இலங்கையில், மிகப் பெரிய கொழும்பு சாரணர் கெம்போறி !! (கட்டுரை)
கொழும்பு சாரணர்களின் வருடாந்த முதன்மை நிகழ்வு 55 ஆவது தடவையாக டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. இலங்கையில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இது முதன்முறையாகும்.
முழுமையான மெய்நிகர் பல நாள் நிகழ்வான இந்த 55 ஆவது கொழும்பு கெம்போறி 2020 நிகழ்வானது சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர், திரிசாரணர் மற்றும் தலைவர்கள் உள்ளடங்கிய 4500 இற்கும் மேற்பட்ட சாரணர்களின் பங்கேற்போடு நடைபெறவிருக்கிறது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற, ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 200/200 புள்ளிகளைப் பெற்றுள்ள பத்து மாணவர்களில் ஒருவரான, 11 ஆவது கொழும்பு சாரணர் பிரிவைச் சேர்ந்த முஹம்மத் ஃபர்ஸான் முஹம்மத் அம்மார் எனும் குருளைச் சாரணர் இந்த நிகழ்வின் முத்திரைத் தூதுவராக பெயரிடப்பட்டிருக்கிறார்.
இலங்கை சாரணிய வரலாற்றில் செழிப்பான சாரணிய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு சாரணரின் மிகச் சிறந்த முதன்மை நிகழ்வு கொழும்பு கெம்போறி ஆகும். இந்தப் பிண்ணனியில்தான், இலங்கை சாரணர் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளை ஆனது, கொழும்பு கெம்போறி 55 ஆவது நிகழ்வை, நாட்டில் தற்போதை Covid-19 தொற்று நோய்ப் பரவல் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, முழுமையான மெய்நிகர் கெம்போறி நிகழ்வாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்த கெம்போறி நிகழ்வானது மாவட்ட அல்லது தேசிய அளவில் முதலாவது முழுமையான மெய்நிகர் சாரணர் பாசறையாக வரலாற்றில் பதியப்படும்.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறித்து, கொழும்பு மாவட்ட ஆணையாளர் அமில் அபேசுந்தர கருத்துத் தெரிவிக்கும் போது “கொழும்பு சாரண உறுப்பினர்களின் வலிமையைக் கருத்தில் கொண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த கெம்போறி ஆனது, 7 நாட்களில் 4500 இற்கும் அதிகமான சாரணர்கள் பங்கேற்கும் மிகப் பெரிய முழுமையான மெய்நிகர் பல நாள் நிகழ்வாக, இலங்கை சாரணிய வரலாற்றில் முதற்தடவையாக நடைபெறவிருக்கிறது.
இது சாரணர்களான நம் அனைவருக்கும் பெருமிதமான தருணம் ஆகும். அத்தோடு, இது ‘தயாராக இருங்கள்’ எனும் குறிக்கோளை, உலகெங்கிலும் உள்ள பல தலைமுறை சாரணர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய விதத்தில் கொழும்பு சாரணர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதற்கான உண்மையான பிரதிபலிப்பாகும்” என்று குறிப்பிட்டார்.
சாரணிய வரலாற்றில், மிக இள வயதில் ஒழுங்கமைப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் 55 ஆவது கொழும்பு கெம்போறியின் ஒழுங்கமைப்பு ஆணையாளரான சுபுன் ஜயலத் கருத்துத் தெரிவிக்கும்போது “COVID19 தொற்றுநோய் காரணமாக நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த சவால் மிகுந்த காலகட்டம், கொழும்பு சாரணர்களுக்கு தமது வெளியைக் கடந்து சிந்திக்கவும், மெய்நிகர் கெம்போறி வழிமுறையைக் கண்டடையவும் ஊக்கம் அளித்துள்ளது.
‘கண்டுபிடிப்புக்கான பாதை’ எனும் கருப்பொருளைக் கொண்டு பலராலும் தற்போது இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் துணிகர முயற்சியானது நிச்சயமாக எமது மீள் கண்டுபிடிப்புக்கான பாதையின் தொடக்கமாக அமையும் என்பதோடு இதுவரையில், சாரணர்கள், தலைவர்கள், பெற்றோர்கள் உள்ளடங்கிய பங்குதாரர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள நேர்மறையான மறுமொழிகளைக் காணும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது” என்றார்.
கொழும்பு மாவட்டத்தின் சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர் மற்றும் திரிசாரணர்களுக்கு விரிவான முறைசாரா கல்வித் திட்டத்தில் பங்கேற்க முடியுமான, ஒரு முழுமையான மெய்நிகர் கெம்போறி அனுபவத்தை வழங்க ஏற்பாட்டுக் குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இதில் அவர்கள் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே மெய்நிகர் பாசறை கட்டடம், திறப்பு விழாக்கள் மற்றும் நிறைவு விழாக்கள், 30 Skill-O-Rama செயற்பாடுகள், மெய்நிகர் பாசறைத் தீ, குருளையர் தினம், குருளையர் திறமை நிகழ்ச்சி, நத்தார் ஞான கீதங்கள், நாட்டின் முக்கிய நபர்களுடனான பாசறைத் தீ அரட்டைகள், யோகா மற்றும் மனநலம் குறித்த அமர்வுகள், சர்வதேச கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள், எமது பங்குதாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பட்டறைகள் போன்றவற்றில் பங்கேற்கலாம்.
கொழும்பு சாரணர்கள் குறித்து
இலங்கையில் முதன்மையான சாரணர் மாவட்டமாக கருதப்படும் கொழும்பில் 11,000 இற்கும் மேற்பட்ட சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர் மற்றும் திரிசாரணர்களை உள்ளடக்கிய 50 இற்கும் மேற்பட்ட சாரணர் குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொழும்பில் சாரணியம் ஆனது, சாரணர்களை சுறுசுறுப்பான குடிமக்களாக மேம்படுத்துவதிலும், அவர்களது சமூகங்களில் சாதகமான மாற்றங்களுக்கு வழிவகுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
இலங்கை சாரணர் சங்கம் – கொழும்பு மாவட்டக் கிளை, மாவட்ட அளவில், பிரிவுகள் மட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்ட மூத்த தலைவர்களைக் கொண்டு நடத்தும் பல்வேறு முறைசாரா கல்வித் திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகும். மேலதிக விபரங்களுக்கு, பின்வரும் இணையத்தளத்துக்குள் பிரவேசிக்கவும். www.colomboscouts.lk
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
மிரால் ப்ரியங்க,
உதவி மாவட்ட ஆணையாளர் – பொதுத் தொடர்புகள் & ஊடகம்
இலங்கை சாரணர் சங்கம் – கொழும்பு மாவட்டக் கிளை,
65/7, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை
அலைபேசி இல: 071 680 8873
மின்னஞ்சல் முகவரி: [email protected]
இணையத்தளம்: www.colomboscouts.lk
Average Rating