மந்திரப் பெட்டகம்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 28 Second

மனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகிறது. மூளை எத்தகைய ஆற்றலுடையது, மூளையின் முழுமையான சக்தி என்ன, அதன் செயல்திறன் என்ன என்பது பற்றி அறிய முற்பட்டு பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தோற்றுப்போய் உள்ளனர்.

‘மூளையை பற்றி இப்போது எங்களுக்கு தெரிந்து இருப்பதைவிட இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது’ என்று விஞ்ஞானிகள் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், மனித மூளையின் ஆற்றலை ஒரு எல்லைக்குள் வகுப்பது இயலாத ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்னும் விழிப்புணர்வு விளையாட்டு உலகம் முழுவதும் மிகப்பரவலாக பேசப்பட்டது. பில்கேட்ஸ் முதல் அமிதாப்பச்சன் வரை உலகின் முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மோட்டார் நியூரான் டிசீஸ்(Motor neuron disease) என்னும் நரம்பியல் நோயினை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மறைந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இந்த மோட்டார் நியூரான் நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால் அவரது கைகால்கள் செயலிழந்தது. வாய் பேச முடியாமல் போனது; உடல் இயக்கமின்றி, ஆயுள் முழுவதும் ஒரு வீல் சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கிப் போனது. ஆயினும் மனம் தளராமல் தன்னம்பிக்கையின் உதவிகொண்டு அவரது மூளையின் திறனை முடிந்த அளவில் பயன்படுத்தினார். அதன் எதிரொலியாக அபரிதமாக வேலைசெய்து ப்ளாக் ஹோல் தியரி என்னும் காஸ்மிக் கோட்பாட்டினை உலகிற்கு எடுத்துச் சொல்ல வைத்தது. அவரது சிந்திக்கும் திறனை கண்கள் மூலம் மின்னலைகளாக கணினியில் பதிவேற்றி இச்செயலை சாத்தியப்படுத்தினார்.

அவரது இறப்பிற்குப் பின்பு பிளாக் ஹோல் என்பது உண்மையாகவே உள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளை என்னும் மந்திர பெட்டகத்தின் அளப்பரிய ஆற்றலுக்கு ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு, பியானோ இசைக்கலைஞரான ‘லிடியன் நாதஸ்வரம்’- பெயரே சங்கீதமாக இனிக்கிறது., அமெரிக்காவில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் இந்த 12 வயது குழந்தையின் பியானோ வாசிக்கும் ஆற்றலைக் கண்டு உலகமே அதிசயித்தது. ‘பிளைட் ஆஃப் தீ பம்பிள்பீ என்னும் இசையை பியானோவில் சாதாரணமாக வாசித்துக் காண்பித்து விட்டு பின்பு பல மடங்கு வேகத்தில் அதாவது 207 பீட்ஸ், 325 பீட்ஸ் என்ற உச்ச வேகத்தில் வாசித்து அசத்தினார்.

இப்படி ஒரு இசை வாசிப்பை இதுவரை பார்த்ததில்லை என்று சங்கீத சான்றோர்களே ஆச்சரியமாகக் கூறுகின்றனர். பள்ளிக்கே செல்லாத பாலகனின் இசை ஆற்றலை என்னவென்று சொல்வது?! நமது மூளை இரு அரைக்கோளங்களாக அமைந்திருக்கும். இதற்கு வலது மற்றும் இடது பெருமூளை என்று பெயர். இசை, கலை, கற்பனைவளம், படைப்பாற்றல் இவை அனைத்தையும் நிர்ணயிப்பது வலது பக்க மூளை, மொழித்திறன், பகுத்தறிதல், கணிதத் திறன் ஆகியவற்றை இடதுபக்க மூளை நிர்ணயிக்கும். கலையும், இசை ஆற்றலும் உள்ளவர்களுக்கு வலது பக்க மூளையின் செயல் திறன் அதிகமாக உள்ளதாகவும், கார்பஸ் கலோசம் என்னும் மூளையை இணைக்கும் பகுதி பெரியதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

