கூந்தல்!! (மகளிர் பக்கம்)
ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
புற்றுநோய் சிகிச்சையின் போது கூந்தல் உதிர்வதேன்?
கீமோ தெரபி என்பது புற்றுநோய் செல்களோடு, உடல் முழுவதிலும் உள்ள செல்களையும் பாதிக்கக்கூடியது. வாயின் உள்புறம், வயிறு, மயிர்க்கால்கள் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் மிகவும் சென்சிட்டிவானவை என்பதால் அவ்விடங்களில் கீமோதெரபியின் பக்கவிளைவும் தீவிரமாக இருக்கும். கீமோதெரபி ஏற்படுத்துகிற முடி உதிர்வு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை.
கொடுக்கப்படுகிற மருந்துகளின் தீவிரத்தைப் பொறுத்து அது மாறுபடலாம். அதே போல சிலருக்கு கீமோதெரபியின் முதல் சுழற்சி சிகிச்சை ஆரம்பித்த உடனேயே முடி உதிரலாம். சிலருக்கு சில வாரங்களுக்குப் பிறகும் உதிரலாம். சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உதிரலாம், சிலருக்கு முழுவதும் உதிரலாம். கொத்துக் கொத்தாகவோ, சிறிது சிறிதாகவோ உதிரக்கூடும்.
தலையில் மட்டுமின்றி, புருவங்கள், கண் இமைகள், அந்தரங்க உறுப்புகளில் உள்ள முடிகளும் கூட கொட்டிப் போகும்.சிகிச்சை முடிகிற வரை அல்லது சிகிச்சை முடிந்த சில நாட்கள் வரைகூட இந்த முடி உதிர்வுப் பிரச்னை தொடரும். ஆனால், அது நிரந்தரமானதல்ல. புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக உதிர்கிற முடியானது மீண்டும் வளர்ந்துவிடும் என்பதால் அது குறித்த பயம் தேவையில்லை. மீண்டும் வளர்கிற முடியானது நிறம் மற்றும் அடர்த்தியில் முன்பைவிட சற்றே வித்தியாசமாகக் காணப்படலாம்.
கீமோதெரபியை போலவே, புற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற ரேடியேஷன் சிகிச்சையும் முடி உதிர்வைத் தரும். ஆனால், கீமோதெரபியை போல இது ஒட்டுமொத்த முடியையும் கொட்டச் செய்யாது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும்.
முடி உதிர்வைத் தவிர்க்க முடியுமா?
புற்றுநோய் சிகிச்சைகளின் போது கூந்தலைக் காப்பாற்றும் மருந்துகளும் சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை என்பது குறித்த உத்தரவாதங்கள் உறுதியாக சொல்லப்படவில்லை. Scalp hypothermia என்கிற சிகிச்சை முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதாக சொல்லப்பட்டாலும், அந்த சிகிச்சை முறையில் குறிப்பிட்ட இடங்களில் புற்றுநோய் செல்கள் அழியாமல் மீண்டும் வளர்ந்து நோய் திரும்பும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.முன் தயாரிப்புகள் அவசியம்…
‘புற்றுநோய் வந்துவிட்டது… கீமோதெரபிக்கும் ரேடியேஷனுக்கும் தயாராக வேண்டும்’ என்கிற நிலையில் கூந்தல் உதிரப் போகிற யதார்த்தத்தையும் உணர வேண்டும். மருத்துவரிடம் பேசி, கூந்தலை மென்மையாகக் கையாள்கிற முறைகளைக் கேட்டுப் பின்பற்றலாம். முடி உதிர்வின் காரணமாக அதிக சூடு அல்லது அதிக குளிர் என எது பட்டாலும் மண்டைப்பகுதி பாதிக்கப்படும் என்பதால் அதைப் பாதுகாக்கும் வழிகளையும் மருத்துவரிடம் கலந்து பேசலாம்.
சிகிச்சை முடிகிற வரை மண்டைப் பகுதியை துணியால் கட்டி மறைத்துக் கொள்வதும், சிகிச்சைக்குப் பிறகு முடி வளர்கிற வரை விக் உபயோகிப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தையும் வசதியையும் பொறுத்தது.சிகிச்சைக்குப் பிறகும் கூந்தலையும் மண்டைப் பகுதியையும் கையாள்வதில் மென்மையான அணுகுமுறை அவசியம். புதிதாக வளர்கிற முடியானது மிக மென்மையாக இருக்கலாம். பயம் வேண்டாம். காலம் எல்லாவற்றையும் சரியாக்கும்.
Average Rating