கூந்தல்!! (மகளிர் பக்கம்)
சில வகையான வைட்டமின் குறைபாடுகள் வளர்சிதை மாற்றத்திலேயே பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. அந்த அறிகுறிகள் முதலில் முடி உதிர்வில்தான் தெரியும். பிறகுதான் உடல் அறிகுறிகளில் தெரியும். கூந்தல் உதிர்வது, உடைவது, நரைப்பது என எல்லாவற்றுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்தான் முக்கிய காரணம். அவற்றைத் தெரிந்து கொண்டால், உணவின் மூலமே கூந்தல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.
வைட்டமின் ஏ
நமது கூந்தலில் ஈரப்பதம் இருக்கவும் பளபளப்பாக இருக்கவும் வைட்டமின் ஏ அவசியம். கூந்தலை ஈரப்பதத்துடன், பளபளப்புடன் வைத்திருக்க இப்போது கடைகளில் கிடைக்கிற சீரம்களில் வைட்டமின் ஏ சப்ளிமென்ட் அதிகமிருக்கும். நமது மண்டைப் பகுதியில் சீபம் என்றொரு எண்ணெய் சுரக்கும். அதுதான் நமது மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டு போகாமலும், முடி உடைந்து போகாமலும் பார்த்துக் கொண்டு முடிக்கு ஒருவித ஈரத்தன்மையையும் கொடுக்கிறது. அந்த சீபம் சுரப்பதற்கு வைட்டமின் ஏ அவசியம். முடி உதிர்வுப் பிரச்னை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் வைட்டமின் ஏ சப்ளிமென்ட் கொடுப்பதுண்டு.
வைட்டமின் பி
முடி கொத்துக் கொத்தாகக் கொட்டுகிறதா? பி வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பயோட்டின், பாராஅமினோ பென்சாயிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற அனைத்து சத்துகளையும் கொடுக்கக்கூடியது வைட்டமின் பி. பால், மீன் போன்றவற்றில் இந்தச் சத்து அதிகம் என்பதால், அதை எடுத்துக் கொள்வதன் மூலம் கூந்தல் ஆரோக்கியம் காக்கலாம்.
வைட்டமின் டி
சிலருக்கு தலையில் பாதி முடி கருப்பாகவும், மீதி பிரவுன் நிறத்திலும் இருப்பதைப் பார்க்கலாம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால் இப்படி வரும். சூரிய வெளிச்சத்தின் மூலம் மட்டுமே கிடைக்கக்கூடிய வைட்டமின் டியை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் ஈ
மண்டைப் பகுதிக்குப் போதுமான ரத்த ஓட்டம் இருந்தாலே கூந்தல் தொடர்பான பாதி பிரச்னைகள் சரியாகும். வைட்டமின் ஈ அதிகமுள்ள மீன், கோதுமைத் தவிடு போன்ற உணவுகளையோ அல்லது சப்ளிமென்ட்டுகளாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்கலாம்.
வைட்டமின் சி
இதை Critical Nutrient என்று சொல்வார்கள். இது நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவது மட்டுமின்றி, நமது சருமம், கூந்தல் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பு அரணாகச் செயல்படக்கூடியது இந்த வைட்டமின் சி. நமது சருமத்துக்குத் தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகரிக்கவும் உதவும். முகம் அழகாக, இளமையாக இருக்க Cell regeneration நடக்க வேண்டும்.
புதிய செல்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால்தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி என்பதும் மண்டைப்பகுதி என்கிற சருமத்தின் மேல்தான் இருக்கிறது. அதாவது, மண்டை ஓடு ஸ்கல் என்றும் அதன் மேலுள்ள சருமப்பகுதி ஸ்கால்ப் எனப்படுகிறது. ஸ்கால்ப் என்கிற சருமத்தில் கொலாஜன் நிறைய உற்பத்தியானால்தான் செல்கள் வளர்ச்சி அதிகரிக்கும். அப்போதுதான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
சிலருடைய கூந்தல் பார்க்கவே அழகாக, ஆரோக்கியமாக இருக்கும். அவர்களுக்கெல்லாம் நிச்சயம் வைட்டமின் சி அளவு போதுமானதாக இருக்கிறது என அர்த்தம். நமது உடலில் நடக்கிற என்சைமட்டிக் ரியாக்ஷன் முடி வளர்ச்சிக்கு முக்கியம். அந்தச் செயலைத் தூண்டக்கூடியது வைட்டமின் சி. போதுமான அளவு வைட்டமின் சி இருக்கும்போது சருமமும் கூந்தலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும்.
கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ளவும் வைட்டமின் சி முக்கியம். வைட்டமின் சியை ஓர் ஊக்கக் காரணி என்றே சொல்லலாம். நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, பச்சைத் தக்காளி, பிரக்கோலி, செர்ரி, மிளகாய், கீரைகள், குடைமிளகாய், கொய்யா என நமக்கு அன்றாடம் எளிதாகக் கிடைக்கிற ஏராளமான உணவுகளில் வைட்டமின் சி இருக்கிறது. உணவின் மூலம் வைட்டமின் சியை எடுக்க முடியாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
புரதம்
கூந்தலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் புரோட்டீனின் பங்கு மிக முக்கியமானது. நமது சருமத்தில் உள்ள கொலாஜன் எனப்படுகிற கொழுப்பு செல்கள்தான் சருமத்துக்கு ஒருவித புத்துணர்வையும் மீள் தன்மையையும் கொடுக்கக்கூடியது. இந்த கொலாஜன் உற்பத்தியாகிற போது புதிய செல்கள் உற்பத்தியாகும். அதனால் கூந்தலும் அழகாக, ஆரோக்கியமாக மாறும்.
புரோட்டீனில் உள்ள அமினோ அமிலங்கள்தான் கூந்தலை வேகமாக வளரச் செய்து, வளர்ச்சியை சீராக தக்க வைக்கவும் உதவும். நம் உடலில் எப்போதும் 1 கிராம் புரோட்டீன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, பட்டாணி உள்ளிட்ட எல்லா வகையான சுண்டல்கள், நட்ஸ் என புரதம் அடங்கிய
உணவுகள் ஏராளம் உள்ளன.
அவசிய கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids)
இவை இல்லாவிட்டால் 50ல் வரக்கூடிய வழுக்கை 20 பிளஸ்சிலேயே ஏற்படும். இதை Premature Baldness என்கிறோம். ஃபிளாக்ஸ் சீட், சால்மன் ஆயில், பிரிம்ரோஸ் ஆயில் போன்றவற்றில் இவை அதிகம் உள்ளன. உணவாக எடுத்துக் கொள்ள முடியாதவர்கள், சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
துத்தநாகம்
நம்முடைய கூந்தல் உடையாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க நிறைய ஊட்டச்சத்துகள் அவசியம். அவற்றில் முக்கியமானது துத்தநாகம். இதில் குறைபாடு ஏற்பட்டால் Premature Hair Loss என்பது ஏற்படும். பொதுவாக இள வயதில் உள்ள கூந்தல் அடர்த்தி, வயதாக, ஆக குறைவது இயல்பு. ஆனால், இள வயதில் கூந்தல் மெலிவது, உடைவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து
நமது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருந்தாலே போதும். ஒன்று ஆக்சிஜன். இன்னொன்று எல்லா ஊட்டச்சத்துகளுடன் கூடிய முறையான ரத்த ஓட்டம். ஆக்சிஜனை ரத்தத்தில் கொண்டு போவது இரும்புச்சத்து. நாம் உயிர் வாழ மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான ஆக்சிஜன் சப்ளை சரியாக இருக்க வேண்டுமானால் இரும்புச்சத்து அதற்கு மிக மிக முக்கியம்.
அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளில் அசைவத்துக்கு இணையாக இரும்புச்சத்து கிடைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அசைவ உணவுகளின் மூலம் உடலுக்குச் சேர்கிற கொழுப்பானது கொலாஜனை குறையச் செய்துவிடும். அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், முட்டை போன்றவற்றுக்கு இது பொருந்தும். மீன் மட்டும் விதிவிலக்கு.
மீனில் கிடைக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஃபோலிக் அமிலம் இரண்டுமே கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. எனவே, கொலாஜனை குறைக்காத இரும்புச்சத்து நம் உடலில் சேர வேண்டும் என்றால் தாவர உணவுகளே சிறந்தவை. இவற்றில் முதலிடம் பீட்ரூட்டுக்கு. இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாகவும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் நினைப்பவர்கள் தினமும் பச்சையான பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வது நல்லது. இது தவிர வெல்லம், முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து குறையும் போது முடி மெலிய ஆரம்பிக்கும்.
Average Rating