கூந்தல்!! (மகளிர் பக்கம்)
கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிற தென்னை மரம், இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது. மருத்துவத் துறையிலும் அழகுத் துறையிலும் தேங்காய் எண்ணெயின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அந்தக் காலத்தில் எல்லாம் தலைக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெயின் மகத்துவம் தெரிந்திருந்தது. இயற்கையான ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளைக் கொண்டிருந்ததாலும், இயற்கையான மாய்சரைஸராக இருப்பதாலும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினார்கள். மற்ற எண்ணெய்களைவிடவும் தேங்காய் எண்ணெய்க்கு சருமத்தினுள் ஊடுருவும் தன்மை அதிகம் என்பது இன்னொரு காரணம்.
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதில் தேங்காய் எண்ணெயை மிஞ்ச வேறில்லை என்றே சொல்லலாம். கூந்தல் வளர்ச்சியைத் தூண்டி, அதன் பளபளப்பைக் கூட்டக்கூடியது. தேங்காய் எண்ணெய் கொண்டு அடிக்கடி உங்கள் கூந்தலை மசாஜ் செய்து குளித்து வருவதன் மூலம் பொடுகு வராமல் தடுக்கலாம். பேன் தொல்லை நீங்கும். பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிற வகையில் போதிய புரதச்சத்துக்களைக் கொடுத்து, வளர்ச்சியைத் தூண்டக்கூடியது.கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது இப்போதுதான் அதிகரித்து வருகிறது. உங்கள் அம்மா மற்றும் பாட்டி காலங்களில் எண்ணெய் வைத்து தலை சீவுவதுதான் ஆரோக்கியமாகக் கருதப்பட்டது. அதிலும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவி, லேசாக மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வறட்சி முற்றிலும் தவிர்க்கப்பட்டு, வறட்சியின் காரணமாக வரும் பிரச்னைகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டது.
தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த கண்டிஷனரும்கூட. தவிர மண்டைப்பகுதியில் ஏற்படுகிற புண்கள், அதனால் உண்டாகும் தொற்றுக்கும் தேங்காய் எண்ணெய் இயற்கையான மருந்தாகிறது. தேங்காய் எண்ணெயிலேயே வெர்ஜன் ஆயில் எனத் தனியே கிடைக்கும். அதன் மருத்துவக்குணங்கள் இன்னும் மகத்தானவை. சருமத்தை இளமையாக, மிருதுவாக வைக்கக்கூடியது.மட்டுமின்றி கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவக்கூடியது.இந்த வெர்ஜன் ஆயிலை வீட்டிலேயேகூட தயாரிக்கலாம்.5 தேங்காயைத் துருவி, மிகக் குறைந்த அளவு தண்ணீர்விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். அந்தப் பாலை தண்ணீர் வற்றும் வரைக் கொதிக்க வைக்கவும். பிறகு எண்ணெய் மட்டும் தேங்கும். அந்த எண்ணெயை வடிகட்டினால் வெர்ஜன் கோகனட் ஆயில் தயார். வடிகட்டியதில் தங்கிப் போகிற கசண்டை தலைக்கு பேக் போலத் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டிவிடும்.
இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் டிப்ஸ்…
*நல்லெண்ணெயுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து, 2 துளிகள் செடார்வுட் ஆயில் கலக்கவும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டு, மைல்டான ஷாம்பு உபயோகித்து அலசவும். கருகரு கூந்தலுக்கு உதவும். பொடுகு போகும். குளிர் காலத்துக்கு ஏற்ற சிகிச்சை இது.
4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். தலையில் தடவி 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். நன்றாக வாரி விட்டு தலைக்கு ஷவர் கேப் அணிந்து கொள்ளவும். 1 மணி நேரம் கழித்து கெமிக்கல் இல்லாத ஷாம்பு உபயோகித்து அலசவும். டிரையர் உபயோகிக்காமல் காய வைக்கவும். வாரம் 2 முறைகள் இதைச் செய்யலாம். கூந்தல் உதிர்வது நிற்கும்.
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து குறைந்த தணலில் 5 நிமிடங்கள் சூடாக்கி ஆற விடவும். அதை வடிகட்டி இரவு தூங்கச் செல்வதற்கு முன் தலையில் தடவி மசாஜ் செய்யவும். காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கெமிக்கல் இல்லாத ஷாம்புவால் அலசவும். வாரம் 2 முறை செய்யவும். கருகருவென்ற கூந்தலுக்கு உத்தரவாதம் தரும் சிகிச்சை இது. நரை தள்ளிப்போகும்.
*தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்து இரவு அப்படியே விடவும். காலையில் மைல்டான ஷாம்பு உபயோகித்து அலசவும். வறண்ட கூந்தல் மாறும். நுனிப் பிளவு சரியாகும். கூந்தல் துண்டு துண்டாக உடைந்து உதிர்வது நிற்கும்.
*தேங்காய் எண்ணெய் நல்லதுதான். ஆனால், அளவும் முக்கியம். சொதசொதவென எண்ணெய் தடவி மசாஜ் செய்வதோ, எண்ணெய் வைத்துக் கொண்டு வெளியே செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். கூந்தலுக்குத் தேவையான அளவு மட்டுமே உபயோகிக்கவும்.
Average Rating