பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை ! (கட்டுரை)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது.
நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு-கிழக்கின் எட்டு மாவட்டங்களின் ஊடாகப் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.
நீண்ட நாள்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய தரப்புகள் எல்லாமும் ஒரு போராட்டத்தை நோக்கித் திரண்டன; அல்லது திரளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றால், அது ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான இந்தப் பேரணியை நோக்கித்தான் எனலாம்.
தமிழ்த் தேசிய தரப்புகள் அனைத்தினதும் ஒரே இலக்கு, ‘தமிழின உரிமை மீட்பும், நீதிக் கோரிக்கையும்தான். இதை அடைவது சார்ந்து, ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு பாதையைக் கொண்டிருப்பதாகச் சொல்கின்றன. ஆனால், அந்தப் பாதைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவைதான்.
எந்தவொரு தமிழ்த் தேசியத் தரப்பும், பாரிய முரண்பாடுள்ள பாதையை கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 90 சதவீதமான எண்ணப்பாடுகளும், அதுசார் போக்கும் ஒரே மாதிரியானவைதான். மீதியுள்ள 10 சதவீதமான விடயம், கட்சி அரசியல், தேர்தல் வெற்றி, தோல்வி, பூகோள அணுகுமுறை, எதிர்காலத்தைக் கணித்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து மாறுபடுகின்றன.
இதனால், தமிழ்த் தேசிய அடிப்படையும் கொள்கைசார் நிலைப்பாடுகளும் பெரியளவில் மாறுவதில்லை; அல்லது, மாற்றுவதற்கு யாராவது முயற்சித்தாலும் அதன் பாரம்பரியம் அதனை அனுமதிப்பதில்லை. தமிழ்த் தேசிய அடிப்படையும் அதுசார் போராட்டமும் ஒரே நாளில் தோற்றம் பெற்ற ஒன்றல்ல. அது, பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக முளைத்த ஒன்று!
அது, கடந்த 80 ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களிடம் கடத்தப்பட்டு, அதுவொரு வாழ்கை நெறியாக மாறிவிட்டது. அதனால்த்தான், தமிழ்த் தேசியம் என்பது, ஒரு பாரம்பரியமாகத் தமிழ் மக்களிடம் மாறிவிட்டது.
தாயகத்திலும் தாயகத்தோடு தொடர்பில் இருக்கின்ற எந்தத் தேசத்திலும் அந்தப் பாரம்பரியத்தின் வேர்களும் விழுதுகளும் நீளும். அப்படியான நிலையில், ஒரு பாரம்பரிய அரசியல் வடிவத்துக்கு மாற்றாக அல்லது, எதிராக புதிய அரசியல் வடிவமோ, அதுசார் சிந்தனையோ தமிழ் மக்களிடம் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை.
கடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புகள் வடக்கு – கிழக்கில் கணிசமான வெற்றியைப் பெற்றன. ‘பிரபாகரன் மண்ணை வென்றுவிட்டோம்’ என்று கொக்கரிக்கும் அளவுக்கு ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புகளுக்கு அந்த வெற்றி தெம்பை அளித்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்து நின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாற்று சக்திகளாகத் தங்களை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளாலும் கூட, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தாண்டி வெற்றிபெற முடியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வெளியே, சில ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது.
ஆனால், அந்தப் பகுதிகளில் கூட்டமைப்புக்கு அடுத்த நிலைகளில், ராஜபக்ஷ ஆதரவுக் கட்சிகள் வந்து நின்றன. அதுவும் அம்பாறையில், கருணா அம்மான் சுயேட்சையாக நின்று கூட்டமைப்பைத் தாண்டி வாக்குகளைப் பெற்றார். அதனால், அங்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான், தமிழ்த் தேசிய அரசியல் என்கிற பாரம்பரியத்தின் மீதான அச்சுறுத்தல் உணரப்பட்டது. தமக்குள் முரண்பட்டுக் கொண்டாலும் தமிழ்த் தேசிய அரசியலை மக்களிடம் பேணுவது என்பது, தவிர்க்க முடியாதது என்கிற கடப்பாடு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் அதன் இணக்கத் தரப்புகளுக்கும் ஏற்பட்டன. அதுதான், பொது வேலைத் திட்டங்களில் கீழ் இணங்கி வேலை செய்யவும் வைத்தன.
அதன் ஆரம்பமாக ஜெனீவா அமர்வுகள் தொடர்பிலான பொது ஆவணம், அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகள், தரப்புகளின் இணக்கத்தோடு வெளிவந்தது. அதன் அடுத்த கட்டமாக, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி அமைந்திருக்கின்றது.
