கொவிட்-19 கதையாடல்-5: சடலங்களில் அரசியல் !! (கட்டுரை)
பெருந்தொற்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் இலங்கையில் அதைவிடப் பெரிய பிரச்சினை, இறந்தவர்களைத் தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா பற்றியது. கொவிட்-19 முழு உலகுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மட்டும் இந்தப் பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில், பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், சடலங்களை வைத்துச் செய்யப்படும் அரசியல் நீண்டது. அது பாரிய அழிவுகளையும் இனப்பகையையும் உருவாக்கியிருக்கிறது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. இதற்கான அறிவியல் காரணங்களுக்கு அப்பால், அரசியல் காரணங்களே பிரதானமானவை.
இந்தப் பெருந்தொற்று அரசியல், அறிவியலை எவ்வளவு தூரம் மலினப்படுத்தி, கேலிக்கு உள்ளாக்கியுள்ளது என்பதை, நாம் அறிவோம். அறிவியலை மையப்படுத்தியதாக, இந்தப் பெருந்தொற்றுக்கான பதிலளிப்புகள் இருந்திருக்குமாயின், இவ்வுலகம் இன்னமும் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால், அறிவியலை அரசியல் மிஞ்சிநிற்கிறது. முடிவுகளை அரசியல்வாதிகளே எடுக்கிறார்கள். அதன் பலனையே, நாமெல்லோரும் அனுபவிக்கிறோம்.
முதலில், இதன் அறிவியல் சார்ந்த விடயங்களுக்கு வருவோம். கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது, உலகில் பல நாடுகளில் வழமையாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், இவ்வாறு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது, பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறது.
அதேவேளை, அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. குறிப்பாக, இறந்தவர்களது உடல்கள் பாதுகாப்பான உடற்பைகளில் இடப்பட்டு, அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது. அதேவேளை, புதைப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது என்பதையும் சொல்லியிருக்கிறது.
இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி, இறந்தவர்களின் உடலில் இருந்து, கொரோனா வைரஸ் இன்னொருவருக்குத் தொற்றுமா என்பதாகும்? இது தொடர்பில் விளக்கமளித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ‘பொதுவாக, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த உடலில் இருந்து, இன்னொருவருக்கு வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், வாய்ப்புகள் இல்லாமல் இல்லை’ என்று தெரிவிக்கிறது. இதனாலேயே, இறந்த உடல்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று கோருகிறது.
தகனம் செய்வதானாலும் கூட, அச்செயன்முறை வரை உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே நடைமுறையே அடக்கம் செய்யும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகளவான மக்களைக் காவு கொண்ட நாடுகளில், உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
இது எழுப்புகின்ற இரண்டாவது கேள்வி, அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரின் ஊடாக, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா என்பதாகும். இறந்த உடல்களால் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், உலக சுகாதார நிறுவனம் அடக்கம் செய்வதற்கு உடற்பைகளைப் பயன்படுத்த வலியுறுத்துகிறது. அவை, இறந்த உடலில் இருந்து எதுவும் வெளியேறாமல் பார்த்துக் கொள்கின்றன. எனவே, நிலத்தடி நீரில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இவை அறிவியல் சார்ந்த விடயங்கள்.
உலக நாடுகளில் பெரும்பாலானவை, கொவிட்-19 நோய்த் தொற்றில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றன. இதனால், தொற்று ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. இதை அறிவியல் நோக்கில் அணுகல் அவசியமானது.
இந்தப் பிரச்சினை தொடர்பில், ஆராய்வதற்கு சுகாதார அமைச்சரால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு வழங்கியுள்ள நான்கு பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. அவ்வறிக்கை ‘கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களை, அடக்கம் செய்வதும் தகனம் செய்வது போன்றே பாதுகாப்பானது’ என்ற வரிகளுடன் தொடங்குகிறது. மேலும்:
1. இறந்த உடலில் இருந்து, கொரோனா வைரஸ் பெருக்கமடையாது. தொற்றுக்கு உள்ளாகிய ஒருவர் இறந்ததும், அவ்வுடலில் உள்ள வைரஸ்களும் சில காலத்தில் அழிந்துவிடும். காரணம், இறந்தவர்களின் உடலில் வைரஸூகளை வாழவைக்கும் உயிருள்ள கலன்கள் இருக்காது.
2. கொவிட்-19 நோய், நீரால் பரவும் நோயல்ல. இறந்த உடலில் இருந்து வைரஸ் வெளியாகி, மண்ணின் ஊடாக நிலத்தடி நீரைச் சென்று, அதை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதேவேளை, அவ்வாறு ஒரு வேளை நீரில் கலந்தாலும், நீரில் கலக்கின்ற வைரஸ், வலுவிழந்து இல்லாமல் போய்விடும்.
நிபுணர்குழு அறிக்கை, இதுவரை காலமும் பேசுபொருளாயுள்ள பல வினாக்களுக்கான விடையை அளித்துள்ளது. இது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு வழங்கியுள்ள அறிக்கையின் பரிந்துரைகளாகும். இதை அரசாங்கம் ஏற்றாக வேண்டும். இதை அரசாங்கம் ஏற்க மறுப்பானது, அறிவியல் சார்ந்ததல்ல; அரசியல் சார்ந்தது.
