‘பொதுப்பட்டியல்’ யோசனை!! (கட்டுரை)

Read Time:13 Minute, 57 Second

அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலான உரையாடலொன்று ஆரம்பித்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், முதல் காலாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின், வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் வாய்ப்புள்ளது.

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் ஊடாக, 13ஆவது திருத்தத்தை மலினப்படுத்தி, மாகாண சபைகள் என்கிற அலகை இல்லாமல் செய்யும் திட்டத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரின் அண்மைய இலங்கை விஜயம், கோட்டாவின் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் பேணப்படுதல் என்பது, இந்தியாவின் தனிப்பட்ட கௌரவப் பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற நிலையில், மாகாண சபைகளைப் பேணுவதற்கான அழுத்தத்தை, இந்தியா வழங்கி இருக்கின்றது. இதையடுத்து, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் கட்டங்களை நோக்கி, அரசாங்கம் நகர்ந்து இருக்கின்றது.

புதிய அரசியலமைப்பில், மாகாண சபைகள் பேணப்படுமா? சிலவேளை பேணப்பட்டாலும், அவற்றின் அதிகார வரையறை என்ன என்பது தொடங்கி, மாகாண சபைகள் தொடர்பிலான நம்பிக்கையீனமொன்று, தமிழ்த் தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும் நீடித்து வந்தது.

ஆனால், இந்தியாவின் தலையீட்டை அடுத்து, மாகாண சபைகள் தற்போதுள்ள நிலையில் பேணப்படும் என்று இந்தத் தரப்புகள் நம்பத் தொடங்கிவிட்டன. அப்படியான நிலையில், தங்களை மாகாண சபைத் தேர்தலுக்காகத் தயார்படுத்தவும் தொடங்கிவிட்டன.

தமிழ்த் தேசிய கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது என்கிற யோசனை, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், தமிழ் சிவில் சமூக அமையத்தால் முன்மொழியப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையாளத்தினூடாக, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, தமிழ்த் தேசிய கட்சிகள், மாகாண சபை என்கிற கட்டமைப்பை அங்கிகரிப்பதாக அமையும்; அதனால், கட்சி அடையாளங்களுக்கு அப்பால், பொதுப்பட்டியலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அப்போது, மாகாண சபைக் கட்டமைப்பை நிராகரிப்பதாகவும் அதனால் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பொதுப்பட்டியல் யோசனைக்கு ஆதரவு வழங்கியது. இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், பொதுப்பட்டியல் யோசனையை நிராகரித்த நிலையில், தமிழ் சிவில் சமூகத்தின் முக்கியஸ்தர்கள், சி.வி. விக்னேஸ்வரனிடம் அந்த யோசனையோடு சென்றார்கள். ஆனாலும், அப்போது அது சாத்தியமாகி இருக்கவில்லை.

(தமிழ் சிவில் சமூகம், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக பொதுப்பட்டியல் யோசனை முன்வைத்த போதும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், அதைப் பற்றி ஏதும் பேசியிருக்கவில்லை. அந்தத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டது.)

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய வாக்குகள் கணிசமாக இழக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, கூட்டமைப்பு தன்னுடைய வாக்கு வங்கியை 28 சதவீதமாகச் சுருக்கிக் கொண்டு விட்டது. அதனால், ஆறு பாராளுமன்ற ஆசனங்கள் இழக்கப்பட்டு இருக்கின்றன. ஏனைய இரு தமிழ்த் தேசிய கட்சிகளும் கூட, யாழ். தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம், வாக்குகளை ஓரளவுக்குப் பங்கிட்டு, ஒரு தேசிய பட்டியல் உள்ளடங்கலாக, மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்கின்றன.

அவ்வாறான நிலையில், தமிழர் தாயகம் என்கிற அடையாளத்தைப் பேணுவதற்காக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏதாவது ஒரு மாகாணத்திலாவது தமிழ்த் தேசிய கட்சிகள் ஆட்சியமைத்து ஆக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வாக்கு வங்கியுள்ள ஒரே தமிழ்த் தேசிய கட்சி கூட்டமைப்புத்தான். ஆனால், கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை மட்டக்களப்பில் பெற்றாலும், பிள்ளையானும், வியாழேந்திரனும் கூட்டமைப்புக்கு சவால் விடும் அளவுக்கு வெற்றிபெற்றார்கள். அம்பாறையில் கருணா அம்மானிடமே கூட்டமைப்பு தோற்றது. திருகோணமலையைப் பொறுத்தளவில், சம்பந்தனுக்குப் பிறகு வாக்குகளைப் பெறும் தலைவர் ஒருவரை, அங்கு கூட்டமைப்பு உருவாக்கியிருக்கவில்லை.

