காவாலிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 4 Second

கடந்த பொதுத் தேர்தலில் இருவர் பெற்றுக் கொண்ட அமோக வெற்றிகள், தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியது. அதோடு, எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கின்றது.

அதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை அங்கஜன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நின்று பெற முடிந்தமை என்பது, எதிர்பார்க்கப்படாத ஒன்று.

அதுபோல, சிறையில் இருந்தவாறு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், பிள்ளையான் பெற்றுக் கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் என்பது, முக்கியமான செய்தியாகும். வடக்கு – கிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவராகவும் பிள்ளையானே கடந்த தேர்தலில் பதிவாகியிருந்தார். அது, அவரையும் அவரது கட்சியையும் பொறுத்த வரையில் பாரிய சாதனையாகும்.

தமிழ்த் தேசிய அரசியல் கோலோச்சும் தமிழர் தாயகத்தில், தமிழ்த் தேசிய அரசியலுக்கு அப்பால், அதுவும் எதிர்நிலையில் நிற்கின்ற இருவர், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுகிறார்கள் என்றால், அதன் பின்னணிகள் குறித்து ஆராய வேண்டிய அவசியமானது.

குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலின் தேவை குறித்து அக்கறை கொள்கின்ற அனைவரும், அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், அவ்வாறான நிலையொன்று தமிழ்த் தேசிய கட்சிகளாலோ, தரப்புகளாலோ இன்று பேணப்படவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தன்னைத் தனக்குள்ளேயே சுருக்கிக் கொண்டது அதிகம். அதுபோல, தனக்குள் சுருக்கிக் கொண்டதோடு, தனக்குள்ளேயே பல பிளவுகளையும் கண்டது.

அப்படியான நிலையில், மிகச் சுருங்கிய நிலைக்குள்ளும் பல பிரிவுகள் என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் பலத்தை, அதிகமாகவே சிதைத்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியலை, கட்சிகளும் தலைவர்களும் வழிநடத்தினாலும் அதைத் தாங்கி நிற்பவர்கள் மக்கள்தான்.

முள்ளிவாய்க்கால் என்கிற பேரழிவுக்குப் பின்னரும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக மக்கள் இருந்தார்கள். இன்றளவும் அதன் மீதான பற்றுறுதியை விட்டுக் கொடுத்துவிடவில்லை.

ஆனால், அவர்களை வழிநடத்தும் கட்சிகளும் தலைவர்களும் தரப்புகளும் அதற்கான அர்ப்பணிப்பை வெளியிடவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்கிற அரசியல், உரிமைக்கான விடயத்தைத் தேர்தல் அரசியல் என்கிற ஒற்றை வெளிக்குள் தள்ளிவிட்டார்கள்.

தேர்தல் அரசியல், இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் புறந்தள்ளிக் கொண்டு, எதையும் செய்யவும் முடியாது. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலும் அதற்கான அர்ப்பணிப்பும், தேர்தல்களுக்குள் சுருக்கப்படுவது என்பது, மிகப்பெரிய தோல்வியாகும்.

ஏனெனில், அரசியல் என்பதே, தேர்தல் வெற்றி தோல்விகளுக்கானது என்கிற அளவில் சுருக்கப்பட்டு, அதற்காகவே ஆட்களைப் பிடிக்கின்ற, இணைக்கின்ற நிலையொன்று, இன்றைக்கு உருவாகிவிட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், தமிழ் மக்கள் வெற்றிகரமான கட்டங்களை அடைந்த தருணங்கள் அனைத்திலும், இளைஞர், யுவதிகளின் பங்குதான் கணிசமாக இருந்திருக்கின்றது.

ஆனால், இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அர்ப்பணிப்புள்ள இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்படுவதற்குப் பதிலாக, பதவி வெறியோடு பணம் பகட்டுக்காக அலையும் தரப்புகள் உள்வாங்கப்படுகின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தொடங்கி, இன்றைக்கு உருவாகும் எந்தத் தமிழ்த் தேசிய கட்சியாக இருந்தாலும், அதுதான் நிலையென்றாகி விட்டது.

தேர்தல் வெற்றிக்காக, எந்தவிதமாக காவாலித்தனத்தையும் ரௌடித்தனத்தையும் கள்ள வேலைகளையும் செய்யும் தகுதிதான், கட்சிகளின் இளைஞர் அணிக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியாகப் பார்க்கப்படுகின்றது.

இன்றைக்கு ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களை நோக்கினால், தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என்கிற பெயரில், இளைஞர்கள் செய்கின்ற வேலைகளைக் காணும் போது, அவர்கள் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவதற்குத் தகுதியானவர்கள் தானோ என்பது தெரிந்துவிடும்.

