என்ன எடை அழகே!! (மகளிர் பக்கம்)
என்ன எடை அழகே’வின் சீசன் 1ல் இறுதிக்கட்டம் வரை நகர்ந்தவர்கள் மூன்றே பேர். அவர்களிலும் ஆதர்ச எடையைத் தொட்டவர்கள் இருவர் மட்டுமே. சரியான ஒத்துழைப்பின்மையால் மற்றவர்கள் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். என்ன எடை அழகே – சீசன் 2’வில் தேர்வான 8 தோழிகளில் ஐரின் நீக்கப்பட, மற்ற 7 பேருக்கும் `நீயா நானா’ போட்டியே நடக்கிறது. சீசன் 2 ஆரம்பித்த 3 மாதங்களுக்குள் ஆதர்ச எடையைத் தொட்டு அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் தாமரைச்செல்வி. அதிகபட்ச எடையை குறைத்து டாப் 2 இடங்களில் இருப்பவர்கள் நிவேதிதாவும் சாந்தியும். `என்ன எடை அழகே’ ரியாலிட்டி தொடர் தங்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் 7 தோழிகளும்!
தாமரைச்செல்வி: வாழ்க்கை இவ்ளோ சந்தோஷமா மாறுமானு ஆச்சரியமா இருக்கு!
இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் தண்ணியே குடிக்க மாட்டேன். வெயிட் லாஸுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம்னு இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். நிறைய தண்ணீர், நீர்மோர் குடிக்கிறேன். ராத்திரிக்கு முட்டைகோஸும் சுரைக்காயும் சேர்த்து பொரியல் மாதிரி செய்து சாப்பிடறேன். குண்டா இருந்தப்ப பாடாப்படுத்தின மூட்டுவலியும் முதுகுவலியும் இப்ப இல்லை. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து வேலை பார்த்தப்ப தொப்பை அழுத்தி வயிறு வலிக்கும். வயிற்றுச் சதை குறைஞ்சதால அந்த வலியும் இப்ப இல்லை. டிரெஸ் எல்லாம் பத்தாம, தையலைப் பிரிச்சுவிட்டுப் போட்டுக்கிட்டிருந்தேன். இப்ப மறுபடி எல்லாத்தையும் டைட் பண்ணிப் போட ஆரம்பிச்சிருக்கேன். வெயிட்டை குறைக்கிறது மூலமா வாழ்க்கை இவ்ளோ சந்தோஷமா மாறுமானு ஆச்சரியமா இருக்கு’’
யமுனா: நிச்சயதார்த்த டைம்ல பார்த்த மாதிரி இளமையா மாறிட்டேன்னு சொல்றார் கணவர்!
பச்சைப் பயறு மாதிரி புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள் எனக்கு ஹெல்ப் பண்ணுது. வாரம் ஒருநாள் வெறும் பழங்கள் மட்டும்தான் சாப்பிடறேன். எனர்ஜி லெவல் எக்கச்சக்கமா ஏறினதை ஃபீல் பண்றேன். எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டேனு எல்லாரும் வாய் பிளந்து கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு. `நிச்சயதார்த்த டைம்ல பார்த்த மாதிரி இளமையா மாறிட்டே’னு சொல்றார் கணவர். அதைவிட வேற என்ன வேணும்?’’
சாந்தி : 10 வருஷம் பழைய டிரெஸ் கூட இப்போ கச்சிதமா இருக்கு!
என்னோட சாப்பாட்டுல கிரீன் டீ, கொள்ளு சூப், கொடம்புளி… இந்த மூணும்தான் முக்கியம். அரிசி உணவுகளைக் குறைச்சிட்டேன். சீரகத் தண்ணீர் நிறைய குடிக்கிறேன். இந்தப் பயிற்சிக்கு வர ஆரம்பிச்சபோது எக்மோர்லேருந்து சேத்துப்பட்டுக்கு ஆட்டோவுல வருவேன். இப்ப வெயிட் குறைஞ்சதால நடந்தே வந்துடறேன். 10 வருஷங்களுக்கு முன்னாடி கரெக்டா இருந்த டிரெஸ் எல்லாம் இப்ப மறுபடி சரியா இருக்கு. 15 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவுல இருந்த மாதிரியே இப்ப இளமையா மாறியிருக்கேன். முகத்துல சுருக்கங்கள் வரலை. எல்லாரும் ரகசியம் கேட்கறாங்க…’’
ராஜலட்சுமி: ஆட்டிஸம் பாதிச்ச பையனை இன்னும் பெட்டரா கவனிச்சுக்க முடியுது!