இப்படியான கட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் போட்டியில் கூட்டமைப்பால் ஈடுபடுவது கடினம். அதிலும், ஆட்சி அமைப்பது இயலாத காரியம். அதனால், தமிழ்த் தேசிய அடையாளம் பேணப்படும் மாகாண சபையாக, வடக்கு மாகாண சபையைத் தக்க வைப்பது, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தரப்புகளுக்கும் இருக்கும் ஒரே தெரிவு.

இந்தப் பின்னணியில், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள், பொதுப்பட்டியலில் ஒன்றிணையும் தேவை தவிர்க்க முடியாதது. ஆனால். இந்தக் காரணம் மாத்திரம்தான், பொதுப் பட்டியல் உரையாடலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று, கண்மூடித்தனமாக யாரும் நம்ப வேண்டியதில்லை.

பொதுப்பட்டியல் யோசனை பற்றிய உரையாடல், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரை, எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலான பொது ஆவணத்தை சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் இணைந்து தயாரித்தார்கள். அந்தத் தருணத்தில்தான், வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய உரையாடல்களின் போது சுமந்திரன், கஜேந்திரகுமாரிடம் பொதுப்பட்டியல் யோசனையைப் பற்றி கேட்டிருக்கின்றார். அதற்கு, கஜேந்திரகுமார், மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராகக் கூட்டமைப்பு முன்னிறுத்தினால், எப்படி பொதுப்பட்டியலில் போட்டியிடுவது? அதற்கு, முன்னணி சம்மதிக்காது என்றிருக்கிறார்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றி, கூட்டமைப்பு இன்னும் இறுதி செய்யவில்லை. அதனால், பொதுப்பட்டியல் பற்றிப் பேசும் சூழல் இருக்கின்றது என்று சுமந்திரன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பின்னணியில்தான், தமிழ்த் தேசிய கட்சிகள் பொதுப்பட்டியலில் போட்டியிடுவது என்கிற விடயம் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில், தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது. கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே. துரைராஜசிங்கம் தொடங்கி, பலரும் மோசமாகத் தோற்றிருக்கிறார்கள். பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லோரும், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தோடு இருக்கிறார்கள்.அதற்காக, வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, மாவையை முன்னிறுத்தத் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், மாவையை முன்னிறுத்துவதன் ஊடாகத்தான், தாங்கள் வேட்பாளர் நியமனங்களைப் பெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தேர்தல் அரசியல் என்பது, பதவிகளுக்கான சூதாட்டமாக மாறிவிட்ட பின்னணியில், மாவையும் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆட நினைக்கிறார்.ஆனால், பின்னடைவைச் சந்தித்துள்ள கட்சியை எப்படி மீட்டெடுப்பது என்பது பற்றி, அவர் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்கவில்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களைக் கூட்டுவதையே அவர் தவிர்த்து வருகிறார்.

அவ்வாறான நிலையில்தான், பொதுப்பட்டியல் என்கிற அஸ்திரத்தின் மூலம், மாவையையும் அவரைச் சுற்றி இருப்பவர்களையும் வீழ்த்த முடியும் என்கிற கட்டத்துக்கு, மாவைக்கு எதிரான அணி வந்திருக்கிறது.

முன்னணியைப் பொறுத்தளவில் ‘கஜன்கள் அணி எதிர் மணி அணி’ என்று செங்குத்துப் பிளவைச் சந்தித்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது, கஜேந்திரகுமாருக்குப் பெரும் சிக்கலாகும்.ஏனெனில், முன்னணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அந்தப் பகுதிகளில் எல்லாமும் மணி அணி இப்போது பலம் பெற்றிருக்கின்றது. அப்படியான நிலையில், தனித்துப் போட்டியிட்டு, அவரின் வாக்கு வங்கியின் வீழ்ச்சியை காட்டிக் கொள்ள, அவர் தயாராக இல்லை. அதன் போக்கில், பொதுப்பட்டியல் விடயத்தை அவரும் விரும்பவே செய்வார்.

தமிழ்த் தேசிய பற்றும், நிர்வாக நடவடிக்கைகளில் துறைசார் அனுபவமுள்ள ஒருவர் வடக்கு மாகாண சபைக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவ்வாறான ஒருவரை தமிழ்த் தேசிய கட்சிகளும் தரப்புகளும் உண்மையிலேயே அடையாளம் கண்டிருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகின்றது.

அப்படி ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொதுப்பட்டியல் விடயம் மேலேழுமாக இருந்தால், அது வரவேற்கக் கூடியதுதான். ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இருக்கும் குழறுபடிகளை எல்லாம் மறந்து, தென் இலங்கையை எதிர்கொள்வதற்குப் பொது இணக்கப்பாடு என்பது அவசியம்.

அண்மையில், ஜெனீவா விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்தது மாதிரி, மாகாண சபைத் தேர்தல் விடயத்திலும் நடந்து கொண்டால், அது பெரிய முன்மாதிரிதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…!! (மருத்துவம்)
Next post உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் ! (வீடியோ)