வின்டர் சீசனின் விளைவுகள்!! (மகளிர் பக்கம்)
மழைக்காலம், உண்மையிலேயே அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய அற்புதமான பருவ காலம். ஆனால், நம் நாட்டில் நிலவும் மக்கள் நெருக்கம், சுகாதாரமற்ற பொதுச்சூழல், மாறிப்போன உணவு முறைகள், பெருகி வரும் நோய்கள், அனைவரின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலை, வடகிழக்கு பருவ மழைக்காலத்தோடு சேர்ந்து வரும் பனிக்காலம் போன்ற பல்வேறு காரணங்களால் மழைக்காலம் என்றாலே ஒருவித “அலர்ஜி” தோன்றி விடுகிறது.“இன்றும் மழை பெய்யுமாம்” என்ற தகவல் கூட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நாம் வாழும் சூழல் மாறிப்போய் விட்டது. பருவகால சூழலுக்கு ஏற்ப நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். ‘சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினமே அதிக காலம் உயிர் வாழும்’ என்பது அறிவியல் நியதியாகவே உள்ளது. மழைக்காலம் நோய்க் கிருமிகளை ஏற்படுத்துவதனால், அது விரைவாகவும் இலகுவாகவும் பெருகி தீவிர வீரியமடைவதன் மூலம், தொற்று நோய்களை தோற்று விக்கிறது. அப்படி மழைக்காலங்களில்
ஏற்படக்கூடிய தோல், முடி, உதடு சம்பந்தப்பட்ட நோய்களும், அவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பது குறித்தும் நம்மிடையே பகிர்கிறார் டாக்டர் ஸ்வேதா ராகுல்.
‘‘வின்டர் சீசனில் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று நோய்கள், கட்டிகள், சிரங்குகள் போன்றவை ஈரத்தன்மை காரணமாக ஏற்படுகின்றன. முதலில் உடம்பில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இருந்தால் தொற்று நோய்கள் நம்மை எளிதாகத் தாக்கக்கூடும். உடைகள் நனைந்திருந்தால், வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக மாற்ற வேண்டும். மழைக்காலத்தில் ஜாலியாக இருக்கிறது என்பதற்காக மழையில் நனைவதும் நல்லதல்ல.பொதுவாக ஈரமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஈரத் துணிகளில் இருந்து நம் உடலில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகளும் இருக்கின்றன. குளித்த பின் உடலை நன்றாகத் துவட்டி, துண்டை சுத்தமான தண்ணீரில் துவைத்து, நன்கு உலரவைக்க வேண்டும். இல்லையெனில் எக்ஸிமா எனும் அலர்ஜி ஏற்படும். இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களை எளிதில் பாதிக்கிறது. மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் ஊற்றி கை, கால்களைக் கழுவுவதன் மூலம் தோல்களில் இருக்கக்கூடிய எண்ணெய் பசை போய்விடுகிறது.
இதனால் தோல் வறண்டு போய் நமைச்சலை ஏற்படுத்தி பின் காயங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மழைக்காலங்களில் ஷூ அணிவதைத் தவிர்த்து காற்றோட்டமுள்ள செருப்புகளைப் பயன்படுத்தவும். கால்களில் காற்றோட்டம் இருந்தால் தோல் பிரச்னைகள் எதுவும் வராது. டஸ்டிங் பவுடர் பயன்படுத்திய பிறகு ஷூ அணிவது பாதுகாப்பானது. தினமும் குளிப்பது நல்லது. மழைக்காலங்களில் துவைத்த துணிகள் நன்றாக உலர்ந்து விட்டதா என்று சரிபார்த்து அணிய வேண்டும்.
முடிந்த அளவு துணிகளை அயன் செய்து உடுத்துவது சிறந்தது. உள்ளாடைகளை தினமும் இருமுறை மாற்ற வேண்டும். கைத்துண்டுகள் மற்றும் துணிகளை அடுத்தவர்களிடையே பகிர்வதை தவிர்ப்பது சிறந்தது. மாய்ச்சரைஸர் பயன்படுத்தும்போது, மற்ற நாட்களைப் போல் அல்லாமல், வாட்டர் பேஸ்டு மாய்ச்சரைஸர்களைப் பயன்படுத்துவது மூலம் தோல் பாதுகாப்பாக இருக்கும்.
சர்க்கரை அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்ப்பது பாதுகாப்பைத் தரும். தினமும் சுமார் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது நல்லது. எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் உள்ளவர்கள் ெஜல் போன்ற ஃபேஸ் கிரீமும், வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்ற ஃபேஸ் கிரீமும் பயன்படுத்தலாம். முகப்பரு உள்ளவர்கள் ‘டியேடிரீ’ ஃபேஸ்வாஷ், சாலிசிலிக் ஃபேஸ்வாஷ் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும். சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவது நல்லது. முடிந்த அளவு வாட்டர் புரூஃப் சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும். பாதுகாப்பு இல்லாத முறையில் தயாரிக்கப்பட்ட ஸ்கிரப் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்த்து சிறந்த முறையிலான ஸ்கிரப் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.
முடிந்த வரை மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். மழையில் நனைந்து விட்டு வருபவர்கள் உடனே குளிப்பது உடல் மேல் ஒட்டி இருக்கும் தொற்றுகளை நீக்கி விடும். மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கக்கூடிய தண்ணீர் சூரிய ஒளி காரணமாக ஆவியாகக் கூடும். அந்த வெப்பமானது நமது உடலில் படும்போது அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே தேங்கி நிற்கக்கூடிய தண்ணீர் அருகில் நிற்பதைத் தவிர்ப்பது பாதுகாப்ைபத் தரும். மழைக்காலம், வெயில் காலம் என்று எந்தக் காலமாக இருந்தாலும் நம்மையும் நாம் சார்ந்த இடத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டாலே போதும். நோய்கள் குறித்த கவலை இல்லாமல் இருக்கலாம்.
மழைக்காலத்தில் தலை முடியை எப்படி பாதுகாப்பது?
வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் கண்டிசனர் உபயோகித்து குளிக்க வேண்டும். ஹேர் சீரம் பயன் படுத்துவதால் மண்டையில் மேல் தோல் வறண்டு விடுவது போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கலாம். கூந்தலை பளபளப்பாகவும், பிசுக்கில்லாமலும் வைத்து தலைமுடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்கலாம். ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதை பயன்படுத்துபவர்கள் தலைமுடியை அருகில் வைத்து பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவதால் அதிக முடி உதிர்வு ஏற்படும். புரோட்டின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உதட்டை பாதுகாப்பது எப்படி?
முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாடின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகளை மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிலவற்றை பின்பற்றினாலே போதும். மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘லிப் பாம்’ தடவிக் கொள்ளலாம்.தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது. உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதடு களை கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி விடவும் கூடும். எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் உள்ள பாக்டீரியாக்களால் உதட்டில் புண்கள் ஏற்படும். மிருதுவான பிரஷ் கொண்டு உதட்டை சுத்தம் செய்வது நல்லது”.
Average Rating