நமது இசைஞானி இளையராஜா அசாதாரணமாக இசை கோர்வைகளை எழுதுவதற்கும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது இசையை ஒரு நூலிழை போல் நெய்வதற்கும் அவர்களது வலது பக்க மூளையே, முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதிக்கமும் அதிகாரமும் உடையவன் நானா? நீயா? வலது Vs இடது மூளை மொழித்திறனே ஆதிக்கத்தை(Dominant Hemisphere) நிர்ணயிக்கும் பகுதி. வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு மொழித்திறன் பகுதி இடதுபக்க மூளை அரைக்கோளத்தில் உள்ளதால், இடது மூளையே 100 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கும் 70 சதவீதம் இடது மூளையிலேயே மொழித்திறன் பகுதி அமையப் பெற்றிருப்பதால் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது. மீதம் 30 சதவீதம் உள்ள இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலதுபக்க மூளை ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது.

‘மொழித்திறன்’ என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல, படிப்பது, எழுதுவது, நகலெடுப்பது(copying), திரும்பக் கூறுவது(repetition) புரிந்துகொள்வது என்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இதுபோன்ற ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் தனித்தனி இடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் மொழித்திறன்(Language area) பகுதி என்பது. ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாத நோயினால் மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு வலதுபக்க கையும் காலும் அல்லது இடது பக்க கையும் காலும் செயலிழந்து போகும். இவர்களில் இடதுபக்க ஓரத்தில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் பக்கவாதத்துடன் சேர்ந்து மொழித்திறனும் செயல் இழந்து விடுகிறது.

அதனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பேச முடியாமல் எழுத முடியாமல் போகிறது. இதற்கு அபேஸியா(Aphasia) என்று பெயர். மனித மூளையில் பல்லாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. மூளையின் வெளிப் பரப்பு சாம்பல் நிறத்திலும்(Grey matter) உள்பகுதி வெள்ளை நிறத்திலும் (White matter) இருக்கும். சுமார் 75 சதவிகித நியூரான்கள் சாம்பல் நிற பகுதியில் புளி மூட்டையில் அடைத்து வைத்தது போன்று நெருக்கமாக இருக்கும். இவை கிட்டத்தட்ட 1000 கோடி முதல் 10,000 கோடி வரை இருக்கும். நியூரான்களில் இருக்கும் பெரிய வால் போன்ற பகுதி ஆக்சான்(Axon) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆக்சானைச் சுற்றி மயலின் உறை படர்ந்திருக்கும். இந்த மயலின் உறையே மூளையின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதற்கு காரணம். நியூரான்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதே இல்லை. ஒரு நியூரானுக்கும் இன்னொரு நியூரானுக்கும் உள்ள தகவல் பரிமாற்றம் நியூரான்களுக்கு இடையே உள்ள சைனாப்ஸ்(Synapse) என்னும் பகுதியில் ரசாயன பரிமாற்றமாக நடைபெறுகிறது. பருவ வயதுள்ள ஆண்களின் மூளையில் உள்ள மயலினில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கிலோமீட்டர், அதே பெண்ணின் மூளையில் உள்ள மயலின் நரம்பு களின் நீளம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோமீட்டர். மனித மூளை ஒரே மாதிரி இருப்பதில்லை.

பிறக்கும்போது இருப்பதைவிட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. சராசரி மனித மூளையின் எடை ஒன்றரை கிலோகிராம்; ஆண்கள் மூளையின் சுற்றளவு 1660 கன சென்டிமீட்டர்; பெண்கள் மூளையின் சுற்றளவு 1130 கன சென்டிமீட்டர்.மூளையின் அளவிற்கும் புத்திசாலித்தனத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. மூளையின் வெளிப்புறத்தில் சாம்பல்(Gray matter) பகுதியில் பள்ளம்(Sulcus), மேடுகள்(Gyri) காணப்படும். இவையே புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கிறது பள்ளியில் என்னுடன் படித்த சக மாணவி 1330 திருக்குறளையும் 40 நிமிடங்களில் அசாதாரணமாக சொல்லிவிடுவார். மேலும், எண் நினைவாற்றல் என்னும் கவனககலையில் தனது நினைவாற்றலினால் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கூட ஆச்சரியப்படுத்துவார்.

