பொய்யா விளக்கு!! (கட்டுரை)
‘The intent to destroy; Death, Denial and Depiction” ஆர்மேனிய இனப்படுகொலையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆவணப்படமாக இருக்கின்றது. அந்தப்படத்தின் முடிவில் ஒரு இனப்படுகொலை புலமையாளரால் கூறப்படும் வார்த்தைகள், ‘யூகோஸ்லாவிய இனப்படுகொலை பற்றி, ருவாண்டடா இனப்படுகொலையைப் பற்றி, இன்னும் வேறு இனப்படுகொலைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, ஆர்மேனிய இனப்படுகொலையைப் பற்றிய அறிவு அவசியம்’.
‘பொய்யா விளக்கு’ ‘பின்நினைவுத்திற (Post-Memory-Marianna Hirsch)தலைமுறையினருக்குரிய ஆவணப்படம் மட்டும் என்று கருதமுடியாது. ஆவணப்படம் என்ற பாரம்பரிய போக்கை தவிர்த்து எழுதிய போக்கை உருவாக்குகின்ற ஆவணப்படமாக கொள்ள வேண்டும். 2009 ல் இடம்பெற்ற போரை ‘சாட்சிகளற்ற போர்’(war without witness)என்ற சொல்லாடல் மூலம் ஒரு சில ஊடகங்கள் கட்டமைக்க முயன்றன. முள்ளிவாய்க்கால் அனுபவத்தைக் கொண்டிருப்போர் எல்லோருமே அந்த போரின் சாட்சிகளே. அதே போலதான் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரைக்கும் மக்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்தவர்களில் வைத்தியர்களின் பங்கு வார்த்தைகளுக்குள் வரையறுக்கப்பட்டு விட முடியாதது. வைத்தியர் வரதராஜா முள்ளிவாய்க்கால் அனுபவத்தின் சாட்சியாக வாழ்ந்து வருபவர்.
இனப்படுகொலைகளை படிமங்களுடன் இணைத்துப் பார்க்கின்ற நடைமுறைப்பழக்கம் மக்கள் மத்தியில் உண்டு. அதேபோல் முள்ளிவாய்க்கால் நிகழ்வை இணைத்துப் பார்ப்பதற்கான படிமங்கள் நிறைய உண்டு. உதாரணத்திற்கு யூலை 83 கலவரம் என நினைக்கின்ற போது மூளை உள்வாங்கி, மீள் எழுகின்ற படிமம், நிர்வாணமாய் தலையிலே கையை வைத்து குனிந்து இருக்கும் தமிழ் மகனைச் சுற்றி வேடிக்கை பார்க்கும் அல்லது வன்முறையை ரசிக்கும் கும்பல் சூழ இருக்கும் படிமம் பிரபல்யமானது. வேறு ஆவணப்பட படிமங்கள் இருக்கின்ற போதும் இதுவே முக்கியத்துவம் பெறுவதாக பிரதிபலிக்கப்படுகின்றது. இவ்வாறாக, முள்ளிவாய்க்காலில் சார்ந்த பல்வேறு படிமங்கள் உருவாயின.
சனல் – 4 வெளியிட்ட ஆவணப்பட சான்றுகள் நேரடியானவை. நேரடியாக நடந்தவற்றின் சான்றுகளாக இருப்பவை. ஆனால் பொய்யா விளக்கு அவ்வாறான கொடூர படிமங்களை பதிவிடவில்லை. ஆனால் நாசூக்காக பார்ப்பவர்களின் மனச்சாட்சியை, கற்பனைக்கூடாக உசுப்பிவிட முயல்கிறது. இனப்படுகொலை தொடர்பான ஓவிய பிரதிநிதித்துவப்படுத்தலில் பொதுவாக கையாளப்படும் உத்தி ‘இன்மைக்கூடாக இருப்பதைக் காட்டுதல்’ (make absent present) மேற்கூறப்பட்ட ‘இன்மைக்கூடாக நடந்ததைப்’ பிரதிநிதித்துவப்படுத்தல் பற்றி முன்னரே ஒரு கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் விளைவுகளை உற்று நோக்குகின்ற போது, கற்பனை செய்து கொள்ள முடியாத படுகொலையின் உண்மையை சர்வதேசம் இன்னும் கிரகித்துக் கொள்ள முடியாத நிலையா? அல்லது தங்கள் முன்னே நடந்தேறிய இனப்படுகொலையில், குற்றப் பொறுப்பில் பங்குண்டு என்பதனால் நழுவல் போக்கை கையாளுகின்றதா? அல்லது இனப்படுகொலையைத் தடுப்பில் உள்ள இயலாமையை ஏற்றுக்கொள்வதா? அல்லது அதுவே ஒரு திட்டமாக வகுக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்வதா? என்பதில் பல சிக்கல்கள் உண்டு. இனப்படுகொலை தொடர்பில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியதா என்றால், கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.
