ஈறுகளையும் பேன்களையும் விரட்ட…!! (மகளிர் பக்கம்)
விதம் விதமான ஹேர் கட்டிலும் ஹேர் ஸ்டைலிலும் கலக்குவார்கள். பக்கத்தில் போய்க் கவனித்தால் தலை முழுக்க ஈறுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். பேன்கள் ஓடி விளையாடும். படித்த, நாகரிகமான பெண்களேகூட பலர் இப்படித்தான் முகம் சுளிக்க வைக்கிறார்கள். பக்கத்தில் போனால் ஒட்டிக் கொள்ளும் என இப்படிப்பட்ட பெண்களைத் தவிர்த்து, தள்ளி நிற்கவே விரும்புவார்கள் எல்லோரும்.
ஈறுகளையும் பேன்களையும் விரட்ட…
ஈறு, பேன் பிரச்னை என்பது ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிற விஷயம். கொஞ்சம் விழித்துக் கொண்டால் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதும் சுலபம். Pediculus humanus capitis என்பதே கூந்தலில் வரும் பேன்களின் அறிவியல் பெயர். இதன் தாக்கம் 3 முதல் 10 வயதுக் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். அவர்களது குடும்பத்தாருக்கும் அப்பிரச்னை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கே பேன் பிரச்னை அதிகமிருக்கிறது.
ஒருவருக்கு பேன்கள் இருந்தால், அவரது தலையில் இருந்து இன்னொருவருக்கு நேரடியாகவே அவை பரவும். உடலில் இருக்கிற இன்னொரு வகை பேன்கள் உள்ளன. P.humanus coporis எனப்படுகிற அவை உடம்பிலிருந்து உடம்பு தாவக்கூடியவை. பேன்கள் இருக்கும் நபரின் உடைகள், உடைமைகள் போன்றவற்றின் மூலம் பரவும். இது தவிர அந்தரங்க உறுப்புகளைத் தொற்றிக் கொள்ளும் பேன்கள், பெரும்பாலும் உடல் நெருக்கத்தின் மூலம் பரவக்கூடியவை.
தலையில் வாழ்கிற பேன்களுக்கு மனிதர்களின் ரத்தம்தான் உணவு. அரிப்பு இவற்றின் இருப்புக்கான பொதுவான அறிகுறி. பெண் பேனானது 3 முதல் 4 மி.மீ. நீளமும், ஆண் பேன்கள் சற்றே சிறியனவாகவும் இருக்கும். பேன்களின் நிறமானது மனிதர்களின் சரும நிறத்தைப் பொறுத்து வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கலாம். தனது வாழ்நாளான ஒரு மாதத்தில் தினமும் 7 முதல் 10 முட்டைகளை ஈணும்.
அவற்றைத்தான் ஈறுகள் என்கிறோம். அவையே பேன்களாக உருமாறுகின்றன. முழுக்க வளர்ந்த பேன், ஒரு எள்ளின் அளவில் இருக்கும். ஊசி போன்ற வாய்ப்பகுதியால் தலைச் சருமத்தில் துளை போட்டு, ரத்தத்தை உறிஞ்சி உணவாக்கிக் கொள்ளும். பேன்களும் ஈறுகளும் ரத்தத்தை உறிஞ்சி, தமது உமிழ்நீரை உள்ளே செலுத்தும். அதன் விளைவால் அரிப்பும், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றும் ஏற்படும். இவை கடித்ததும் முதலில் அந்த இடம் சிவந்து போகும். அரிப்பு இருக்காது. ஒரு வாரத்துக்குப் பிறகே அரிப்பு ஏற்படும். அதையடுத்து தலையில் பருக்கள் மாதிரியான சிவந்த தடிப்புகளும் ஏற்படும்.
உங்கள் ட்ரைகாலஜிஸ்ட் உங்கள் தலையில் உயிருடன் உள்ள ஈறு அல்லது பேனை எடுத்து சோதித்து அதன் பாதிப்புகளைக் கண்டறிவார். Bug Buster என்கிற முறையில் அவை கண்டுபிடிக்கப்படும். அரிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு அரிப்பே இருக்காது. சிலருக்கு 3 வாரங்களுக்குப் பிறகு அது அதிகமாகும். அரிதாக சிலருக்கு கொப்புளங்கள் நிறைந்த சரும நோயையும், சீழ் கட்டிகளையும்கூட ஏற்படுத்தும். மிக அரிதாக சிலருக்கு நிணநீர் சுரப்பிகளில் வீக்கமும் காய்ச்சலும் வரலாம்.
சிகிச்சைகள்
கெமிக்கல் கலந்த பொருட்களை உபயோகிப்பது, தலையை மொட்டை அடிப்பது, சிலிக்கான் கலந்த லோஷன்கள் உபயோகிப்பது என ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக மெடிக்கேட்டட் ஷாம்பு உபயோகித்து இவற்றை விரட்டுவதுண்டு. ஈறுகளை நீக்கவென்றே கிடைக்கிற சீப்புகளை வைத்து அவற்றை எடுக்கலாம். அதிகபட்ச வெப்பத்தில் துணிகளை துவைத்து உபயோகிப்பதன் மூலம் உடலில் வருகிற பேன்களில் இருந்து விடுபடலாம். சுரப்பிகளில் ஏற்படும் அழற்சி போன்று அறிகுறிகள் தீவிரமானால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளலாம். அகற்ற முடியாத அளவுக்கு ஈறுகளும் பேன்களும் பெருத்துப் போயிருந்தால் மொட்டை அடிப்பதன் மூலமே தீர்வு கிடைக்கும்.
தடுப்பு முறைகள்
குழந்தைகளின் தலையை தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஈறுகளோ பேன்களோ தென்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே கவனிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் அடுத்தவருக்குப் பரவாமல் தடுப்பதும்கூட எளிதாகும். குழந்தையின் தலையில் அரிப்பு அதிகமிருப்பதைப் பார்த்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் ட்ரைகாலஜிஸ்ட்டிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம்.
Average Rating