தீபாவளி ஸ்பெஷல் ஃபேஷியல்!! (மகளிர் பக்கம்)
இந்த வார்த்தையை அறியாத பெண்களே இருக்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என எல்லோருக்கும் மிகப்பிடித்த அழகு சிகிச்சை இது. வருடம் தவறாமல் ஹெல்த் செக்கப் செய்து கொள்கிறார்களோ இல்லையோ, மாதம் தவறாமல் பார்லர் போய் ஃபேஷியல் செய்து கொள்வதை மிஸ் பண்ணாத பெண்களே பெரும்பான்மை. வேறு எந்த அழகு சிகிச்சைக்காகவும் பார்லர் பக்கம் போகாதவர்கள், ஃபேஷியலுக்கு மட்டும் போவதாகச் சொல்வதையும் கேள்விப்படலாம்.
ஃபேஷியல் செய்தால் அழகும் இளமையும் கூடும் என்பது அவர்களது நம்பிக்கை.ஃபேஷியல் அப்படியென்ன அவசியமான அழகு சிகிச்சையா? யாருக்கெல்லாம் அவசியம்? ஃபேஷியலின் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன? தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல். கூடவே இந்த தீபாவளிக்கு பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெறப் போகிற இரண்டு புதிய ஃபேஷியல்கள் பற்றியும் பேசுகிறார்.
ஃபேஷியல் ஏன் அவசியம்?
தினம் 3 வேளைகள் சாப்பிடுகிறோம். 2 வேளைகள் பல் துலக்குகிறோம். அவையெல்லாம் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை எனத் தெரிந்துதானே செய்கிறோம். அப்படித்தான் முகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான சிகிச்சை ஃபேஷியல். சருமத்தின் செல்கள் எப்போதும் வளர்ந்துகொண்டே இருப்பவை. அதைத்தான் நாம் ஏஜிங்… அதாவது, வயதாவது என்கிறோம். செல்கள் வளரும் போது இறந்த செல்கள் மேலே தள்ளப்படும். எனவே, சருமத்தின் வெளிப்புற லேயர் முழுவதும் இறந்த செல்கள் நிரம்பியிருக்கும்.
அது சேரச் சேர, சருமத்தின் ஈரப்பதம் குறைந்து, சொரசொரப்பாக, பளபளப்பின்றி ஆரோக்கியமற்ற தோற்றம் தெரியும். எல்லோருக்கும் தனது சருமம் இளமையாக, வழவழப்பாக, கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதலில் இறந்த செல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கு உதவுவதுதான் ஃபேஷியல்.இளம் வயதில் சருமத்தின் செல் வளர்ச்சி சீராக இருக்கும். எனவேதான் மிகவும் இளம் வயதில் ஃபேஷியல் தேவையில்லை என்கிறோம்.
அதுவே 25 வயதுக்குப் பிறகு இறந்த செல்கள் வெளித்தள்ளப்படுவது வேகமாகவும் நடக்கும். புது செல்களின் வளர்ச்சி குறையும். இறந்த செல்கள் சருமத்தின் உள்ளேயே சேர்வதும் அதிகமாகும். 21 நாட்களுக்கு ஒருமுறை ஃபேஷியல் செய்வதன் மூலம் இறந்த செல்கள் சேர்வதை சரி செய்து, சருமத்துக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கலாம்.ஃபேஷியலில் சருமம் ஆழம் வரை சுத்தப்படுத்தப்படுகிறது. இறந்த செல்கள் ஸ்க்ரப் செய்து அகற்றப்படுகின்றன. பிறகு மசாஜ் செய்து, முகத் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன.
கடைசியாக போடப்படுகிற மாஸ்க், சருமத் தசைகளை டைட்டாக்கி, முழுமையான அழகைத் தருகிறது.20 வயதுக்குப் பிறகு ஃபேஷியலை ஆரம்பிக்கலாம். பொத்தாம் பொதுவாக பார்லருக்கு போய் ஏதோ ஒரு ஃபேஷியலை குறிப்பிட்டு அதைச் செய்து கொள்வது தவறு. அதற்குப் பதில், என்ன தேவைக்காக ஃபேஷியல் செய்யப் போகிறீர்கள்… சருமத்தின் தன்மை எப்படிப்பட்டது… அதற்கு எந்த மாதிரி பொருட்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற தகவல்களை அழகுக் கலை நிபுணருடன் ஆலோசித்து செய்து கொள்வதே சிறந்தது’’ என்கிற வீணா, தீபாவளி ஸ்பெஷல் ஃபேஷியல் பற்றியும் தொடர்கிறார்.
இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது ஃப்ரெஷ் ஃப்ரூட் மாஸ்க்.ஃபேஷியல்களில் பழங்களைக் கொண்டு செய்யப்படுகிற ஃப்ரூட் ஃபேஷியல் ெராம்பவும் ஸ்பெஷலானது. முதலில் முகத்தை பழச்சாறு கொண்டு கிளென்ஸ் செய்வோம். பிறகு ஏதோ ஒரு பழம் கலந்த க்ரீமால் அல்லது பழக்கூழால் மசாஜ் செய்து, கடைசியாக ஃபேஸ்பேக்கில் பழச்சாறு கலந்து பேக் போட்டு எடுப்பார்கள். இப்போது இது இன்னும் நவீனமாக்கப்பட்டு வந்திருக்கிறது.
மாத்திரை வடிவிலான ஒன்றை ஒரு மெஷினுக்குள் போட்டு, கூடவே அவரவர் சருமத்துக்குத் தகுந்த பழத்தையும் போட்டால், இரண்டும் கலந்து முகத்தின் வடிவிலேயே கொலாஜன் மாஸ்க்காக வெளியே வரும். அதில் கண்கள், மூக்கு, வாய் பகுதிகளில் மட்டும் இடைவெளி விடப்பட்டிருக்கும். ஃப்ரூட் ஃபேஷியல் முடித்ததும், கடைசியாக இந்த மாஸ்க்கை முகத்தில் போட வேண்டும். இது உடனடியாக முகத்துக்கு ஒரு பொலிவைத் தரும்.
பொதுவாக ஃபேஷியல் என்பது செய்த உடனேயே அதன் பலனைக் காட்டாது. அடுத்தடுத்த நாட்களில்தான் அதன் பலன் தெரியும். அவசரமாக ஒரு முக்கியமான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலையில் ஃபேஷியலின் மூலம் இன்ஸ்டன்ட் பலனை எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் இனிமேல் இந்த ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை செய்து கொள்ளலாம். சிலவகை ஃபேஷியல்களை எல்லா வயதினருக்கும் எல்லா வகையான சருமங்களுக்கும் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு சரும நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் லைட்டனிங் ஃபேஷியல், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல் போன்றவற்றை எல்லோருக்கும் செய்ய முடியாது. ஆனால், இந்த ஃப்ரூட் மாஸ்க் ஃபேஷியலை 22 வயது முதல் 65 பிளஸ் வயது வரை யாரும் செய்து கொள்ளலாம். இதில் சரும நிறம் மேம்படும். சருமத்துக்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கும். உடனடி பளபளப்பும் கிடைக்கும்.
ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு குணம் உண்டு என்பதால் அவரவர் சருமத்தின் தன்மை மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற பழத்தில் ஃபேஷியல் செய்யப்பட்டு, மாஸ்க் தயாரிக்கப்படும். உதாரணத்துக்கு அதிக எண்ணெய் வழிகிற சருமத்துக்கு வைட்டமின் ‘சி’ சத்தை கொடுக்கும் வகையில் ஆரஞ்சுப் பழமும், ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியலில் வாழைப்பழமும் பயன்படுத்தப்படும். தீபாவளிக்கு பிரபலமாகியிருக்கிற இன்னொன்று சார்கோல் மாஸ்க்.
சார்கோலா… அப்படின்னா கரியாச்சே… முகத்துல கரியைப் பூசினா என்னாகும்?’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோருக்குமே அவரவர் சரும நிறத்தைவிட இன்னும் ஒரு ஷேடு அதிகம் வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கானது தான் இந்த சார்கோல் மாஸ்க். இதை எந்த ஃபேஷியலுக்கு பிறகும் போட்டுக் கொள்ளலாம்.
ஃபேஷியலுக்கு முன்பிருந்ததைவிட நிச்சயம் ஒரு ஷேடு நிறம் கூடியிருப்பதை உணர வைக்கிற மேஜிக் மாஸ்க் இது. முறையாக ஃபேஷியல் செய்வது எப்படி? வீட்டிலேயே ஃபேஷியல் கிட் வாங்கி செய்து கொள்வது பாதுகாப்பானதா? வீட்டிலேயே எளிமையான முறையில் ஃபேஷியல் செய்வது எப்படி? ஃபேஷியல் தகவல்கள் அடுத்த இதழிலும் தொடரும்.
Average Rating