“இதோ இன்னொருவர்” புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறித்து.. -ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
அன்றாட செய்திகளிலும் மனித வாழ்விலும் “போராளி” என்ற சொல் அடிக்கடி வந்துபோகின்றது. என்றபோதிலும், இதன் கருத்து பலருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. போராளிகள் என்ன செய்கிறார்கள்?, அவர்களது இயல்பு எப்படிப்பட்டது? என்பது ஒருவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்தக்கேள்விக்குரிய பதில் அவர்களும் சாதரண மக்களைப் போன்றவர்களே. அண்மையில் புதுடில்லியில் இருக்கும் சமாதானம், (அரசியல்) மோதல் பற்றிய ஆய்வு நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒரு அமைதியான, நடுத்தர வயதுடைய ஒருவரைச் சந்தித்தேன்.
அவர் மிகவும் மென்மையாக பேசியதுடன், மிக இலகுவாகவும் சிரித்தார். அவர் ஒரு கல்லூரி ஆசிரியர் போன்று தென்பட்டார். இறுதியாகத்தான் தெரிந்தது அவர் ஒரு நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு போராளிக் குழுவின் தலைவர் என்று.
த.சித்தார்த்தன் -தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் தலைவர். அவருக்கு புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சிறுவயதிலிருந்தே தெரியும். இவர்கள் இருவரும் ஒரு காலகட்டம் வரை – அதாவது அவர்களது நோக்கங்களும் பாதைகளும் வேறுபட்டு போகும்வரை – நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் பின்பு புளொட் அமைப்புடன் இணைந்து கொண்டார்.
1980ல் முன்னாள் புலிகள் அமைப்பின் தலைவர் முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியின் பின், முகுந்தன் (உமாமகேஸ்வரன்) பிரிந்து சென்று நிறுவிய அமைப்புத்தான் புளொட். 1982ல் முகுந்தனும் பிரபாகரனும் சென்னையிலுள்ள வீதிகளில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இருவரும் காயங்கள் ஏதுமின்றி தப்பியபோதும், தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதன் பின்பு புலிகள் அமைப்பு இலங்கையில் செயல்பட்ட ஏனைய பிரிவினைவாத குழுக்களுடன் குரூரமான யுத்தத்தை நடத்தியது. புளொட் உட்பட சகல இயக்கங்களையும் அது அழித்தது. 1986ம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள காட்டின் அரசன் யார் என்பதுபற்றி சந்தேகம் இருக்கவில்லை.
இந்த சூழ்நிலை புளொட் அமைப்பின் தலைவர்களை சிந்திக்க வைத்தது. எங்கோ ஒரிடத்தில் தங்களுக்கு ஒரு தளம் தேவையென்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இலங்கையின் ஏனைய பகுதிகளில் இலங்கை அரசபடைகள் ஆதிக்கம் செலுத்தின. அதனால் (புளொட் அமைப்பினர்) மாலைதீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீர்மானித்தனர்.
1988 நவம்பர் 3ம்திகதி, மாலைதீவு அரசோடு முரண்ப்படிருந்தவர்கள் சிலரும், புளொட் உறுப்பினர்கள் 80பேரும் இணைந்து மாலைதீவின் தலைநகர் மலேயில் வந்திறங்கினர். அந்நகரத்தை அவர்கள் நான்கு மணி நேரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததாகவும் சித்தார்த்தன் கூறுகின்றார். மறுநாள் இந்திய கமாண்டோ படையினர் வந்திறங்கியதால், இந்த போராளிகள் தப்பியோட நிற்பந்திக்கப்பட்டனர்.
இந்த போராளிகள் ஒரு தவறைச் செய்து விட்டார்கள் அவர்கள் (அந்நாட்டின்) தொலைத் தொடர்பு வசதிகளை தாக்கவில்லை. அந்த வசதிகளை தாங்கள் பயன்படுத்தும் நோக்குடனேயே அதனை அவர்கள் தாக்காமல் விட்டதற்கு காரணம். இவர்களது துரதிஷ்டம் இவர்கள் யாரைப் பதவியிலிருந்து தூக்கியெறிய திட்டமிட்டார்களோ, அவர்கள் முதலிலேயே அந்த தொலைத்தொடர்பு வசதிகளைப் பாவித்து விட்டார்கள்.
இந்த முயற்சியை பற்றி பேசும்போது சித்தார்த்தன் சிரிக்கின்றார். 1987ல் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்பு இவர்களது அமைப்பு ஆயுதங்களை கைவிட்டது. எனினும், அவர்கள் தற்போது ஆயுதங்களை மீண்டும் கையிலெடுத்துள்ளார்கள். காரணம், அந்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்து விட்டதே.
புளொட் இன்று ஒரு சிறு அமைப்பாகத்தான் செயல்படுகின்றது. சித்தார்த்தன் தற்போது கொழும்பில் தான் வாழ்கின்றார். அவர் ஒரு அரசியல் உழைப்பாளர் போன்று தான் காணப்படுகின்றார். ஆனபோதிலும், சராசரி அரசியல்வாதியை விட, அவர் ஒரு ஒளிவு மறைவற்ற, நேர்மையான மனிதர்.
11.10.2006 இந்தியாவின் பிரபல்யமான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையில் இருந்து..
Thanks…WWW.THENEE.COM