நெஞ்சமுண்டு… நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 44 Second

‘‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நான் ரேசர் காருடன் தான் விளையாடி இருக்கிறேன். சின்ன வயசில் ரேசர் கார் பொம்மையை மட்டும் தான் அப்பாவிடம் வாங்கி தரச்சொல்வேன். இப்போது அதுவே என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது’’ என்கிறார் சேத்தன் கோரோடா. ‘‘சொந்த ஊர் ஆந்திரா என்றாலும், நான் பிறந்தது படிச்சது எல்லாம் சென்னையில் தான். நான் பிறந்த போதே பிரச்னையுடன் தான் பிறந்தேன். அதாவது என்னுடைய கால்கள் சரியான முறையில் வளரவில்லை. அதன் வளர்ச்சியே அப்நார்மலாதான் இருந்தது. இப்படியே இருந்தால் பிற்காலத்தில் என்னால் நடக்கவே முடியாமல் போகலாம். அல்லது வேறு பிரச்னைகள் ஏற்படலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார். மேலும் காலம் முழுக்க நான் சக்கர நாற்காலியில் தான் பயணிக்கணும்.

அதற்கு இரண்டு கால்களையும் வெட்டி எடுத்துவிட்டு அதற்கு பதில் செயற்கை கால்களை பொறுத்திடலாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார். அந்த சமயத்தில் என்னுடைய பெற்றோர் மனம் தளராமல், அவரின் முடிவை ஏற்றுக் கொண்டனர். என்னுடைய ஒரு வயசிலேயே என் இரண்டு கால்களும் வெட்டி எடுக்கப்பட்டது. நடக்க பழகும் காலத்தில் இருந்தே நான் செயற்கைக் காலுடன் தான் நடந்தேன்’’ என்றவர் இன்று பார்முலா கார் ரேஸ் விளையாட்டில் பல வெற்றிகளை சந்தித்துள்ளார். ‘‘சின்ன வயசில் இருந்தே செயற்கைக் காலுடன் வளர்ந்ததால் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியல. இது தான் என்னுடைய கால்கள் என்று நான் நம்ப ஆரம்பித்துவிட்டேன். சிந்தடிக் முறையில் என் கால்கள் அமைக்கப்பட்டு இருந்ததால் பார்க்கும் போது நிஜக் கால்கள் போல தான் இருக்கும். அதனால் நான் யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க பழகினேன். மேலும் நான் வளர வளர மூணு வருஷத்துக்கு ஒரு முறை என்னுடைய கால்களை மாற்றணும்.

மேலும் என்னுடைய முட்டிகளில் லிகமென்ட் கிடையாது என்பதால், மற்றவர்கள் போல் எளிதாக என்னால் முட்டி பகுதியை நீட்டவோ மடக்கவோ முடியாது. ஓரளவுக்கு தான் என்னால் அதை அசைக்க முடியும்’’ என்றவர் 20 வயதில் தான் பார்முலா காரில் முதன் முதலில் பயிற்சி எடுத்துள்ளார். ‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ரேஸ் கார்கள் மேல் தனி கிரேஸ்ன்னு சொல்லலாம். அந்த கார்களை பார்க்கும் போது எல்லாம் எப்படியாவது நானும் ஒரு ரேசரா வரணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனால் இதற்கிடையில் நான் ஹேர்ஸ்டைலிஸ்ட், டி.ஜேவாக எல்லாம் வேலைப் பார்த்து இருக்கேன். ஆனால் அப்போது கார் ரேசிங் தான் என்னுடைய எதிர்காலமாக மாறும்ன்னு நினைக்கவில்லை. 12 வயசு இருக்கும் போது தான் எனக்கு கார் ரேசுக்கான டிராக் இருப்பதே தெரியவந்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக என்னால் அப்போது அதற்கான பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை. ஆனால் எப்படியாவது அதில் பங்கு பெற வேண்டும் என்று மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

அதனால் வேலைக்கு நடுவே கேகார்ட் டிராக்கில் கார்களை ஓட்டி பழக ஆரம்பிச்சேன். 20 வயதில் தான் முதல் முறையாக நான் டிராக்கில் ஓட்டினேன். ஒரு முறை ரேஸ் நடக்கும் டிராக்கினை பார்க்க போன போது, அன்று யார் வேண்டும் என்றாலும் பார்முலா காரினை ஓட்டலாம்ன்னு சொன்னாங்க. முதலில் எனக்கு தயக்கமா இருந்தது. என்னால் அதில் உட்கார முடியுமா, அப்படியே உட்கார்ந்தாலும் ஓட்ட முடியுமான்னு கொஞ்சம் தயக்கம் இருந்தது. முடிந்தால் ஓட்டலாம்ன்னு தான் காரில் அமர்ந்து ஓட்டினேன். ஒரு ரவுண்ட் ஓட்டிய பிறகு என்னால் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அப்படித்தான் ஆரம்பமாச்சு. நான் இப்ப ஒரு ரேசரா இருக்க என் அம்மாவும் முக்கிய காரணம். அவங்க தான் என்னால் செய்ய முடியும்ன்னு ஊக்கம் அளிச்சாங்க.

