‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 33 Second

இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது.

சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊடாக, இனமுறுகலைத் தீர்த்துவிடும் அவாக்கொண்ட பலரதும் மகுடவாசகமாக, இலங்கையர்கள் பலரும் நேசிக்கும் ‘சங்கா’வின் இந்தக் கூற்று உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. நல்லதோர் உரையை, உணர்ச்சிபூர்வமாக முடித்துவைப்பதற்கு ஏற்ற நல்லெண்ணம் தாங்கிய பகட்டாரவாரம் என்றளவில் இது, மிகச்சிறந்ததாகவே கருதப்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசவிளையும் பலரும், குறிப்பாகத் தம்மை நடுநிலைவாதிகளாக, நல்லிணக்கம், மீளிணக்கப்பாடு ஆகியவற்றின் மீட்பர்களாக முன்னிறுத்தும் பலரும், நாம் இனம், மதம், மொழி ஆகிய அடையாளங்களைக் கடந்து ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட பகட்டாரவாரம் என்பதைத்தாண்டி, இந்த நிலைப்பாடுகள் யதார்த்தத்தை உணராதவையாகவும் மீறியவையாகவும் அமைகின்றன என்பதுதான் கசப்பான, ஏற்றுக்கொள்ளக் கடினமான உண்மை.
யதார்த்தத்தில் ஒருநபர் சிங்களவராகவும் தமிழராகவும் முஸ்லிமாகவும், பறங்கியராகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை வெறும் ‘லேபிள்’கள் அல்ல! ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன.

அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை.

ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன.

ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது.

அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த்தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல.

இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல.

‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி.

இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும்.

மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா? அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது?

இது நல்லெண்ணப் பேச்சு. விளைவு பற்றியெல்லாம் ஆராய்வது அவசியமில்லை என்று ‘சிவில்’ தேசியத்தை, வெறும் ‘நற்குண நவிற்சி விளம்பல்’ (virtue signalling) அரசியலாக மட்டுமே வரையறுப்பதானால், மேற்சொன்ன கேள்விகளும் இந்த ஆய்வுகளும் அவசியமில்லாதவை. ஆனால், ‘சிவில்’ தேசியம் என்பது உண்மையில், அடையப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மேற்சொன்ன கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு யதார்த்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதாக இருக்கும்.

இந்த இடத்தில், மாற்று உபாயங்கள் பற்றியும் சிந்திக்கலாம். இனம், மதம், மொழி ஆகியவை சார்ந்த தேசிய அடையாளங்கள், இந்தத் தீவின் மக்கள் கூட்டங்களிடையே ஆழவேர்விட்டுள்ளது. இவ்வாறு, இனம், இன-மதத் தேசங்களாக பிரிந்துள்ள மக்கள் கூட்டங்கள், இந்தத் தீவு யாருக்குரியது என்ற கேள்வியில் முரண்பட்டு நிற்கின்றன.

இனம், மதம் போன்ற அடையாளங்களை, அடையாளப் பிரக்ஞையைத் தகர்த்து, சிவில் தேசத்தைக் கட்டமைப்பது என்பது, யதார்த்தத்தில் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. ஆகவே, இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டிய ‘ஸ்ரீ லங்கன்’ என்கிற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘பன்மைத்தேச’ அரசாக (Plurinational state) இந்தத் தீவைக் கட்டியெழுப்புதல் ஒப்பீட்டளவில் சாத்தியமான ஒன்றாகவே தென்படுகிறது.

இந்த நிலையின் கீழ், ஒவ்வொருவரும் தான் விரும்பும் அடையாளத்தைச் சுவீகரித்துக்கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்குள் வாழும் ஒவ்வொரு தேசமும், தான் சுவீகரித்துள்ள அடையாளத்தையும் அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை, பன்மைத் தேச அரசுக் கட்டமைப்பின் கீழ் காணப்படும்.

இங்கு இனம், மதம் போன்ற தேசிய அடையாளங்கள் துறக்கப்பட வேண்டிய அவசியப்பாடு ஏற்படாது. பன்மைத் தேசிய அரசு, எல்லா அடையாளங்களையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதாக அமையும். இது போன்றதொரு நிலை, இலங்கைத் தீவுக்குப் பொருத்தமானதாக அமையும்.

ஆனால், மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்குரிய அரசியல் விருப்பமும் பலமும் இல்லாவிட்டால், அவை சாத்தியப்படாது. தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம்தான் இங்கு முதற்படி. என்ன வகையான தீர்வு என்ற தெரிவுப் பிரச்சினை, அடுத்த கட்டம்தான்.

ஆனால், இனவெறித் தீக்கு எண்ணையூற்றி அரசியல் செய்யும் இன-மைய அரசியல், அதிலிருந்து விலகி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் வரை, ‘ஸ்ரீ லங்கன்’ என்பது ‘நற்குண நவிற்சி விளம்பல்’ அரசியலாகவோ, தாராளவாதிகளின் கைதட்டும் பாராட்டும் பெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான்!! (அவ்வப்போது கிளாமர்)