புதிய கொரோனா வைரஸ் யாரை தாக்காது? (கட்டுரை)
ஏற்கனவே கரோனா பேரிடரிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் உலக மக்கள், பிரிட்டனில் உருவாகியிருக்கும் புதிய வகை அதிதீவிர கரோனா வைரஸ் தொற்றை நினைத்து மேலும் கவலையடைந்துள்ளனர்.
தற்போது பரவி வரும் கரோனா தொற்றை விடவும், 70 சதவீதம் அதிவேகமாக மனிதர்களிடையே பரவும் தன்மை கொண்டதாக தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கரோனா தொற்று, ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கரோனா தொற்று மெல்லக் குறைந்த வந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்த நிலையில், பிரிட்டனில் அதிதீவிர கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் கரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் வாழும் மக்கள், கரோனா இரண்டாவது அலை குறித்த அச்சத்தில் உள்ளனர். மீண்டும் அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலத்தில் பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பியவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் கண்டறியப்பட்டிருக்கும் கரோனா வைரஸ், முந்தைய வைரஸிலிருந்து வேறுபட்டு, சற்று பலம்பொருந்தியதாக உள்ளதாக சுகாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கரோனா பாதித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட்டவர்களுக்கு தற்போது புதியவகை கரோனா தொற்றுப் பரவ வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. தொற்றுநோய் துறை நிபுணர் ஜேகப் ஜான் கூறுகையில், அதிதீவிர கரோனா வைரஸ், தனது பழைய தொற்றும் முறையிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டுள்ள புதிய கரோனா வைரஸ், அதன் தொற்றும் முறையிலிருந்து வேறுபட்டிருக்கிறதே தவிர, அதன் ஆன்டிஜெனிக் தோற்றத்தில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லை. இதன் மூலம், ஏற்கனவே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி உருவானவர்களுக்கு, இந்த தொற்றிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இதுவரை 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுவரை சுமார் 30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் இது 40 சதவீதமாகும்.
இந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவலைப் பொருத்தவரை, ஒரு நபருக்கு மீண்டும் தொற்றுப் பரவுவது என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது, எனவே, ஏற்கனவே கரோனா தொற்றுப் பரவியவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது, புதிய கரோனா தொற்றிலிருந்து காக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகள், புதிய அதிதீவிர கரோனா தொற்றிலிருந்து காக்கும் வகையிலேயே இருப்பதும் நிம்மதி தருவதாக இருப்பதாக தொற்றுநோய் சிறப்பு நிபுணர் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறியுள்ளார். அதேவேளையில் மக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Average Rating