தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா? (கட்டுரை)
பிரித்தானியாவிலிருந்து குடும்பநல மருத்துவரும், தமிழர் நலவாழ்வு நிறுவனத்தின் தலைவருமான மருத்துவர் ஆ.புவிநாதன் நேர்காணல்
கோவிட் 19 ன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் திரிபில் (strain) மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய திரிபு உருவாகி இருப்பது இங்கிலாந்தில் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான உலக நாடுகள் இங்கிலாந்து டனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் மாத்திரமின்றி உலக சமூகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த புதிய வைரசின் தாக்கம் குறித்தும் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மருத்துவர் புவிநாதன் வழங்கிய செவ்வி
கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸிற்கும் பழைய வைரஸிற்கும் என்ன வேறுபாடு?
கொரோனா வைரஸ் ஒரு RNA வைரஸ் இதில் தொடர்ச்சியாக மரபணுவில் மாற்றங்கள் இயற்கயாகவே நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். இற்றைவரைக்கும் 300 க்கும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நுண்ணுயிர்த்துறை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் KENT என்ற பிரதேசத்தில் (b.1.1.7 ) என்ற புதியரக வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா வையிரசை சுற்றி உள்ள முட்களில் மாற்றத்தை உள்ளடக்கியதாக இந்த வைரஸ் உருமாறியுள்ளது. இந்த வையிரஸ் ஏற்கனவே உள்ள வைரசைவிட 70% வீரியத்துடன் விரைவாக பரவுகிறது. இருந்தபோதிலும் இறப்பு விகிதம் அதிகரித்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பிரித்தானியாவில் இனம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ் குறித்து அதிகம் அச்சப்பட தேவையில்லை என்பதையே உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் இன்று உறுதி செய்துள்ளார், பிரித்தானியாவை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் பிரான்ஸ் இந்த வையிரஸ் பரவி உள்ளதால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் எழுந்துள்ளதை உணரமுடிகிறது.
தற்பொழுது தென் ஆபிரிக்காவில் இருந்து லண்டனுக்கு வந்த சிலரிடம் வேறு ரக மாற்றங்களைக் கொண்ட வையிரஸ் இனம் காணப்படுள்ளது எனவே இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சநிலையை போக்குவதற்கும் பிரித்தானியாவின் மருத்துவத்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்த புதியவகை கொரோனா வைரஸின் பாதிப்பின் அறிகுறிகளுக்கும் பழைய வகை வைரஸால் ஏற்படும் பாதிப்பிற்கும் மாறுபட்டு உள்ளதா?
அறிகுறிகளில் மாற்றமில்லை. காய்ச்சல், தலைவலி, நுகர்தல் தன்மையில் குறைவு, சுவாசக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் உள்ளன. ஆனால் இந்த வகை வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் விதம் பழைய வகையை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. வீரியமுள்ளவை மட்டுமே வாழும். வீரியமில்லாதவை வாழாது என்பது டார்வின் கூற்று.
இந்த பதிய வகை வைரஸூக்கு நோய் அரும்பு காலம்(incubation period) எத்தனை நாள் ?
இந்த புதிய வகைக்கும் பழைய வகையைப் போலவே நோய் அரும்பு காலம் 14 நாட்கள் தான் .
தற்பொழுது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?
கொரோனா தொற்று ஆரம்பித்த காலகட்டத்தில், இங்கிலாந்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. தற்போது சற்று குறைந்திருந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமே. ஆனாலும் ஆரம்பகட்டத்தில் மக்களுக்கு இருந்த பதட்டம் இப்போது இல்லை. குறைவாகத்தான் உள்ளது. தற்பொழுதுகொரோனாவுடன் வாழப் பழகிவிட்டார்கள். தடுப்பூசி வந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
முற்காலத்தில் ஒரு பிணிக்கு எதிராக தடுப்பு மருந்து வர 20 வருடங்கள் கூட ஆகலாம் , ஆனால் தற்போது 10 மாத காலத்திலேயே தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்திருப்பது நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது .
தற்பொழுது தடுப்பூசி யாருக்கெல்லாம் அளிக்கப்படுகின்றது?
கொரோனாவால் இறப்பவர்களில் அதிக அளவு வயதானவர்களே. அதனால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஒருவருக்கு இரண்டு தவணையாக மூன்று வார இடைவெளியில் தடுப்பூசி அளிக்க வேண்டும். தற்பொழுது முதல்கட்டமாக வயதானவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.
நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் உள்ள 60 சதவீத பேருக்காவது எதிர்ப்புரதம் ( Antibodies) இருக்க வேண்டும். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த Herd immunity நிலையை அடையலாம் என்று எதிர்பார்க்கிறோம். இன்ஃப்ளூயன்சா வைரஸூக்கான தடுப்பு மருந்து ஒவ்வொரு ஆண்டும் அதன் புதிய திரிபுக்கு ஏற்றால் போல கண்டுபிடிக்கப்படும்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு மாற்றத்திற்கு, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்புமருந்து பயனுள்ளதாக இருக்குமா?
கொரோனா வைரஸில் தற்பொழுது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் RNA sequenceஐ ஆராய்ந்து, அதற்கான புதிய தடுப்பு மருந்து ஆராய்சியில் ஈடுபட்டிருப்பதாக ஃபிவிசர் நிறுவனம் கூறியுள்ளது.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்தே, புதியவகை வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆராய்ச்சி தரவுகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை.
ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அந்த தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி எவ்வளவு கால அளவு இருக்கும்?
கொரொனா வைரஸ் ஒரு புதிய வைரஸ். இது குறித்த முழு தகவல்கள் அறியப்படவில்லை. தற்பொழுது 6 மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் எனக் கூறுகின்றனர். தடுப்பு மருந்து போட்டால் ஒரு வருடத்திற்கான எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆறுமாத காலமே ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் இன்னும் கூடுதல் கால ஆராய்ச்சிகள் தேவை.
பிரித்தானியாவில் பொருளாதார ரீதியான பாதிப்பு பற்றி கூற முடியுமா ?
இங்கு கொரோனா வைரஸ் காரணத்தால் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் தற்பொழுது ஒரு பொருளாதார உடன்பாடு கையொப்பமாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது .
இதன் மூலம் பொருளாதார பாதிப்புக் குறையும்.பல வியாபாரத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் வரை 80% ஊதியம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர் .
அங்கு கல்வி சூழல் எவ்வாறு உள்ளது?
கோடை காலகட்டத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. நவம்பர் முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் தொடர்ந்து வீட்டில் இருப்பது மன வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதால், பாடசாலைகள் திறக்கப்பட்டு தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தான் மூடப்பட்டுள்ளன. பின்னர் தை மாதத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. வேலைக்கு செல்பவர்களில், வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடியவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இந்த புதிய வகை வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
சமூக இடைவெளியைக் கடைப் பிடித்தல், முகக் கவசத்தை அனைத்து இடங்களிலும் கட்டாயம் அணிதல், கொண்டாட்டங்களைத் தவிர்த்தல் ஆகியன புதிய வைரஸ் தொற்று பரவல் வந்தாலும், இந்த நடவடிக்கைகள் நமக்கு பாதுகாப்பு அளிக்கும். இந்த பண்டிகை காலத்தில் கவனமாக இருந்தால் அடுத்த பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடலாம்.
புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களின் நிலை என்ன?
அனைவருக்கும் பதட்டம் உள்ளது. ஆலயங்கள் கூட மூடப்பட்டுள்ளன. உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்க இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் தடுப்பூசி வந்துள்ள நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.
Average Rating