பொலிகண்டிக்குப் பிறகு!! (கட்டுரை)
பெப்ரவரி 3, 2021 கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து, ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்குகிறது. பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பதாக, தமிழ் பேசும் மக்கள் கூட்டமொன்று, கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து வட மாகாணத்தின் பொலிகண்டி வரை, ஒரு நீண்ட ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்திருந்தது.
அரச இயந்திரம், வழமைபோலவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கருவிலேயே சிதைக்கும் கைங்கரியங்களை, பொலிஸ் கட்டமைப்பினூடாக முன்னெடுக்கத் தொடங்கியது. நீதிமன்றுகளில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்துக்கான தடை உத்தரவுகளைக் கோரினார்கள்.
‘கோவிட்-19’ நோய் பரவுகை அச்சம், ஆர்ப்பாட்டத் தடைக்கான காரணமாகப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. அடக்குமுறையைக் கையாளும் அரச இயந்திரத்துக்கு, ‘கோவிட்-19’ நோய் வசதியான சாட்டாக மாறிவிட்டது.
அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத அரசாங்கத்துக்கு, அதைத் தனக்கு வேண்டும் பொழுதில் மீறுவதற்கு, ‘தேசிய பாதுகாப்பு’ என்ற சாட்டு உதவுவதைப் போல, தற்போது ‘கோவிட்-19’ நோய் உதவுகிறது. நிற்க!
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரையான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, ஒரு மக்கள் எழுச்சியாகத் தொடங்கவில்லை. அப்படி வரையறுப்பதை அரசியல் தலைமைகளும் கட்சி விசுவாசிகளும் விரும்பினாலும், இது அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி தொடங்கிய ஆர்ப்பாட்டம்.
சந்தைப்படுத்தல், பிரசித்தப்படுத்தலுக்குத் தேவையான அடிப்படைகள் உருவாக்கப்பட்டு, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) என்ற பெயர் கூட அதற்கேற்றாற்போல தெரிவுசெய்யப்பட்டு, முழுமையான படப்பிடிப்புகளுடன், சமூக ஊடக பிரசித்தப்படுத்தல்கள் உடன்தான் இது தொடங்கியது. ஆனால், இங்கு இதுவல்ல முக்கிய விடயம்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் உதயம், அரசாங்கத்தின் அடக்குமுறையால் கொதித்துக் கொண்டிருந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, தங்கள் எதிர்ப்பை வௌிக்காட்ட ஒரு வடிகாலாக அமைந்தது.
ஆகவே, ஆர்ப்பாட்டப் பேரணி, கிழக்கு முதல் வடக்கு நோக்கிப் பயணிக்கப் பயணிக்க, மக்கள் ஆதரவு அதற்கு ஏற்படத் தொடங்கியது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கான மக்களாதரவு பற்றி, சிலாகிக்கக் கூடியதொரு விடயம், இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்து இருந்தார்கள். இந்த ஒன்றிணைவு, பெரும்பான்மையின அடக்குமுறை அரசாங்கத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் எதிர்ப்புக் குரலாக, இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அடையாளப்படுத்தியது.
அண்மைத் தசாப்தங்களைப் பொறுத்தவரையில், இலங்கையின் தமிழ், முஸ்லிம் அரசியல் இருவேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தது.
தமிழ் மக்கள், தம்மைத் தனித்தேசமாக முன்னிறுத்திய, பேரினவாத எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த வேளையில், முஸ்லிம் மக்கள் தம்மை, இலங்கையின் சிறுபான்மை இனமாக முன்னிறுத்திய, அரசாங்கத்தோடு இணைந்து பயணிக்கும் ஆதரவுத்தள அரசியலை முன்னெடுத்தார்கள்.
ஆட்சிக்கு வருவது எந்தக் கட்சியாக இருந்தாலும் அதை ஆதரித்து, ஆட்சியில் பங்குதாரராக இருக்கும் போக்கு, முஸ்லிம் கட்சிகளால் மிக நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த கொள்கையாகும். இந்தக் கொள்கை, முஸ்லிம் மக்களுக்கு நல்ல பயனைத் தந்திருக்கிறது என்பதையும் எவரும் மறுக்க முடியாது.
இந்த ஆதரவுத்தள அரசியல், பொருளாதார, கல்வி, தொழில், சமூக ரீதியாக, முஸ்லிம் மக்களுக்குக் கணிசமான நன்மைகளைப் பெற்றுத்தந்திருக்கிறது என்பது கண்கூடு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களில் கணிசமானோர், தமது பிள்ளைகளை சிங்கள மொழியில் கல்வி பயிலச் செய்கின்றமை கூட, இங்கு அதிசயமான ஒன்றல்ல.
ஒரு காலத்தில், “முஸ்லிம் மக்களைப் போல, தமிழ் மக்களால் ஏன் இருக்க முடியவில்லை” என்று, சில சிங்களத் தலைவர்கள் கூறும் அளவுக்கு, சிங்கள-முஸ்லிம் உறவு இணக்கமானதாக இருந்தது.
