நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?! (மருத்துவம்)
‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே…. இனிப்புப் பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’ என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும். அதுதான் சுவையோடு ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை என்றே சொல்லலாம். நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான மாற்றாகவும் இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான புவனேஸ்வரி சங்கர்.
‘‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது. நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால் அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு வெல்லம். பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச் சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம் கலந்தால்தான் அதனை வெள்ளை சர்க்கரை(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித நன்மையும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இந்தியர்களில் நான்கில் ஒருவர் Non communicable disease என்கிற தொற்றா நோயால் அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக இருக்கிறது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில் உடல் பருமன் ஏற்படும். வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.
மத்திய அரசு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்(Food safety and standards authority of india) என்ற அமைப்பு Eat right India movement என்ற வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது. உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வலைத்தளம் வழிகாட்டியாக இருக்க உருவாக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் என எச்சரிக்கையும் விடுக்கிறது. நிலைமை இப்படி இருக்க வெள்ளை சர்க்கரையின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் எளிதில் புரியும்.
ஆனால், நாட்டு சர்க்கரையில் எந்த ரசாயனமும் கலக்கப்படாததால் உடலுக்கும் கெடுதி இல்லை. அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பழங்களில் சர்க்கரை இருப்பதால் யாரும் நேரடியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால், நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்திப் பழகிவிட்டோம். அதனால், வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் உடல்நலத்தை காக்கலாம். எந்த ஒரு இனிப்பு உணவிலும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நாம் புசிக்கும் உணவாக இருந்தாலும், பழங்களாக இருந்தாலும் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறி நம் ரத்தத்தில் சேர்கிறது.
அதுவே சர்க்கரையாக நேரடியாக நம் உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அந்த குளுக்கோஸ் நம் ரத்தத்தில் வேகமாகக் கலக்கிறது. எனவே, நாட்டு சர்க்கரையாக இருந்தாலும் அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. American heart association தனது குறிப்பேட்டில் பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் 9 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது அதற்கு மேல் எடுத்துக்ெகாள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இதையும் மனதில் கொள்ள வேண்டும்!’’
Average Rating