தொப்பை இருந்தால் மாரடைப்பு? (மருத்துவம்)
கொழுப்பு எங்கே இருந்தாலும் ஆபத்துதானே? குறிப்பாக வயிறு மற்றும் தொப்பையைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தொப்பை என்பது அழகை பாதிக்கிற விஷயம் என்றால், ஆண்களின் பார்வையோ வேறு. பணத்தொப்பை, சந்தோஷத் தொப்பை என அதற்கு பெயர் வைத்துக் கொண்டாடும் வகையில்தான் இருக்கிறது அவர்களது மனநிலை! டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனோ ‘தொப்பை இருந்தால் மாரடைப்பு வரலாம்’ என எச்சரிக்கிறார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளையும் வழிகளையும் கூறுகிறார்.
‘‘தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ, அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. அதனால், கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்களுக்கு உடல் இயக்கம் குறைவாக உள்ள பழக்கவழக்கங்களே அதிகம் உள்ளன. நீண்ட நேரம் தொலைக்காட்சி, சினிமா பார்ப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம். யோகா, நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதும் குறைவாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மரபு அடிப்படையிலேயே, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைத்து விடுகின்றன. மேலும், இதயத்தின் சதைகளை பழுதடைய செய்கிறது.
தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி, அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும். இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு, நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போதோ, 25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குறிப்பாக, ஆண்கள்தான் இந்த மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களுக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மீள, எடை குறைப்பது மிகமிக அவசியம். அதாவது, ஙிவிமி என்று சொல்லப்படுகிற ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் சரியாக இருக்க வேண்டும்.
சிலர் ஒல்லி உடல்வாகு உடையவராக இருப்பார்கள். தொப்பை மட்டும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் அதிகமாக இருக்கும். மரபணு, உணவுப்பழக்க வழக்கம் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம். குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும், தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். தொப்பை அதிகமாக உள்ளவர்கள் பட்டியலில் இப்போது இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில் இப்பட்டியலில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கும்.
மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுப்பழக்கம் உள்ளவர்களை கவுன்சலிங் மூலம் குணப்படுத்த வேண்டும். அதில் குணமாகவில்லையென்றால், மருத்துவரை நாடி, மதுப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். தொப்பையைக் குறைத்து, மாரடைப்பு ஆபத்தில் இருந்து விடுபட, மருத்துவம் இல்லாமல் பிற வழிகள் மூலம் குணப்படுத்தும் மையங்களின் உதவியையும் நாடலாம்…’’
Average Rating