இந்தப் பேரணியை தென் இலங்கை பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கின்றது. அதேவேளை, வடக்கு- கிழக்கிலுள்ள ராஜபக்ஷ ஆதரவு அணிகள், தங்களின் எதிர்கால இருப்பை அசைக்கும் ஒன்றாக உணர்கின்றன. அதனால், பெரும் பரப்புரைகளைப் பேரணிக்கு எதிராக இன்று வரை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, பிரதேசவாதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு உள்ளிட்ட விடயங்களைப் பிரதானப்படுத்தி, பேரணியை மலினப்படுத்தும் சாட்சிகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியைக் ‘கரும்புலிகள் பேரணி, வெளிநாட்டுப் புலிகளின் காசில் முளைத்த பேரணி, சுமந்திரனின் புலிப்படலம், கூட்டமைப்பின் சதி..’ இப்படி பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு தென் இலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன.
ஜனநாயக வழிப் போராட்டமொன்றை நோக்கி, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைவதை தென் இலங்கையால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகளைக் காட்டிலும், சிங்கள ஊடகவியலாளர்கள் (என்கிற போர்வையில்) பலரும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் முன்வைக்கப்பட்ட பத்துக் கோரிக்கைகளில் ஒன்றுகூட இலங்கையின் எந்தத் தரப்புக்கும் அச்சுறுத்தலானது அல்ல. மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நோக்குமாறும், பறிக்கப்படுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீள வழங்குமாறும், ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குமாறும் கோருவதாகும். அந்தக் கோரிக்கைகளில் இலங்கையின் இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ அச்சுறுத்தலான விடயங்கள் ஏதுமில்லை.
ஆயிரக்கணக்கானோரைக் கூட்டி, சுதந்திர தினம் உள்ளிட்ட அரச நிகழ்வுகளை நடத்துவதற்கும், அரசியல் நிகழ்வுகளை நடத்துவதற்கும் ‘கொவிட்- 19’ காலத்து விதிகளின் கீழ், தென் இலங்கையில் எந்தவித தடையும் இல்லை. ஆனால், அந்த விதிகளின் கீழ், வடக்கு – கிழக்கில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கும், நினைவேந்தலை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்றால், அதனை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
அப்படியான விடயத்தை சுமந்திரனோ, சாணக்கியனோ, கஜேந்திரகுமாரோ அல்லது யாரோ ஓர் அரசியல்வாதி செய்தால், அதை நாட்டின் ஒருங்கிணைவுக்கே அச்சுறுத்தலான ஒன்றாக முன்னிறுத்திப் பேசுவதற்கு, தென் இலங்கை தயாராக இருக்கின்றது. சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை மீளப்பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் பெரிய செய்தியாகச் சொல்லும் அளவுக்கு, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, ஆட்சியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. உரிமைப் போராட்டங்கள் எந்தவொரு மக்கள் கூட்டத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட வேண்டியதில்லை.மாறாக, அதிகாரங்களைப் பறிக்கின்ற, அத்துமீறுகின்ற தரப்புகளுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட வேண்டியவை. தமிழ்த் தேசிய போராட்டமும், அதன் வழியாகவே பயணித்திருக்கின்றது. அதுவும், சகோதர இனங்களுடனான முரண்பாடுகளை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டப் பயணங்களைக் குறித்து அக்கறை கொண்டிருக்கின்றது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில், முஸ்லிம் மக்களின் பங்களிப்பு என்பது கணிசமானது. கடந்த முப்பது ஆண்டுகளில் இப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது. அந்த அற்புதத்தின் உண்மையை, அதன் உண்மையான வடிவங்களினூடாக சிங்கள மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
நியாயமான போராட்ட வடிவங்கள் மீது புலிச்சாயம் பூசுவது, தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் வழக்கமான பணி. ஆனால், அதனைத் தாண்டி சிங்கள மக்களோடு பேசும் கட்டங்களை நோக்கி, தமிழ்த் தேசிய அரசியல் பயணிக்க வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது, போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், போராட்டம் குறித்த தெளிவை வழங்க வேண்டியது, போராட்டக்காரர்களின் கடமை. அதுதான், போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் பேணுவதற்கு உதவும்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, தமிழ்த் தேசிய தரப்புகளை ஒரே புள்ளியில் திரட்டியமை, ஜனநாயகப் போராட்டங்கள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியமை, முஸ்லிம் மக்களை போராட்டத்தின் பங்காளிகள் ஆக்கியமை என்று பல்வேறு முன்மாதிரிகளைக் காட்டியிருக்கின்றது.
அதுபோல, பேரணியின் முடிவிடச் சர்ச்சை, ஏற்பாட்டுக்குழுவுக்குள் காணப்பட்ட சலசலப்புகள் என்று குறைபாடுகளும் வெளிப்பட்டன. ஆனால், அந்தக் குறைபாடுகளைத் தாண்டி நின்று நம்பிக்கை கொள்ளும் அளவுக்கான செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சொல்லியிருக்கிறார்கள்; அது பெரிய வெற்றியே!
Average Rating