பேரினவாதம் என்பது, விசப்பாம்பைப் போல! அதற்குத் தன்னை வளர்த்தவன் யார், ஆதரித்தவன் யார் என்றெல்லாம் நன்றி, விசுவாசம் கிடையாது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, அது யாரையும் கொத்திக் கொல்லும். இங்கு, முஸ்லிம் மக்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் அரசியலுக்கும் நடந்தது இதுதான்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்கள், தாக்குதல்கள் நடந்தபோது கூட, முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு, கண்டனத்தைக் கூட, நோகமால் தடவிச் சொன்னவர்கள், அதுவே அவர்களது அரசியல் உபாயமாக இருந்தது.
தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக அரங்கேறிய பெருங்கொடுமைகள், தமது மக்களுக்கெதிராக அரங்கேறிவிடக்கூடாது என்ற எண்ணம் கூட, அவர்களது இந்தப் பொறுமைக்குக் காரணமாக இருக்கலாம். பேரினவாதப் பாம்பு, தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முஸ்லிம் மக்களைக் கொத்தத் தொடங்கியது.
அதன் அண்மைய உச்சக்கட்ட நிலைதான், ‘கோவிட்-19’ நோயின் பெயரால், முஸ்லிம் மக்களின் அடிப்படை நம்பிக்கைக்கு முரணாக, அவர்களது பூதவுடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை ஆகும். இது முஸ்லிம் மக்களைச் சினமடையச் செய்திருந்தது.
இந்தப் பின்புலத்தில்தான், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் கைகோர்த்து இருந்தார்கள்.
ஒட்டுமொத்தமாகச் ‘சிறுபான்மையினரின் உரிமைகளை மீறாதே’ என்ற குரல், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஒலித்தாலும், இங்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம், பேரினவாத அரசின் அடக்குமுறையை எதிர்ப்பதாக அமைந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அது தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பதாகவும், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அது, முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் ‘கொவிட்-19 நோயின் சாட்டால், தகனம் செய்யப்படுவதைத் தடுத்தல் என்பதாகவும் அமைகிறது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், இதுவரை எதிரும், புதிருமாக இருந்த தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்தமையும் பாராட்டுக்குரியது.
இரண்டாவது நாளைத்தாண்டி, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்த போது, எங்கே இது வாலாற்று முக்கியத்துவம் பெற்றதோர் ஆர்ப்பாட்டமாகி விடுமோ, அதிலே நாம் இடம்பெறாது போய்விடுவோமோ என்றெண்ணியேனும் சில அரசியல்வாதிகள் திடீரென்று இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்து படம் பிடித்து, படம் காட்டி இருந்தார்கள்.
இருந்தபோதிலும், இந்த அரசியல் சந்தர்ப்பவாதங்களைத் தாண்டி, இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் அரசியல், பேரினவாத எதிர்ப்பு என்ற புள்ளியிலேனும் ஒன்றிணைய முடியும் என்பதை, அரசியல்வாதிகள் அல்லாது, சிறுபான்மை மக்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.
தமது அரசியலுக்காக, அரசியல்வாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இதனை மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியலையும் அரசியல் கட்சிகளையும் தாண்டி, தமக்கானதாக மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
இது ஒரு முக்கிய கேள்வியை, இங்கு எழுப்புகிறது? இந்த ஆர்ப்பாட்டம் பொலிகண்டியைச் சென்றடைந்த பின்னர் அடுத்தது என்ன?
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி வேறுபாடுகளைத்தாண்டி, தமிழ் அரசியல்வாதிகள் இணைந்த அளவுக்கு, முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை இணையவில்லை என்பது உறுத்தலாக இருந்தாலும், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்ததன் மூலம், தந்த சமிக்ஞையை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருத்திற்கொள்ள வேண்டும்.
அதன்பால், பொலிகண்டிக்குப் பிறகான தொடர்ச்சியான அரசியல் கைகோர்த்தல் பற்றி, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
பொலிகண்டியோடு இந்த எழுச்சி முற்றுப்பெற்றுவிட்டால், இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும், ஒரு சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட அரசியல் இலாபத்துக்கும் political mileage-ற்கும் இறைத்த நீராகப் போய்விடும் என்பதைத்தாண்டி, வேறெந்த விளைபயனையும் தராது.
இதில் பங்குபற்றிய, பேரினவாத ஆட்சியின் அத்தனை தடைகளையும் அதன்வழியில் சென்று தகர்த்து, இந்த ஆர்ப்பாட்டப் பேரணியைப் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ கொண்டு போய்ச் சேர்த்த அத்தனை பேரினதும் முயற்சியும் உழைப்பும் வீணாகப் போய்விடும். வரலாற்றில், மற்றுமொரு பாதயாத்திரையாக மட்டுமே இதுவும் மாறிவிடும்.
இத்தனையும் வீணாகப் போகாது பாதுகாக்க வேண்டிய தார்மிகக் கடமை, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு.
இது வரலாறு, தமிழ், முஸ்லிம் அரசியலுக்கு வழங்கியுள்ள ஒரு மகத்தான வாய்ப்பு. இதைத் தமது தனிப்பட்ட அரசியலுக்காக நழுவவிட்டுவிட்டால், அது வரலாற்றுக்கு மட்டுமல்ல, தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, இந்த அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் செய்யும் துரோகமாகவே அமையும்.
Average Rating