட்டி பாக்ஸ்: டோனர் (toner)!! (மகளிர் பக்கம்)
சருமத் துவாரங்களை சுருக்குகிறது. சருமத்தின் பி.ஹெச். பேலன்ஸை சமநிலையில் வைக்கிறது. கிளென்ஸ் செய்யப்பட்ட பிறகு சருமத்தின் செல்களுக்கு இடையில் ஏற்படுகிற இடைவெளியை மூட வைக்கிறது டோனர். அதன் மூலம் வெளிப்புற மாசுகள் எதுவும் சருமத் துவாரங்களில் ஊடுருவி, சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
சில வகை டோனர்கள், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சட்டென வெளியே கிளம்ப வேண்டியிருக்கும் போது, சருமத்துக்கு இன்ஸ்டன்ட் பொலிவைக் கொடுக்கக் கூடியது டோனர். இப்படியாக டோனரின் பயன்களைப் பற்றிக் கடந்த இதழில் தகவல்களை வழங்கிய ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல், இந்த இதழிலும் தொடர்கிறார்.
அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப சரியான டோனர்களை பார்த்துத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம். டோனர் உபயோகிக்கும் முறை டோனர் என்பதை தண்ணீர் மாதிரி நிறைய எடுத்து உபயோகிக்கக் கூடாது. 6 முதல் 10 துளிகள் எடுத்து சுத்தமான பஞ்சில் விட்டு, பிழிந்த பிறகே உபயோகிக்க வேண்டும். இப்போது சில வகை டோனர்கள் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. நார்மல், ஆயிலி, ட்ரை மற்றும் காம்பினேஷன் சருமங்களுக்கேற்ப, அதையும் தேர்ந்தெடுத்து, கிளென்ஸ் செய்த பிறகு ஸ்பிரே செய்து கொள்ளலாம்.
வெளியில் டோனர் வாங்க விருப்பமும் வசதியும் இல்லாதவர்கள், வீட்டிலேயே எளிய முறையில் டோனர் தயாரித்தும் உபயோகிக்கலாம். சிறிதளவு வெள்ளரித் துருவலுடன், தயிரை கலந்து கொள்ளவும். கிளென்ஸ் செய்யப்பட்ட சருமத்தில் இந்தக் கலவையைத் தடவி, 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த தயிர், சருமத்தின் கருமையைப் போக்கும். வெள்ளரிக்காய் மைல்டான பிளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதுடன், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையையும் நீக்கும்.
இது எண்ணெய் பசை சருமத்துக்கு உகந்த டோனர். ஒரு கைப்பிடி புதினாவை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் இரவில் கிளென்ஸ் செய்த சருமத்தில் தடவிக் கொள்ளலாம். பஞ்சில் நனைத்து, கண்களுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம். இது சருமத்தின் களைப்பை நீக்கி, ஊட்டம் தரும்.
100 கிராம் கிளிசரினில் 6 டீஸ்பூன் பன்னீரும் கால் டீஸ்பூன் படிகாரத் தூளும் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் டோனராக உபயோகிக்கலாம். இது எல்லா வகையான சருமங்களுக்கும் ஏற்றது.
100 மி.லி. வினிகரில் 50 மி.லி. பன்னீர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, டோனராக உபயோகிக்கலாம். இதில் கலக்கப்படுகிற வினிகர், டீப் கிளென்சராகவும் செயல்படும்.
அரை கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறும் 1 டீஸ்பூன் பன்னீரும் கலந்து உடனடியாக நெற்றி, கழுத்து, கன்னங்களில் தடவவும். இந்த டோனர், சருமத்தின் கருமையைப் போக்கி, பருக்களையும் விரட்டும். மிக அதிகமாக எண்ணெய் வடிகிற சருமத்துக்கு உகந்தது.
லெமன் ஆயில், லேவண்டர் ஆயில் இரண்டும் தலா 2 சொட்டுகள் எடுத்து 2 சொட்டுகள் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து, உள்ளங்கைகளில் தேய்த்து, சட்டென முகத்திலும் கழுத்திலும் தடவித் துடைக்கவும். இது சருமத்தின் அழுக்குகளை நீக்கி, அதன் ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.
சிலருக்கு சருமத்தின் துவாரங்கள் பெரிது பெரிதாகத் தெரியும். இவர்கள் ரோஸ்மெரி மற்றும் மின் ஆயில் இரண்டிலும் தலா 2 துளிகள் எடுத்து 2 துளிகள் டிஸ்டில்டு வாட்டரில் கலந்து முகத்தில் தடவினால், சருமத் துவாரங்கள் உடனடியாக சுருங்கும்.
டோனர் என்பது தினசரி உபயோகப்படுத்த வேண்டியது. டோனர் மாஸ்க் என்பதையும் வீட்டிலேயே தயாரிக்கலாம். சருமத்தை டைட் ஆக்கக் கூடிய இதை வாரம் ஒரு முறை உபயோகித்தாலே போதும். 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சைச்சாறு, 1 முட்டை ஆகிய மூன்றையும் கலந்து, முகத்திலும் கழுத்திலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது சருமத் தசைகளை டைட் ஆக்குவதுடன், களைப்பையும் நீக்கும். தேன் பிளீச் செய்யவும், எலுமிச்சைச்சாறு புத்துணர்வு தரவும், முட்டை சருமத்தை டைட் ஆக்கவும் உதவும்.
டோனரில் 3 வகைகள்!
ஸ்கின் பிரேஸர்ஸ் அல்லது ஃப்ரெஷ்னர்ஸ்…
மிகவும் மைல்டானது இது. கிளிசரின் மற்றும் மிகக் குறைந்த அளவு ஆல்கஹால் (10%) கலந்திருக்கும். ரோஸ்வாட்டர் எனப்படுகிற பன்னீர் இதற்கான சரியான உதாரணம். மிகவும் வறண்ட சருமத்துக்கு உகந்தது.
ஸ்கின் டானிக்…
முதல் வகையைவிட சற்றே ஸ்ட்ராங்கானது. 20% ஆல்கஹால் கலந்திருக்கும். ஆரஞ்சுப் பூ தண்ணீர் இந்த வகையைச் சேர்ந்தது. நார்மல், காம்பினேஷன் மற்றும் எண்ணெய்பசையான சருமத்துக்கு உகந்தது.
அஸ்ட்ரின்ஜென்ட்…
முதல் இரண்டையும் விட இன்னும் ஸ்ட்ராங்கானது. 20 முதல் 60% வரை ஆல்கஹால் கலந்திருக்கும். சட்டென உலர்ந்துவிடக் கூடியது என்பதால் எண்ணெய் பசையான சருமத்துக்குப் பரிந்துரைக்கப்படும்.
Average Rating