கூந்தல்!! (மகளிர் பக்கம்)
1. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அரை மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல. கூந்தல் ஆரோக்கியத்துக்கும் தேவை.
2.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கைப்பிடி அளவு கறிவேப்பிலையை மென்று சாப்பிடவும். இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தேவையற்ற கொழுப்பை நீக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.
3. உங்கள் தலையணைக்கு சாட்டின் துணியால் தைக்கப்பட்ட உறையை மாற்றவும். இதற்கும் தலைமுடிக்கும் என்ன தொடர்பு என யோசிக்காதீர்கள். சாட்டின் உறையிட்ட தலையணையில் தூங்கும்போது, முடி உதிர்வு குறைவதை உணர்வீர்கள்.
4. தினமும் காலை உணவுடன் பழங்கள் எடுத்துக் கொள்வதையும், இரவில் பால் எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
5. தினமும் தலைக்கு ஷாம்பு உபயோகித்துக் குளிப்பதைத் தவிர்க்கவும். 2 நாட்களுக்கு ஒருமுறை சல்ஃபேட் இல்லாத ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.
6. ஷாம்பு குளியல் எடுக்கும்போது கண்டிஷனர் உபயோகிக்க மறக்க வேண்டாம்.
7. கூந்தலை சிக்கின்றி வைத்திருப்பதுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தலைக்குக் குளித்ததும் ஈரம் போகக் காயவிடவும். பிறகு உங்கள் விரல்களைக் கூந்தலின் இடையில் விட்டு சிக்குகளை நீக்கவும். அடுத்தக்கட்டமாக பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரி விடவும்.
8. எப்போது தலைக்குக் குளித்தாலும் ஷாம்பு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றில்லை. வீட்டில் அரைத்த சீயக்காய் கொண்டு வாரம் ஒருமுறை தலையை அலசலாம்.
9. தினமும் ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல் செய்வதைத் தவிர்க்கவும். உதாரணத்துக்கு ஒரே இடத்தில் வகிடு எடுப்பது கூடாது. தொடர்ந்து அப்படிச் செய்தால் அந்த இடத்தில் முடி உதிர்வு அதிகரிக்கும். வாரம் ஒருமுறை வகிடு எடுக்கும் முறையை மாற்றவும்.
10. இறுக்கமான போனி டெயில், பின்னல் போன்றவற்றைத் தவிர்க்கவும். தளர்வான பின்னல்தான் ஆரோக்கியமானது.
11. அளவுக்கதிமான உடல்சூடு காரணமாகவும் முடி உதிர்வு அதிகரிக்கலாம். அதைத் தவிர்க்க கற்றாழை ஜெல்லை அரைத்து நீர் மோரில் கலந்து குடிக்கலாம். கற்றாழையின் ஜெல் பகுதிக்குள் முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் அந்த ஜெல்லுடன் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இதெல்லாம் உடல் சூட்டைத் தணித்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
12. தினசரி குடிக்கிற தண்ணீரில் சிறிது துளசி போட்டு வைத்துக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதுவும் உடல் சூட்டைத் தணிக்கும். தவிர மன அழுத்தத்தைக் குறைத்து அதனால் ஏற்படுகிற முதி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
13. இன்றைய வாழ்க்கையில் யாருமே சத்தான, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு இருக்கும். எனவே, மருத்துவரிடம் கேட்டு, உங்களுக்குப் பொருத்தமான, தேவையான வைட்டமின் சப்ளிமென்ட் ஏதேனும் எடுத்துக்கொள்ளலாம்.
14. முட்டையின் வெள்ளைக் கரு, நட்ஸ், பசலைக்கீரை, சீஸ்….. இவற்றில் ஒன்றை தினமும் உண்பது மூலம் கூந்தல் பலப்படும்.
15. ஜெலட்டின் என்பது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் நகங்களுக்கும் அவசியம். அதை அசைவம் என ஒதுக்க நினைப்பவர்கள், சைவ ஜெலட்டினை வாங்கி உபயோகிக்கலாம். ஜெலட்டின் பவுடரை சிறிதளவு தண்ணீரில் கலந்து தினமும் குடிக்கலாம்.