ஏனைய இனப்படுகொலை பற்றி பிரபல்யமான படங்களில் உள்ள கதாநாயகத் தன்மை இருந்தாலும், கதாநாயகத்தன்மையின் இயலாமையும், கையறு நிலையும், ‘தனியாகவும்’ ‘கூட்டாகவும்’ ‘மற்றமையாகக் கட்டமைக்கப்பட்டதால் எழும் அங்கலாய்ப்பும், ஏனையவர்களில் தங்கியிருக்க வேண்டிய திட்டமிடப்பட்ட உத்தியையும், பெரும்பான்மை அடிப்படைவாதத்தை உள்வாங்கிய அரசுகள் கட்டமைக்கும் கொள்கைகளால் எழுகின்ற விளைவிற்கான பாடமாக அமைய வேண்டும். வைத்தியராக (வைத்திய கதாநாயகராக) கட்டமைக்க முயலும் கூட்டு அடையாளக் கட்டமைப்பு மிகவும் கனதியானது. குறிப்பாக ‘எங்கட சனம்’ ‘நாங்கள்’ எங்கள்’ போன்ற சொல்லாடல்களுக்கூடாகக் கட்டமைக்கப்படும் தேச/இன உரித்துடமை, பின்முள்ளிவாய்க்கால், பின்நினைவுத்திற தலைமுறை வரலாற்றில் மிகவும் அவசியமானது. Hotel Ruwanda, Schintheris list, Life is Beautiful போன்ற படங்களில் உள்ள கதாநாயகத் தன்மையிலும், அவரின் பயணத்திலும் தங்கியிருத்தல் என்பது ‘பொய்யா விளக்கிலும்’ வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.
‘பொய்யா விளக்கை’ பார்க்கின்ற தமிழரல்லாதவர்களுக்கு எழக்கூடியது, இது ஒரு இனம் சார்ந்த அனுபவத்தைக் கூறுகின்றது என்பது. அத்தோடு இனப்படுகொலைக்கான உள் நோக்கத்தை ஆங்காங்கே வெளிப்படுத்திக் கொண்டிருப்பதுமாகும். Leo Kuper (1981) தன்னுடைய நூலில் இனப்படுகொலை ஒப்பந்தம் குறிப்பிட்டதற்கு எதிரான மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றார். இனப்படுகொலை ஒப்பந்தம் குறிப்பிடுவது போல குலம், இனம், மதத்திற்கெதிரான இனப்படுகொலைகளை அரசியலிலிருந்து பிரிக்கமுடியாது. அவர் ரூவாண்டாவை முன்வைத்து தனது கூற்றை நியாயப்படுத்தும் போது ‘இனம் மட்டும் சார்ந்தது அரசியல் சார்ந்தது அல்ல என்றோ, அரசியல் மட்டும் சார்ந்தது இனம் சார்ந்தது அல்ல’ என்றோ பிரிக்கமுடியாத ஒரு சிக்கலுக்குள் இனப்படுகொலை அமைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். இதனால் தான் Daniel Feierstein(2009) இனப்படுகொலை வரைவிலக்கணத்தை மீள் வரைவிலக்கணப்படுத்துமாறு கோரியிருந்தார். இனப்படுகொலையை சட்ட வரையறைக்குள் மட்டும் வைத்து நோக்கும் போக்கு உருவாகியிருந்ததை பல ஆய்வாளர்கள் சுட்டிகாட்டியிருந்தார்.
