கூந்தல்!! (மகளிர் பக்கம்)
கூந்தலைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அத்தனை பெரிய சவாலான விஷயம் எல்லாம் அல்ல. சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுகிற பட்சத்தில்…
1. உங்கள் தலையணைக்கு காட்டன் உறை போட்டிருந்தால் உடனே மாற்றுங்கள். சாட்டின் அல்லது பட்டுத் துணியால் உறை தைத்துப் போட்டு அதன் மேல் உறங்குங்கள். இது கூந்தல் உடைவதைத் தவிர்க்கும்.
2. ஷாம்பு குளியல் எடுக்கும்போது உச்சி முதல் நுனி வரை நுரை பொங்கத் தேய்த்துக் குளிக்காதீர்கள். ஷாம்பு என்பது மண்டைப் பகுதியில் உள்ள அழுக்குகளை நீக்க மட்டும்தான். அதற்குக் கீழ் உள்ள நுனி பகுதி வரை கண்டிஷனர் உபயோகியுங்கள். அது கூந்தலை சிக்கின்றி வைக்கும்.
3. அடிக்கடி முடி வெட்டினால் அது நீளமாக வளரும் என்பதில் உண்மை இல்லை. ஆனால் அடிக்கடி முடியின் நுனிகளை ட்ரிம் செய்ய வேண்டும். பிளவுபட்ட முடிகளை ட்ரிம் செய்யா விட்டால் அது வேர் வரை நீண்டு, கூந்தலை உதிரச் செய்யும்.
4. கூந்தல் என்பது சாதாரண விஷயமல்ல. ரத்தத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூந்தல் அறியும். அதனால்தான் தடய அறிவியல் சோதனைகளில் முடி முக்கியமான சாட்சியாகப் பயன்படுகிறது.
5. ஒரு கூந்தலை வைத்து, அது ஆணின் முடியா, பெண்ணின் முடியா எனக் கண்டுபிடிக்க முடியாது. அமைப்பில் இரண்டும் ஒன்றுபோலவே இருக்கும்.
6. உலகம் முழுவதும் பரவலாக் காணப்படும் கூந்தல் நிறம் கருப்பு. அரிதான நிறம் சிவப்பு. உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்தினரிடம் மட்டுமே சிவப்பு முடியைப் பார்க்க முடியும்.
7. கூந்தல் 50 சதவிகிதம் கார்பன், 21 சதவிகிதம் ஆக்சிஜன், 17 சதவிகிதம் நைட்ரஜன், 6 சதவிகிதம் ைஹட்ரஜன் மற்றும் 5 சதவிகிதம் சல்ஃபர் கலவையால் ஆனது.
8. உடலிலேயே மிக வேகமாக வளர கூடிய திசு கூந்தல்.
9. நமது வாழ்நாளில் எப்போதும் 90 சதவிகித முடியானது வளர்ச்சி நிலையிலும் 10 சதவிகித முடி ஓய்வெடுக்கும் நிலையிலும் இருக்கும்.
10. கவலைப்பட்டால் முடி நரைக்கும் என்கிறார்களே… அது உண்மைதான். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படுகிற அட்ரினலின், நமது மரபணுக்களில் உள்ள டி.என்.ஏக்களை பாதிப்பதன் விளைவால், கூந்தலின் நிறத்துக்குக் காரணமான மெலனினும் பாதிக்கப்படுகிறது. கூந்தல் நரைக்கிறது.
11. உங்களுடைய உணவு சரிவிகிதமானதாக இல்லாவிட்டால், மருத்துவரின் ஆலோசனை கேட்டு மல்ட்டி வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு வைட்டமின் சி, பயோட்டின், பி.காம்ப்ளக்ஸ் கலந்த மல்ட்டி வைட்டமின் தேவை.
12. தினசரி ஷாம்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். ஷாம்புவில் சல்ஃபேட் கலக்கப்பட்டிருந்தால் அது உங்கள் மண்டைப் பகுதியின் இயற்கையான எண்ணெய் பசையை அகற்றிவிடும். சிலிக்கான் கலந்த ஷாம்பும் வேண்டாம்.
(வளரும் !)
தெரியுமா?
இறந்த பிறகும் முடி வளரும். பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மியை சில வருடங்கள் கழித்துப் பார்த்தால் முன்பு இருந்ததைவிட வளர்ந்திருக்குமாம். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க முடி வளர்ச்சி குறையும்.
Average Rating