உடல் எடைக் குறைப்பு – கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! (கட்டுரை)
2021 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் உறுதிமொழிகள் ஏற்பது வழக்கம். அந்தவகையில் உடல் எடையைக் குறைப்பது தற்போது பெரும் சவாலாக உள்ளது.
நவீன உணவு பழக்கவழக்கங்களால் பலரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதயம், மூளை, நுரையீரல், எலும்புகள், மூட்டுகள், இரத்த நாளங்கள், பித்தப்பை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனிடையே உடல் எடையைக் குறைக்கும்பொருட்டு பலரும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வதும், டயட் உணவு எடுத்துகொள்வதும் சாதாரணமாக மாறி வருகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் முயற்சி செய்யும் அவர்கள் ஒருகட்டத்தில் உடல் எடை குறையாமல் டயட் மற்றும் உடற்பயிற்சியை கைவிட்டு விடுகின்றனர். ஆனால், முயற்சியை கைவிட்டு விடாமல் பொறுமையுடன் பயிற்சி மேற்கொண்டால் உடல் எடையைக் குறிக்க முடியும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
முந்தைய பழக்கவழக்கங்களை கைவிடுங்கள்
நாம் இதுவரை ஒரு சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருப்போம். உதாரணமாக காலையில் தாமதமாக எழுந்திருப்பது, எழுந்தவுடன் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது, வெளியில் சென்றால் துரித உணவுகளை சாப்பிடுவது இவ்வாறு பல உள்ளன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் முற்றிலுமாக தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செல்வதிலிருந்து வெளியில் சென்றால் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது வரை அனைத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது, டயட் உணவுகளை எடுத்துக்கொள்வது, வெளியில் சென்றால் கூட நொறுக்குத் தீனிகளை தவிர்த்து உடலுக்கு எனர்ஜி தரக்கூடிய பானங்களை அருந்துவது, அலுவலகத்தில் அவ்வப்போது எழுந்து நடப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது என பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முந்தைய பழக்கவழக்கங்களை உடனடியாக விடமுடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கத்தை விட முயற்சி செய்யுங்கள்.
உடனடி பலனை எதிர்பார்க்காதீர்கள்
உடல் எடை வேகமாக கூடிவிட்டது, எனவே உடல் எடையையும் எளிதாக குறைத்துவிடலாம் என்று எண்ணி விடாதீர்கள். 10 நாள்கள் மட்டும் உடற்பயிற்சி செய்துவிட்டு உடல் எடை குறைந்துவிட்டதா? டயட் திட்டத்தில் பலன் வந்துவிட்டதா என்று பார்க்கக்கூடாது.. உடல் எடையை குறைப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டும். புதிய உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கத்தை கிரகித்துக்கொள்ள உடலுக்கு நேரம் கொடுங்கள்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம்
சிலருக்கு உணவைப் பார்த்தவுடன் டயட் எல்லாம் மறந்துவிடும். இன்றைக்கு சற்று அதிகமாக ஒர்க்அவுட் செய்துகொள்ளலாம் என்று நினைத்து சாப்பிடுவர். ஆனால், கண்டிப்பாக இதை மட்டும் செய்யக்கூடாது. கட்டுக்கோப்பான ஆரோக்கியமான உடலைப் பெறவேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியம்.
நண்பர்களின் உதவியை பெறுங்கள்
உடல் எடையைக் குறைக்க நண்பர்களிடம் என்ன உதவி என்று நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும்போது பெரும்பாலாக நாம் வீட்டில் சமைத்த உணவுகளை உண்கிறோம். அதனால் பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை. வெளியில் நண்பர்களுடன் செல்லும்பட்சத்தில்தான் சாலையில், தெருவில் பார்த்தவற்றை அல்லது அசைவ, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். எனவே, உடல் எடையை குறைக்கும் உங்கள் முயற்சியை நண்பர்களுக்கு எடுத்துக்கூறி, இவ்வகையான உணவுகளை சாப்பிடும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தெளிவாகக் கூறி விடுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்
நாள் முழுவதும் செய்யும் அனைத்து வேலைகளிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையைச் செய்வதிலும் சோம்பல் இல்லாமல் துரிதமாக வேகமாகச் செய்யுங்கள். அலுவலத்திலோ, வெளியிலோ நடக்கும்போது கூட சற்று வேகமாக நடந்து செல்லுங்கள். இதுபோன்ற உங்களின் சிறுசிறு சோம்பல்களை சுறுசுறுப்பாக மாற்ற முயற்சியுங்கள்.
Average Rating