2009க்குப் பின்னர் தமிழர் பிரச்சினையை சட்டப் பிரச்சினையாக உற்று நோக்கும் போக்கு கட்டமைக்கப்பட்டது. இக்கட்டமைப்பு அரசு – மைய சிந்தனை (State – centric) கொண்டது. வரலாற்றில் தமிழர் பிரச்சினை சட்ட வரையறைக்குள் மட்டும் தீர்க்க முடியுமென்றால் அது எப்போதோ முடிந்து விட்ட பிரச்சினையாக இருந்திருக்கும். அவ்வாறாக தமிழர் பிரச்சினை இல்லையென்பதால் தான் அரச – மைய சிந்தனை வெளிக்கப்பால் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தமிழினம் தள்ளப்பட்டது. 2009க்குப் பின்னர் மீண்டும் அரசு – மைய சிந்தனைக்குள் செல்வதானது ஒற்றையாட்சி மையத்திலிருந்து தமிழர் பிரச்சினையை அணுக முற்படுவதாகும். இவ்வாறான வரலாற்றுப் போக்கு வரலாற்றுப் பிழைகளை மீட்டுகின்ற அபாயத்திற்குள் தள்ளப்படுகின்றது. சட்டத்தரணிகளை கதாநாயகர்களாக கொண்டாடும் போக்கு, சமூக கட்டமைப்பாகக் கூடிய அபாயத்தையும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இனப்படுகொலை ஆய்வாளர்களின் கருத்துப்படி, சட்டவரையறைகளை வைத்துப் பார்க்கின்ற போது மிக மிக சொற்ப குற்றச் செயல்களையே இனப்படுகொலை என்றும் ஏனையவை மானிட குலத்திற்கெதிரான குற்றவரையறைக்குள் அடங்கும் என்ற செல்நெறி இருப்பதை அவதானிக்க முடியும். இச் சந்தர்ப்பத்தில் தான் Lemkin னுடைய மூல இனப்படுகொலை கருத்துருவாக்கத்திற்கு, வரைவிலக்கணத்திற்கு செல்லவேண்டிய தேவை எழுகின்றது. திட்டமிடப்பட்ட அழிவும், அழிவினுடைய நோக்கமுமாக அடக்கப்பட்ட மக்களின் தேசிய அடையாளத்தை பயங்கரத்தை கொண்டு அழிப்பது’ இனப்படுகொலையாகும். (The systematic annihilation whose objective is to destroy the national identify of the oppressed through the use of terror).
இனப்படுகொலையை Hagan and Rymond–Richmond (2009) Collective action Theory of Genocide க்கூடாகவும் பார்க்க வேண்டிய தேவையையும் ஒரு சிலர் ஆய்வுப் பரப்பில் முன் வைத்திருக்கின்றார்கள்.
இனப்படுகொலையை திரைப்படத்தில் பிரதிநிதித்துவப்படுத்தல் என்பது முற்றிலும் இயலாத காரியம். இனப்படுகொலையின் கொடூரம் மொழிக்கு அப்பாற்பட்டது. மொழிகளுக்கூடாக இனப்படுகொலையை கட்டமைத்தல் அபத்தமும் கூட, அந்த மொழி, பேச்சு மொழியாக, காட்சி மொழியாக, அனுபவ மொழியாகக் கூட இருக்கலாம். அதனால் தான் Elie Wiesel கூறுகின்றார், ‘அவுஸ்விட்சுக்கு பின்னர், அவுஸ்விட்சை மீள யாருமே சொல்ல முடியாது’, என்று. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மொழிக்கூடாக இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்தல் இனப்படுகொலை கொடூரத்தை நலிவடையச் செய்வதற்கான சாத்தியம் உள்ளதென இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எதைக் காண்பிப்பது, எதைக் காண்பிக்க கூடாது என்கின்ற, அந்தந்த புலமை சார்ந்து , சிக்கல் எழுகின்றது? எதை? எப்படி? எவ்வாறு காண்பிப்பது என்கின்ற முரண்பாட்டுச் சிக்கல் எழுகின்ற போது உருவாக்குவது எதற்காக என்ற நோக்கம் எழுவது இயல்பு.
சிறிலங்கா அரசு மறுப்புவாத கட்டமைப்பை எவ்வாறு கட்டமைத்தது/கட்டமைகின்றது என்பதையும் குறிப்பாக வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை வைத்தே, அவர்கள் போர்க்களங்களில் வெளிப்படுத்திய உண்மைகளை முரண்பாட்டிற்கு உட்படுத்தி மறுக்கச் செய்தது என்பது ஏற்கனவே தெரிந்த போதும், ஆவணப்படத்தில் அவ் எடுகோள் உறுதி செய்யப்படுகின்றது. பார்வையாளர்கள் இனப்படுகொலையின் நுகர்வோர்களாக மட்டுமே இருப்பார்களேயானால் பொய்யாவிளக்கின் இலக்கு அடையப்படாமல் போகலாம்.
‘பொய்யா விளக்கு’ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா போன்ற பார்வையாளர்கள் தங்களது பணியிலிருந்து தவறியதையும் நாசூக்காக பதிவிடுகின்றது. அவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களாக இருந்த அனைவரையும் அவர்களது கபடத்தனத்தையும் வெளிக்கொணர்கின்றது.
பின் இனப்படுகொலை உளச்சிக்கல், பின் இனப்படுகொலை வாழ்க்கை, சாட்சியாக சாதாரணமாக வாழ்தலும், சாட்சியை மறுத்து வாழ்தலுக்குமிடையிலான முரண்பாடு, அரசின் மறுப்புப் பொறிமுறைக்குள் உண்மையைக் கூற முயலுதலின் வலியைப் பற்றியும் ‘பொய்யா விளக்கு’ குறிப்பிடுகின்றது.
Average Rating