ஜெனீவா அரங்கோடு கரைதல் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 57 Second

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரை முன்வைத்து, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறை கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், கூட்டமைப்பின் புதிய தீர்மானத்துக்கான முன்மொழிவு என்பது, மீண்டும் இலங்கைக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டது என்று விமர்சித்திருக்கின்றன.

இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கான நீதியைக் கோரி, கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள். சர்வதேசத்தினதும், ஐக்கிய நாடுகளினதும் கதவுகளை, நீதிக் கோரிக்கைகளோடு தமிழ்த் தரப்புகள் தொடர்ந்தும் தட்டி வருகின்றன.

அதன் விளைவாக(வும்), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எனும் பேரில் ‘ஜெனீவா அரங்கு’ திறந்தது. அதிகார வரம்புகள் மிகவும் வறியதான இந்த அரங்கில்தான், தமிழ்த் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ, கடந்த ஒரு தசாப்தமாக நிற்கவேண்டி வந்திருக்கின்றது.

ஜெனீவா அரங்கை ஏற்றுக் கொண்டவர்களும் அதை ஒரு படிக்கட்டாகக் கொண்டவர்களும் அதை நிராகரித்தவர்களும் கூட, ஒவ்வொரு வருடத்திலும் இரு தடவைகள், அந்த அரங்கை நோக்கி ஓடுகிறார்கள். தங்களுடைய நிலைப்பாடுகள் சார்ந்து, சர்வதேச நாடுகளையும் நிறுவனங்களையும் சந்தித்து, உரையாடல்களை நடத்துகிறார்கள்; எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான நீதி என்பது, சர்வதேச விசாரணை ஊடாக வழங்கப்பட வேண்டும் என்பதுவும் அது, தமிழ் மக்களின் அனைத்து உரித்துகளையும் உறுதிப்படுத்தும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுவும், பிரதான எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு இல்லாத தமிழ்த் தேசிய தரப்புகள் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால், சர்வதேச விசாரணை என்கிற இலக்கை நோக்கிய பயணம், ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அதுபோல, அது ஒரு வழிப் பயணமும் இல்லை. இலங்கையின் அமைவிடம் தொடங்கி, பிராந்திய அரசியல் ஈறாக, ஒவ்வொரு சர்வதேச நாடுகளினதும் அரசியல் நலன்கள் குறித்த நிலைப்பாடுகள் வரை, தமிழ் மக்கள் கோரும் நீதிக்கான பயணத்தில் தடைக் கற்களாக இருக்கின்றன. இந்தத் தடைகளைப் புறக்கணித்துவிட்டு, நீதிக்கான பயணத்தை அடைவது சாத்தியமில்லாத ஒன்று.

உலக வரலாற்றில், இவ்வாறான தடைகளை எதிர்கொண்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகங்களும் இனக்குழுமங்களும் உண்டு. அவர்களிடம், தொய்ந்துவிடாத போராட்ட உணர்வும் பூகோள அரசியல் மாற்றங்களை உள்வாங்கி, அதை வெற்றிக்கான வழிகளாக மாற்றும் சமயோசிதமும் காணப்படுகின்றன. இதனால், அவர்களின் நீதிக்கான பயணம், வெற்றிகரமானதாக அமைந்துவிடுகின்றது.

இவை இல்லாதபோது, நீதிக்கான பயணத்தில் வெற்றியை அடையாமலேயே இருக்க வேண்டி ஏற்படுகின்றது. ஏனெனில், இங்கு சுயாதீனமான, சுயநலம் தாண்டிய, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலான நீதி என்பது, சர்வதேசத்தால் ஒருபோதும் வழங்கப்படவில்லை. அவ்வாறான நீதியை, மனப்பூர்வமாகக் கொண்டு நடக்கும் தரப்புகள் இருப்பதாக வைத்துக் கொண்டால், தங்களின் கண்களுக்கு முன்னாலேயே, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது, அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்படும் போது, நீதி பற்றி மற்றவர்களுக்குப் போதனை நடத்தும் நாடுகள் பல பார்த்துக் கொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் அளவுக்கு, இந்த நாடுகளுக்கும் பாதிப்பின் அளவும், அதன் கொடூரமும் தெரியும். ஆனாலும், அந்தக் கொடூரங்கள் நிகழும் போது, அவற்றை அனுமதித்துக் காத்திருந்தன.