16. கூந்தலை உலர்த்தவும் செட் செய்யவும் ஹேர் ட்ரையர், ஸ்டைல் செய்ய அயர்ன் போன்றவற்றை உபயோகிப்பதைக் கூடியவரையில் தவிர்க்கவும். அவற்றிலிருந்து கிளம்பும் அதிகபட்ச சூடு, முடி உடைவதையும் உதிர்வதையும் அதிகரிக்கும்.
17. வெந்நீரில் தலைக்குக் குளிக்கக்கூடாது. குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது சிறந்தது. முடியாதவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம். அதிக சூடான தண்ணீர், கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, வறட்சியை அதிகப்படுத்தும்.
18. வைட்டமின் சி என்பது நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தினமும் காலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது புதிய கூந்தல் செல்கள் வளரக் காரணமான கொலாஜன் உற்பத்திக்கு உதவும். ஒருவருக்கு வைட்டமின் சி சத்துக் குறைபாடு இருப்பதை அவரது பொலிவற்ற, உடைந்து உதிரும் கூந்தலே காட்டிக் கொடுத்து விடும்.
19. தலைக்குக் குளித்ததும் கூந்தலை கண்ட துணியாலும் துடைக்காதீர்கள். காட்டன் துணியால் மட்டுமே உலர்த்துங்கள். நைலான் அல்லது சிந்தெடிக் துணிகளைக் கொண்டு தலையைத் துடைத்தால் சிக்கு அதிகமாகும்.
20. கூந்தலை தினமும் 100 முறைகள் வரை வாரி விடுவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும் என்று சொல்லப்படுவது தவறான நம்பிக்கை. கூந்தலில் சிக்கு இல்லாமல் வாரி விட்டாலே போதும். தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சிக்கின்றி வாரிவிடுவது சிறந்தது.
21. கூந்தலுக்கான எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் சேர்க்கப்பட்டிருக்கிற உட்பொருட்களை கவனியுங்கள். குறிப்பாக சோடியம் லாரைல் சல்ஃபேட் மற்றும் சோடியம் லாரத் சல்ஃபேட் போன்றவை இன்ஜின்களிலும் தரைகளை சுத்தப்படுத்துகிற கெமிக்கல் திரவங்களிலும் சேர்க்கப்படுபவை. அவை கலந்த ஷாம்புக்கள் விற்பனையில் இருப்பதால் கவனம் அவசியம்.
22. மண்டைப் பகுதியை மசாஜ் செய்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். தினமும் ஒருமுறையும், தலைக்குக் குளிப்பதற்கு முன்பும் மண்டைப் பகுதியை மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
23. மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து அப்படியே தலையில் தடவுவது போன்ற எந்தக் குறிப்பையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம். இலைகளையும், மூலிகைகளையும் பதப்படுத்தாமல் நேரடியாக உபயோகிப்பது ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருந்து கூந்தலை பாதிக்கும்.
24. சீப்பு, தலை துவட்டும் டவல், தலையணை உறை என எல்லாவற்றையும் தனித்தனியாகப் பயன்படுத்தவும். தவிர வாரம் ஒருமுறை இவற்றை சுத்தம் செய்து உபயோகிக்கவும்.
25. ஒருநாளின் 7 மணி நேரத்தில் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அக்கறை செலுத்தும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு முதல் ஒரு மணி நேரத்தில் 2 பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம். அடுத்தது பாதாம். மூன்றாவது கொய்யாப் பழம். நான்காவது மணி நேரம் கற்றாழை ஜூஸ். ஐந்தாவது மணி நேரம் சாலட் அல்லது கீரை. 6வது மணி நேரம் புரதம் நிறைந்த சுண்டல், 7வது மணி நேரம் பப்பாளி… இப்படிப் பிரித்து உண்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும்.
Average Rating