கூந்தல்!! (மகளிர் பக்கம்)
ஆறடிக் கூந்தலும், 60ஐ கடந்த பிறகும் நரைக்காத தலையும் அந்தக் காலத்து மனிதர்களுக்கு சர்வ சாதாரணமாக சாத்தியமானது. ஆனால், இன்றோ 15ஐ கடக்கும் முன்பே நரை… 20 பிளஸ்சில் வழுக்கை… 30 பிளஸ்சில் மொத்தமும் சொட்டை என கூந்தல் பிரச்னைகள் ஒருவரையும் விட்டுவைப்பதில்லை.
அவர்களுக்கு சாத்தியமானது நமக்கு மட்டும் ஏன் முடிவதில்லை என எப்போதாவது யோசித்திருப்பீர்களா? அவர்களுக்கு கூந்தல் என்பது அவர்களின் ஆளுமையின் அடையாளமாக இருந்தது. அவர்கள் இயற்கையை மதித்தார்கள்… நேசித்தார்கள்… இயற்கை வழி வாழ்ந்தார்கள்… இவையே காரணம். எல்லாவற்றையும்விட முக்கியமாக அவர்கள் கூந்தல் அழகுக்கு எந்த செயற்கையான வழிகளையும் சிகிச்சைகளையும் நாடவில்லை.
அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தல் என்பதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதினார்கள். செடிகள், மூலிகைகள் போன்றவற்றைக் கொண்டு அவர்களே கூந்தல் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான அனைத்துப் பொருட்களையும் தயாரித்துக் கொண்டார்கள். அப்படி அவர்கள் கூந்தல் பராமரிப்புக்குப் பின்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோமா?
நெல்லிக்காய்க்கு இளமையைத் தக்க வைக்கிற குணம் உண்டு என்பதை அறிவோம். இந்தியாவில் வாழ்ந்த மூதாதையர் கூந்தல் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உபயோகித்திருக்கிறார்கள். இரும்புச்சத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டும் அதிகமுள்ள அந்த எண்ணெய் அவர்கள் கூந்தலை கருகருவென்றும் அடர்த்தியாகவும் வைத்தது.
ஹென்னா என்பதை கூந்தலுக்கு சாயம் ஏற்றுகிற பொருளாகத்தான் நாம் அறிவோம். அந்தக் காலத்தில் அதை பொலிவிழந்த, மெலிந்த கூந்தலுக்கு ஊட்டம் ஏற்றும் பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வீட்டுக்கு வீடு கற்றாழை வளர்த்து அதன் ஜெல் போன்ற பகுதியை கூந்தலுக்குப் பயன்படுத்தினார்கள். கற்றாழை உடலுக்கும் கூந்தலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. வெயிலில் அலைவதால் கூந்தல் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து பட்டு போல மென்மையாக வைக்கக்கூடியது.
ரோஸ்மெரி என்பதை இன்றைய மாடர்ன் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்துகிறோம். மண்டைப் பகுதியில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, மயிர்க்கால்கள் நன்கு சுவாசிக்க வழி செய்து, அதன் மூலம் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் தன்மை அதற்கு உண்டு என்பதை அந்தக் காலத்து மனிதர்கள் அறிந்திருந்தனர். ரோஸ்மெரிக்கு இளநரையை விரட்டும் ஆற்றலும் உண்டாம்.
மேற்கு ஆப்பிரிக்காவில் கருப்பு சோப்பு என்பதை கூந்தலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், கோகோ, வாழைக்காய் தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த அந்த பிளாக் சோப்பு, சரும அழகு, கூந்தல் அழகு என இரண்டையும் காக்கும் டூ இன் ஒன்னாக இருந்ததாம்.
சீனாவில் டீ சீட் ஆயில் (Tea seed oil) என்கிற எண்ணெயைப் பயன்படுத்தினார்களாம். அது ஆலிவ் எண்ணெய்க்கு இணையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டதாம். இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்ததாகவும், கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுத்ததாகவும் அவர்கள் நம்பினார்கள். இமைகளுக்கு உபயோகிக்கிற மஸ்காராவில் கூட இந்த எண்ணெயை ரகசிய இடுபொருளாக அவர்கள் இப்போதும் பயன்படுத்துவதாகத் தகவல்.
Average Rating