தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி!! (மகளிர் பக்கம்)
நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் தலைமுடிக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய கறிவேப்பிலை, செம்பருத்தி குறித்தும், ரத்தசோகை, தோல்நோய்களை குணப்படுத்தும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட கறிவேப்பிலை வயிற்று நோய்களுக்கு மருந்தாகிறது. வயிற்றுபோக்கை குணப்படுத்தும் தன்மை உடையது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. நோய் நீக்கியாக விளங்குகிறது. கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
கறிவேப்பிலையை பயன்படுத்தி ரத்தசோகையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உலர் திராட்சை, கறிவேப்பிலை, பனங்கற்கண்டு. சுமார் 15 உலர் திராட்சையை நீர்விட்டு ஊறவைத்து, கறிவேப்பிலையுடன் சேர்த்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை வேளையில், 21 நாட்கள் குடித்துவர ரத்தசோகை இல்லாமல் போகும். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்லீரல் பலப்படும்.
மணத்தை உடைய கறிவேப்பிலை, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இது புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. கறிவேப்பிலையில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. கறிவேப்பிலையை பயன்படுத்தி கூந்தல் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, செம்பருத்தி. கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இதழ்களை நீர்விட்டு அரைக்கவும். இந்த பசையை தலைமுடியின் வேரில் படுமாறு அழுத்தி தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்துவர முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகு பிரச்னை நீங்கும்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் பொடுகுகளை இல்லாமல் செய்கிறது. தலைமுடி ஆரோக்கியம் அடைகிறது. கறிவேப்பிலை, செம்பருத்தியில் உள்ள சத்துக்கள் தலைமுடி வளர உதவுகின்றன. இளம் நரையை போக்குவதாக விளங்குகிறது. தலைமுடி கொட்டுவது என்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. போதிய சத்தூட்டம் இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், தலையில் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தாலும் தலைமுடி கொட்டுகிறது. தலைமுடி ஆரோக்கியமாக இருக்க கறிவேப்பிலை பயன்படுகிறது.
கறிவேப்பிலையை பயன்படுத்தி அஜீரண கோளாறை போக்கும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பூண்டு, உப்பு. கறிவேப்பிலையை லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், சிறிது உளுந்தம் பருப்பு, 4 மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். ஏற்கனவே வறுத்து வைத்த கறிவேப்பிலையை இதனுடன் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடி செய்து எடுக்கவும்.
இந்த பொடியில் நல்லெண்ணெய் விட்டு சுடுசோறில் கலந்து மதிய வேளையில் சாப்பிட்டு வர ஜீரண கோளாறுகள் சரியாகும். சுவையின்மை பிரச்னை போகும். வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகிறது. பசியை தூண்ட கூடியதாக உள்ளது. வயிற்று வலியை சரிசெய்கிறது. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. ரத்த சோகையை போக்கும் உணவாகிறது. இதை அனைவரும் சாப்பிடலாம். கறிவேப்பிலை மேல்பூச்சு மருந்தாகி தோல்நோயை போக்குகிறது.
ஈரல் நோயை இல்லாமல் செய்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கறிவேப்பிலையை அன்றாடம் எடுத்துக்கொண்டால் நோய்கள் வராமல் தடுக்கலாம். அம்மை கொப்புளங்கள் வந்தபோது அவை அதிகம் பரவாமலும், அதன் துன்பத்தில் இருந்து விடுபடுவது குறித்த மருத்துவத்தை பார்க்கலாம். அம்மை நோய் எரிச்சல், காய்ச்சலை தரக்கூடியது. அம்மை வந்தால் 5 வேப்பிலையோடு அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடித்தால், அம்மை கொப்புளங்கள் வெகு சீக்கிரத்தில் ஆறும். வேப்பிலை, மஞ்சளை அரைத்து மேல்பூச்சாகவும் போடலாம்.
Average Rating