ஆரம்பத்தில் எனக்கு பயிற்சியாளர்கள்ன்னு யாரும் கிடையாது. எனக்கு சாதாரண கார் ஓட்ட தெரியும் என்பதால், அந்த அனுபவத்தை கொண்டு இதையும் செலுத்தி வந்தேன். ஆதனால் என்னால் பெரிய அளவில் இதில் வெற்றி பெறமுடியவில்லை. அக்பர் இப்ராஹீம், பார்முலா 3 சாம்பியன் அவர்கள் சென்னையில் இது குறித்து இரண்டு நாள் ஒர்க்‌ஷாப் நடத்தினார். அதில் பங்கு பெற்ற போது தான் இந்த விளையாட்டில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதன் பின் நடைபெற்ற சம்மர் கேம்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றேன். தற்போது விக்கி சந்தோக் என் வாழ்வில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரின் ஊக்கம் மற்றும் முயற்சியால் நான் பல போட்டிகளில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் நடைபெற்ற போடியில் விளையாட வாய்ப்பு கிடைச்சது’’ பயிற்சியின் போது ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார்.

‘‘நான் முதன் முதலில் ஓட்ட பழகியது ஃபார்முலா ஒன் கார் தான். எனக்கு சாதாரண கார் ஓட்ட தெரியும். ஆனால் இதை ஓட்டும் போது வித்தியாசமாக இருந்தது. இதன் வேகம் மற்றும் கியர் மாற்றுவது எல்லாம் ஸ்மூத்தா இருக்காது. அதே போல் 80 கிலோ எடை அளவு அழுத்தம் கொடுத்து பிரேக் போட்டால் தான் காரின் வேகத்தை குறைக்க முடியும். கார் பயிற்சி எடுக்கும் போது நம்முடைய எடையும் கணிசமாக குறையும். காரணம் அதில் இருந்து வெளியாகும் உஷ்ணம். பார்முலா ரேஸ் கார்களில் நம்முடைய முதுகு பகுதியில் தான் பெட்ரோல் டேங்க் மற்றும் என்ஜின் இருக்கும். கார் ஓட்டும் போது அதில் இருந்து வெளியாகும் உஷ்ணம் நம் உடலில் உள்ள நீர் அளவினை குறைத்திடும். இதனால் பயிற்சி காலத்தின் போது நம்முடைய உடல் எடை குறைய வாய்ப்புள்ளது’’ என்றவர் அடுத்த ஜி.டி கார் பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘பார்முலா ஒன் காரில் ஒருவர் மட்டுமே தான் உட்கார முடியும். இது தரையோடு தரையாகதான் இருக்கும். அதில் நாம் மட்டும் தான் அமர முடியும். ஆனால் ஜி.டி கார் சாதாரண கார் போலத்தான் இருக்கும். இதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்தும் படி அமைக்கப்பட்டு இருக்கும். நான் இந்த காரை தேர்வு செய்ய காரணம் இதில் கால் வைக்க கொஞ்சம் சவுகரியமாக இருக்கும். அதனால் தான் நான் இந்த காரினை தேர்வு செய்து இருக்கேன். மேலும் நான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், காரை என் சவுகரியத்திற்காக நான் மாற்றி அமைக்க வில்லை. சிலர் ஸ்டியரிங்கை மற்றும் பிரேக்கை கைகளில் போடுவது போல் அமைச்சு இருப்பாங்க.

நான் எந்த மாற்றமும் அமைக்கவில்லை. அப்பத்தான் மற்றவங்க ஓட்டும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்வை புரிந்து கொள்ள முடியும். இந்த விளையாட்டு கொஞ்சம் டேஞ்சர் தான். இருந்தாலும் மாற்றுத்திறனாளியான நான் என்னால் சாதிக்க முடியும் போது, மற்றவர்களாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படும்’’ என்றவர் ரேசிங் சிமுலேட்டர் கொண்டு பயற்சி எடுத்து வருகிறார். ‘‘இந்த விளையாட்டே கொஞ்சம் காட்சிலியானது தான். டிராக்கில் கார் ஓட்டி பயிற்சி எடுக்க ஒரு கட்டணம் செலுத்தணும். அப்பத்தான் அதில் ஓட்ட முடியும், மேலும் இதற்கான கட்டணமும் அதிகம் என்பதால் நான் வீட்டிலேயே ரேசிங் சிமுலேட்டர்க் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். இந்தாண்டு கண்டிப்பாக இரண்டு சர்வதேச அளவு பதக்கங்களை வெல்ல வேண்டும்’’ என்றார் தன்னம்பிக்கையுடன் சேத்தன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வதைமுகாம் விடுவிக்கப்பட்டு 76 வருடங்கள்!! (கட்டுரை)
Next post இது சில்ட்ரன் டயட்!! (மருத்துவம்)