காலையில ஒரு பிடி சாதத்தை மோர்ல கரைச்சுக் குடிச்சாதான் எனக்கு அந்த நாள் நிம்மதியா இருக்கும். அதனாலயே என்னால வெயிட்டை குறைக்க முடியலை. என்ன எடை அழகே மூலமா அந்தப் பழக்கத்தை மாத்திக்கிட்டேன். இப்ப அரிசி உணவுகளையும், காபி, டீயையும் குறைச்சிட்டேன். கோதுமை, கிரீன் டீக்கு மாறிட்டேன். என்னோட சுறுசுறுப்பைப் பார்த்துட்டு என் குடும்பத்துல எல்லாரும் சந்தோஷப்படறாங்க. என்னோட ஆட்டிஸம் பாதிச்ச பையனை முன்னைவிட இன்னும் பெட்டரா என்னால கவனிச்சுக்க முடியுதுங்கிறதுல கூடுதல் சந்தோஷம்.’’
அகிலா ராணி: எப்பவும் எனர்ஜி குறையாம இருக்கேன்!
பருமனா இருக்கிறது தெரிஞ்சும் இது வரைக்கும் என்னால டயட் பண்ண முடிஞ்சதில்லை. இப்ப என்ன எடை அழகே’ மூலமா டயட் சாத்தியமாயிருக்கு. நிறைய பழங்கள் சாப்பிடறேன். ரெண்டு வேளை வாக்கிங் போறேன். முன்னல்லாம் பையனையும் கணவரையும் ஸ்கூலுக்கும் ஆபீசுக்கும் அனுப்பிட்டு உடனே தூங்கப் போவேன். ஒவ்வொரு சின்ன வேலையையும் முடிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவேன். இப்ப எடையைக் குறைச்ச பிறகு அந்தத் தூக்கம் ஓடியே போச்சு. பகல் முழுக்க எனர்ஜி குறையாம இருக்கேன். ‘நானே நானா’னு பாட்டே பாடலாம்… அவ்ளோ பெரிய மாற்றம் என்கிட்ட!’’
சபிதா: சுகர் கன்ட்ரோல்ல இருக்கிறதுதான் ஸ்வீட் நியூஸ்!
இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறப்ப டயாபடீஸோட தான் வந்தேன். உடம்பைக் குறைக்கிறேன் பேர்வழினு நான் தப்புத் தப்பா ட்ரை பண்ணின டயட்தான் டயாபடீஸுக்கு காரணம்னு சொன்னார் டாக்டர். என்ன எடை அழகேவுக்கு வந்ததும், எனக்கேத்த சரியான டயட் என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். நிறைய ஓட்ஸும் காய்கறிகளும் எடுத்துக்கறேன். சர்க்கரை அளவு அதிகமாகி, 3 வேளை மருந்து எடுத்துக்க சொன்ன டாக்டர், இப்ப என் சுகர் கன்ட்ரோலை பார்த்து நம்ப மாட்டேங்கிறார். மருந்துகளை நிறுத்திட்டு டெஸ்ட் பண்ணிப் பார்த்தார். அப்பவும் சுகர் கன்ட்ரோல்ல இருந்தது. 3 வேளை மருந்தை இப்ப ஒரு வேளையா குறைச்சிட்டார். இதுதான் எனக்கான ஸ்வீட் நியூஸ்.’’
நிவேதிதா: வெயிட் குறைச்சதும் தானா சுறுசுறுப்பு வந்திருச்சு!
கிரீன் டீயும் 4 தக்காளியும்தான் எனக்கு தினசரி காலை உணவு. மதியத்துக்கு காக்ராவும் கொஞ்சம் காய்கறியும். பருமன் காரணமா என்னால இத்தனை வருஷங்கள் சுறுசுறுப்பா எந்த வேலைகளையும் செய்ய முடியலை. சோம்பேறித்தனமா இருந்தேன். வெயிட் குறைச்சதும் தானா சுறுசுறுப்பு வந்திருச்சு. 18 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமான டைம்ல இருந்த மாதிரி ஃபீல் பண்றேன். ஐம் ஸோ ஹேப்பி…’’
Average Rating