கடந்த இரு வாரங்களாக, அடக்கம் செய்வதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இன்னொரு வாதம், டென்மார்க்கில் புதைக்கப்பட்ட ‘மிங்’ விலங்குகள், மீளத்தோண்டப்பட்டு எரிக்கப்பட்ட நிகழ்வாகும்.
கடந்த டிசெம்பர் மாதம், டென்மார்க்கில் மாற்றமடைந்த கொரோனா வைரஸ், ‘மிங்’ விலங்குகளின் ஊடாக, மனிதர்களுக்குக் கடத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 17 மில்லியன் ‘மிங்’குகள் கொல்லப்பட்டன. ‘மிங்’கின் மயிரில் இருந்து, குளிரைத் தாங்கும் போர்வைகளும் ஆடைகளும் செய்யப்படுகின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவற்றின் ஒரு தொகுதி, இராணுவதுக்குச் சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்டன. அவை ஆழமாகப் புதைக்கப்படாமல், மேலோட்டமாகப் புதைக்கப்பட்டன. அதனால், சில நாள்களில் அவற்றில் சில வெளியே வந்தன. இப்பகுதியைச் சூழ வாழும் மக்கள், அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, அவை அங்கிருந்து தோண்டப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தக்கதை, இலங்கையில் இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இங்கு சொல்லாத செய்தி ஒன்றுண்டு. ‘மிங்’குகள் விசவாயுவை விசிறியேதான் கொல்லப்பட்டன. அவ்வாறு கொல்லப்பட்ட மிங்குகள், ஆழமில்லாத குழிகளில் இடப்பட்டு, அவற்றின் மேல் மண்போட்டு மூடப்பட்டது. வாயு செலுத்தி கொல்லப்பட்ட மிங்குகளின் உக்கும் செயற்பாட்டில், அவை விரிவடையும். இதனால் இறந்த மிங்குகளில் ஒரு தொகுதி புதைக்கப்பட்ட கிடங்குகளில் இருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. இதனாலேயே அவற்றைத் தோண்டியெடுத்து எரிப்பதற்குப் டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்தது. இது வேறுவகையில் இங்கு விளக்கப்படுகிறது.
மரணங்கள் இயல்பானவை. மரணங்களின் பின்னரான நடைமுறைகள் காலத்துடன் மாறி வந்துள்ளன. ஆனால், மரணித்தோருக்கான மரியாதை எப்போதும் தொடர்ந்துள்ளது. இனியும் தொடர வேண்டும்.
ஒரு பெருந்தொற்று, மனிதத்தின் மாண்பையோ, மரணித்தோரின் மரியாதையையோ அழித்துவிடுவதை எந்தவொரு சமூகமும் அனுமதிக்கக்கூடாது. தம் சமூக வாழ்வின் அங்கமாக மாறிய நிலையில், தகனம் செய்வதும் அடக்கம் செய்வதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்களாகி விட்டன.
எரிப்பதை வழமையாகக் கொண்டோரும், குழந்தைகள் இறந்தால் எரிப்பதை விடுத்து அடக்கம் செய்வதையே வழமையாகக் கொண்டுள்ளனர். அதேவேளை, பல சமூகங்கள் காலமாற்றத்தால் எரிப்பதை முன்னிறுத்துகின்றன. இடப்பற்றாக்குறை, நகரமயமாக்கல் போன்ற காரணிகள் இதை உந்தித் தள்ளியுள்ளன. ஆனால், இன்றும் உலகெங்கும் கல்லறைகளுக்கான இடம் தனியானது. தாஜ்மகால் முதல் பிரமிட் வரை அனைத்தும் கல்லறைகளே.
இன்று, இலங்கையில் சடலங்களின் பெயரால் வன்மம் அரங்கேறுகிறது. உடலை அடக்கம் செய்வதைப் புனிதமாகக் கருதுகின்ற மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
இது அரசியல் நோக்குடையது. அதற்குப் போலி அறிவியலைத் துணைக்கழைக்கிறார்கள். இறந்த ஒருவருக்கு, அவருக்கான இறுதி மரியாதையும் அவர் விரும்பியபடி அடக்கம் செய்வதோ, எரிப்பதோ என்பது நடந்தாக வேண்டும்.
அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. இன்று உயிரற்ற உடல்களில் இருந்து பறிக்கப்படும் உரிமைகள், நாளை உயிர்களிடமிருந்து பறிக்கப்படுவது மட்டுமன்றி உயிர்களும் பறிக்கப்பட வாய்ப்பாகும். வரலாறு கற்றுத்தந்த பாடமது.
நிறைவாக, மூன்று விடயங்களை கேள்விக்கு உட்படுத்த விரும்புகிறேன். முதலாவது, அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையே அரசு ஏற்க மறுப்பது என்ன வகை. ஒருவேளை ‘நாட்டாமை தீர்ப்பை மாற்று’ வகையோ. இரண்டாவது, இறந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்திருப்பது, வெட்கக்கேடானது. இது இலங்கை முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அவமரியாதையாகும். மூன்றாவது மதத்தின் பேரால் அனைத்தையும் பார்க்கும், பேசும் சமயத் தலைவர்களினதும் மத்திய கிழக்கின் மதக் காவலர்களதும் குரல்கள் எங்கே போயின. சடலங்களின் மேல் நடக்கும் அரசியல், இலங்கையில் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் ஒருபகுதி என்பதை நாம் எவரும் மறக்காமல் இருப்பது நல்லது.
Average Rating