தமிழ் மக்களுக்கான நீதி என்பது, சர்வதேச நாடுகளால், தங்களுக்கான கருவியாகவே இலங்கைக்கு எதிராகக் கையாளப்பட்டது. அந்தக் கருவியைக் கூட, உச்ச அரங்கொன்றில் கையாளுவது தொடர்பில், அந்த நாடுகள் அக்கறை கொள்ளவில்லை. அதிகபட்சமாக ஒரு சிறு அழுத்தமொன்றை, ஜெனீவா அரங்கைத் திறப்பதன் மூலம் வழங்கவே, அந்த நாடுகள் விரும்பின.

அந்த விருப்பத்தின் பின்னால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற அடிப்படை, பிரதானமான ஒன்றாக இருக்கவில்லை. தங்களது அரசியல் இலாப நோக்கங்களே பிரதானமாக இருந்தன. அப்படியான ஒரு கட்டத்தில்தான், தமிழ்த் தேசிய தரப்புகள், ஜெனீவா அரங்குக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த யதார்த்தத்தில் நின்றுகொண்டுதான், அடுத்த கட்டங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டி வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய தரப்புகளைப் பொறுத்தளவில், சர்வதேச விசாரணை என்கிற இலக்குக் குறித்து, மேடைகளிலும் ஊடகங்களிலும் முழங்குவதில் என்றைக்குமே பின்நிற்பதில்லை. ஏனெனில், அது உணர்வுபூர்வமான ஒரு கட்டம். ஆனால், அதை அடைவதற்கான வழி வரைபடங்கள் குறித்து, எந்தவிதத் தெளிவையும் ஒரு கட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.

சர்வதேச விசாரணை என்கிற விடயம், ஒரு கட்டத்தில், உள்ளூர் தேர்தல் அரசியலுக்கான கட்டத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டது. தமிழ்க் கட்சிகளோ, புத்திஜீவிகளோ, செயற்பாட்டாளர்களோ எந்தத் தரப்பினராலும், சர்வதேச விசாரணைக்கான பாதையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரிந்திருக்கவில்லை. அது தெரிந்திருந்தால், கடந்த 11 ஆண்டுகளாக அதைக் குறித்துக் கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

அதுபோல, கிடைத்துள்ள ஜெனீவா அரங்கத்தைத் தாண்டி, அதிகார பலமுள்ள இன்னோர் அரங்கை எப்படி, எந்தப் புள்ளியில் திறக்க வைப்பதென்றும் தெரியவில்லை. அதுதான், ஜெனீவா அரங்கில், அதை ஏற்றுக் கொண்டவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கக் காரணமாகும்.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். குறைந்தது, இன்னொரு பத்து வருடங்கள் அவர்களின் ஆட்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என்பதுதான் தென் இலங்கை நிலைவரம்.

ராஜபக்‌ஷர்களை எதிர்கொள்வதற்காக, மேற்கு நாடுகள் மீண்டும் தமிழ் மக்களையே கருவிகளாகப் பயன்படுத்தும் கட்டத்தை அடைந்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷர்கள் வென்றதும், மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு உரையாடல்களை அதிகப்படுத்தியிருந்தன. பொதுத் தேர்தல் காலத்தில் கூட்டமைப்புக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திய முன்னணியையும் விக்கியின் கூட்டணியையும் கூட, இந்தியாவோடும் கூட்டமைப்போடும் இணக்கமாக வேலை செய்யுமாறு, மேற்கு நாடுகள் கோரின. அதற்கு இணங்கிய தரப்புகளை மாத்திரமே, அந்த நாடுகள் தொடர்ந்தும் ஊடாடலுக்கான பரப்புக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் வடக்கு – கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சியாக, அதுவே தெரிவானது. ஜெனீவா அரங்கு தொடங்கி, அனைத்து விதமான பிரச்சினைகள், விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குக் கூட்டமைப்பையே பிரதான தரப்பாக முன்னிறுத்திக் கொண்டு, இந்தியாவும் மேற்கு நாடுகளும் இன்றும் செயற்படுகின்றன.

பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில், இரண்டு உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்குள் கொண்டிருக்கின்ற முன்னணியை, இந்தியத் தரப்பு சந்தித்துப் பேசியதான காட்சிகளைக் காண முடியவில்லை. அதுபோல, மேற்கு நாடுகளில் பிரதிநிதிகள் கூட, வெளிப்படையாகச் சந்தித்ததற்கான காட்சிகள் பதிவாகவில்லை.

விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில், இந்தியாவைத் தாண்டிய சிந்தனை வெளி, அவரிடத்தில் எப்போதும் இருப்பதில்லை. அப்படியான நிலையில், மேற்கு நாடுகள் அவருக்காக அதிகளவு நேரத்தைச் செலவளிப்பதில்லை.

கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தம்முடைய அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. இந்தக் கட்டத்தில், அதனோடு தொடர்புபட்ட இன்னொரு தீர்மானமொன்றை நிறைவேற்றுவது தொடர்பில் கூட்டமைப்புக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையில் சில இரகசிய சந்திப்புகளும் இன்னும் சில வெளிப்படையான சந்திப்புகளும் இடம்பெற்றன.

அதைத் தொடர்ந்துதான், புதிய தீர்மானம் குறித்த விடயங்களை முன்னணியுடனும் கூட்டணியுடனும் ஆராயும் கட்டத்தை கூட்டமைப்பு அடைந்திருக்கின்றது. எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமும், சி.வி. விக்னேஸ்வரனிடமும் வழங்கியுள்ள ஆவணங்கள் அது சார்ந்தவைதான். அவற்றை வைத்துத்தான், இலங்கைக்கு மீண்டும் கால அவகாசத்தை வழங்கும் ஏற்பாடுகளைக் கூட்டமைப்புச் செய்வதாக, கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து, இலங்கை விலகியிருக்கின்ற நிலையில், இலங்கையை இன்னொரு சர்வதேச தீர்மானத்தினூடாகப் பொறுப்புக் கூறும் கட்டங்களுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஓர் ஏற்பாடாக, புதிய தீர்மானத்தைக் கூட்டமைப்பு கருதுகின்றது. அதாவது, வழியே சொல்லத் தெரியாத ஊருக்குப் போவதைக் காட்டிலும், வழியுள்ள ஊருக்குச் செல்லலாம் என்று கூட்டமைப்பு கருதுகின்றது.

இங்கு முதலில் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருப்பது, தமிழ்த் தேசிய கட்சிகளும் தரப்புகளும் தனிப்பட்ட அரசியல் நலன்களைத் தாண்டி நின்று, வெளிப்படையாக உரையாட வேண்டும் என்பதாகும். அதுதான், எப்போதாவது ஓரளவுக்காவது, தமிழ் மக்கள் கருவிகளாக இருக்கும் கட்டத்திலிருந்து மற்றவர்களைக் கையாளும் கட்டத்துக்கு நகரும் ஏற்பாடுகளைச் செய்யும். இல்லையென்றால், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்து, ஜெனீவா அரங்கோடு அங்கும் எதையும் பெற்றுக் கொள்ளாமல், கரைந்து போக வேண்டியிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில், மிகப் பெரிய கொழும்பு சாரணர் கெம்போறி !! (கட்டுரை)
Next post முதல் சந்திப்பிலேயே ஆங்கிலத்தில் பேசி பாரதிராஜாவை அசத்திய பாக்யராஜ்!! (வீடியோ)