அரசியலை அரசியலாக எதிர்கொள்ளத் தெரியாமல், தனிமனிதத் தாக்குதல்கள் தொடங்கி, அவதூறுகள் பரப்புதல், அச்சுறுத்தல் விடுத்தல் என்று காவாலித்தனத்தின் உச்சம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்தக் காவாலித்தனங்களை, ஒவ்வொரு தமிழ்த் தேசிய கட்சியும் அதன் தலைவர்களும் ஊக்குவிக்கச் செய்கிறார்கள் என்பதுதான் இன்னும் கேவலமான விடயம்.

கட்சிகளும் தலைவர்களும், தேர்தல் வெற்றி என்ற ஒற்றை இலக்குக்குள் தங்களைச் சுருக்கிக் கொண்ட பின்னர், இவ்வாறான காவாலித்தனங்களை ஊக்குவிக்கிறார்கள்.

எந்தெந்த அரசியல் தலைவர், யார் யாரைப் பற்றியெல்லாம் அவதூறு பரப்புமாறு ஊக்குவித்தார், எப்படியெல்லாம் அவதூறு பரப்பும் வித்தைகளைக் கற்றுத் தந்தார் என்பதெல்லாம், கடந்த நாள்களில் ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடங்களில் பகரப்படுகின்றது.

அதுவும், ஒரு கட்டம் வரையில், அவர்களின் தலைவர்களாக இருந்தவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆனதும், அவர்களின் கடந்த கால வரலாறு எழுதப்படுகின்றது.

இவ்வாறான நிலை, ஆரோக்கிய சிந்தனையுள்ள எந்தவொரு நபரையும் தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி வர வைக்காது. அதுபோல, புதிய தலைமுறையை நோக்கி தமிழ்த் தேசிய அரசியலின் தார்ப்பரியம் குறித்த செய்திகளை, எடுத்துச் செல்வதையும் தடுக்கும்.

ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, இந்தக் கட்சிகளின் தேர்தலை இலக்கு வைத்த, ‘தகிடுதித்தங்கள்’ தான் என்ற நிலை உருவாகிவிட்ட பின்னர், அதனை நோக்கி அழைத்துவருவது என்பது மிகவும் சிரமமாகும்.

ஏனெனில், தேர்தல் வெற்றி, அதன்மூலம் வரப்பிரசாதங்கள்தான் அரசியல் என்றால், ஏன் தமிழ்த் தேசிய கட்சிகளோடு தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனை இயல்பாக உருவாகும். அது, ஆளுங்கட்சிகளோடு தொங்கிக் கொண்டிருக்கும், அவர்களின் முகவர்களாக இருக்கும் அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை, முதல் தெரிவாக வைத்துவிடும். கடந்த பொதுத் தேர்தலில், அவர்கள் இருவரினதும் வெற்றி, அந்தக் கட்டங்களில் இருந்தும் நோக்கப்பட வேண்டியது.

இன்னொரு பக்கம், தமிழ்த் தேசிய அரசியல் இன்றைக்கு வடக்கு-கிழக்கு என்கிற தமிழர் தாயகப் பகுதி என்ற நோக்கில், ஒப்புக்காகவே நோக்கப்படுகின்றது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான மாவட்டம், தொகுதி, ஊர்கள் என்ற அளவுக்குள் சுருங்கிவிட்டது.

தங்களின் வெற்றியை எந்தப் பிரதேசம் உறுதி செய்யுமோ, அதுதான் அரசியலுக்கான களம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. வெற்றிக் களங்களைத் தாண்டி, ஒட்டுமொத்தத் தமிழர் தாயகப் பிரதேசங்களையும் சிந்தனையில் ஏற்றிக் கொண்டு, அரசியல் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தேர்தல் வெற்றிக்காகப் பிரதேசவாதம், மதவாதம், சாதிய நோக்கு என்று எல்லாவித அழிச்சாட்டியங்கள் மீதும், இன்றைக்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் பயணிக்கத் தொடங்கிவிட்டன. அதை நோக்கியே, இளைஞர்களையும் அழைத்துச் செல்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் தமிழ்த் தேசிய கட்சிகளின் இளம் தொண்டர்களும் ஆதரவாளர்களும், எவ்வாறான காரியங்களை எல்லாம் ஆற்றியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அர்ப்பணிப்பாலேயே எழுந்து வந்த தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய அபத்தமான நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய அபத்தத்துக்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகளும் அவர்களின் ஆலோசகர்களும் கொடையாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உரிமை அரசியல் என்பதை, தேர்தல் வெற்றி-தோல்விக்கான நிலைக்குள் சுருக்கப்படுவதற்கு யார் காரணமோ, அவர்கள் இன்றைய பின்னடைவுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியல், அயோக்கியர்கள், காவாலிகள் கைகளில் சிக்குண்டு சீரழியும் நிலைக்கு வந்திருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ராஜீவ்காந்தி அறக்கட்டளை நடந்தது என்ன அம்பலமாகும் சிதம்பர ரகசியம்!! (வீடியோ)