நரம்பியல் நிபுணராக இப்போது அதனை எண்ணிப் பார்க்கும்போது மூளையின் ஆற்றலை சிறுவயதிலேயே எவ்வளவு அழகாக பயன்படுத்தியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே மூளையின் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். நம் மூளையைத் தூண்டும் செயல்களின் மூலமாகவே நமது புத்திசாலித்தனம் அதிகரிக்கும் என்கிறது அறிவியல் உலகம். நினைவாற்றலை அறிவியல்பூர்வமாக மூன்று வகையாக பிரிக்கின்றனர். அவை மிகக் குறுகிய கால நினைவாற்றல்(Short term memory), வேலை செய்யும் நினைவாற்றல்(Working/Recent memory), நீண்ட கால நினைவாற்றல்(Long term Memory) என்பதாகும்.

இதில் மிகக் குறுகிய கால நினைவாற்றலுக்கான இடம் முன்பக்கமூளையின் முன்மடலில்(Pre-frontal lobe) அமைந்துள்ளது. சமீபத்திய நினைவுகளை உள்ளடக்கிய நினைவாற்றல் பக்கமடலில்(Temporal lobe) அமைந்துள்ளது. நீண்ட கால நினைவுகள்(long-term memory) மூளையின் வெளிப்புறத்தில்(Cortex) உள்ள சாம்பல் நிறப் பகுதியில் புரதமாக உருமாறி பாதுகாத்து வைத்துக் கொள்ளப்படுகிறது. பிராட்மேன் என்பவர் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக பிரித்து பெயரிட்டுள்ளார். மூளை அரைக்கோளங்களையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பகுதிக்கு மூளைதண்டு(Brain Stem) என்று பெயர். இந்த மூளைத்தண்டின் பின்பகுதியிலேயே சிறு மூளை உள்ளது.

( நலம் பெறுவோம் !)

கடந்த அக்டோபர் 30-ம் தேதி அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் ஜென்னா ஸ்கார்ட் என்னும் 25 வயது பெண்மணிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறையின் ஒரு பகுதியை மருத்துவர்கள் முகநூலில் நேரிடையாக ஒளிபரப்பினர். இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும்போது ஜென்னா முழுவதுமாக விழித்திருந்ததையும், மருத்துவர்களுடன் உரையாடியதையும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்தார்கள்.
ஸ்கார்ட்டுக்கு அவரது மூளையின் இடது தற்காலிக மடலில்(Left temporallobe) அதிகப்படியான ரத்த நாளங்கள் இருந்ததன் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, பேசும் திறனை பாதித்தது.

ஜென்னாவிற்கு அறுவை சிகிச்சை செய்த நரம்பியல் மருத்துவரான நிமேஷ் படேல், தன் அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது அறுவை சிகிச்சையின்போது ஜென்னா விழித்திருந்து பேசியதன் மூலம், பேச்சைக் கட்டுப்படுத்தும் அவரது மூளையின் பாகங்களை சேதப்படுத்தவில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக நம்ப முடிந்தது. மேலும் ஸ்கார்ட் ஜென்னா தொழில்சார் சிகிச்சையை(Occupational therapy) பயின்று வருகிறார். தன் அறுவை சிகிச்சை அனுபவத்தைத் தன் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்த விரும்பியதன் அடிப்படையிலேயே முகநூலில் நேரடியாக ஒளிபரப்பியதாக சொல்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க!! (மருத்துவம்)
Next post கண்ணை என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)