கூந்தல் : பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்…!! (மகளிர் பக்கம்)
பொடுகு என்பது மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் இருந்து உதிரும் இறந்த செல்கள் என்றும் சொரிந்தால் அதிகமாகும் என்பதையும் பார்த்தோம். வறண்ட சருமமும் பொடுகும் ஒன்றுதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறண்ட மண்டைப் பகுதி மட்டுமின்றி, அதிக எண்ணெய் வழிகிற மண்டையும்கூட அதிகப்படியான இறந்த செல்கள் ஒன்று சேர்ந்து, பொடுகுக்குக் காரணமான செதில்களாக உருவாகக் காரணமாகும்.
வறண்ட மண்டைப் பகுதி, செபோரிக் டெர்மடைட்டிஸ், மண்டைப் பகுதியில் ஏற்படுகிற சோரியாசிஸ், அலர்ஜி, க்ராடில் கேப் எனப்படுகிற பச்சிளம் குழந்தைகளுக்கு உருவாகிற பிரச்னை எனப் பலதும் இப்படி பொடுகு செதில்கள் உருவாகக் காரணமாகலாம்.
பொடுகைத் தீவிரப்படுத்தும் காரணிகள்…
பரம்பரைத் தன்மை
பூப்பெய்தும் போது ஏற்படுவது போன்ற ஹார்மோன் மாற்றங்கள்
மதுப்பழக்கம்
அதிக சர்க்கரை, மசாலா மற்றும் உப்பு சேர்த்த உணவுப் பழக்கம்
கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய சத்துகள் குறைபாடு
வானிலை மாறுபாடுகள்
ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.
வறண்ட தன்மைதான் மண்டைப் பகுதியில் செதில்களை உருவாக்கவும் அதிக எண்ணெய் வழிய வைக்கவும் காரணம். மண்டைப் பகுதியின் வறட்சியும் அதன் காரணமாக ஏற்படுகிற பொடுகும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கிடைக்கிற விலை அதிகமற்ற மெடிக்கேட்டட் ஷாம்புகளின் மூலமே குணப்படுத்தக் கூடியவை.
Seborrheic dermatitis என்கிற பிரச்னை மஞ்சள் மற்றும் வெள்ளை நிறச் செதில்களை எண்ணெய் பசை அதிகமிருக்கிற மண்டைப் பகுதி, முகம், காதின் உள்பகுதிகளில் ஏற்படுத்திவிடும். இந்தப் பிரச்னைக்கான துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஹார்மோன் கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, சில சத்துக் குறைபாடுகள், நரம்பு மண்டலப் பிரச்னைகள் என பல பிரச்னைகளின் கலவையாக இருக்கலாம். Malassezia என்கிற ஈஸ்ட் தொற்றும் ஒரு காரணமாகலாம்.
இந்தப் பிரச்னை பரம்பரையாகவும் தொடரக்கூடியது.மன அழுத்தம், எண்ணெய் பசை சருமம் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளின் பின் விளைவு, வானிலை மாற்றங்களும் கூட இந்தப் பிரச்னையை உருவாக்கலாம். மண்டைப் பகுதியையும் கூந்தலையும் சுத்தமாக வைத்திருக்க அடிக்கடி ஷாம்பு குளியல் எடுக்க வேண்டும். ஷாம்பு அல்லது ஸ்டைலிங் ஜெல் உபயோகித்து அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும் அது மண்டைப் பகுதி சருமத்தைப் பாதித்து செதில்களை உருவாக்கலாம். குறிப்பிட்ட ஷாம்பு அல்லது ஜெல் உபயோகித்ததும் இப்படி செதில்களும் பொடுகும் வருவது தெரிந்தால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு முதல் 2 மாதங்களில் ஏற்படக் கூடிய க்ராடில் கேப் என்கிற ஒருவிதப் பொடுகுப் பிரச்னையைப் பற்றியும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது லேசான மஞ்சள் நிறத்தில் எண்ணெய் பிசுக்குடன் காணப்படும். பிறந்தது முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும் இது, குழந்தைக்கு 2 வயதாகும் போது தானாகச் சரியாகி விடும்.மிதமான பொடுகுப் பிரச்னை ஒரு மாதத்துக்கு வாரம் ஒன்று அல்லது 2 முறைகள் மெடிக்கேட்டட் ஷாம்பு உபயோகித்தாலே சரியாகிவிடும்.
செலினியம் சல்ஃபைடு அல்லது கீட்டோகொனோ சோல் அடங்கிய ஷாம்புவும் பலன் தரும். ஆனால், ஒருநாள், இரண்டு நாட்களில் முடிவுக்கு வருகிற பிரச்னை அல்ல அது. தொடர் சிகிச்சை தேவைப்படும். திடீரென நிறுத்தினால் மீண்டும் வரும்.இத்தனைக்கும் கட்டுப்படாத பொடுகு என்றால் ட்ரைகாலஜிஸ்டை சந்தித்து, முறையான சோதனையின் மூலம் காரணங்களைத் தெரிந்து, சிகிச்சை எடுப்பதுதான் தீர்வு.
Average Rating