சிறுபான்மையினரை அடக்கியாளுதல் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 36 Second

ஆங்கிலத்தில் sadism என்ற சொல்லுண்டு. இந்த வார்த்தை sadisme என்ற பிரென்ஞ் சொல்லில் இருந்து வந்தது. Sadisme என்ற பிரென்ஞ் சொல்லானது, மாக்கி டு சாட் (Marquis de Sade) என்ற பிரென்ஞ் எழுத்தாளரின் பெயரிலிருந்து வந்தது.

மாக்கி டு சாட்டின் சிற்றின்பக் கதைகள், வன்முறைக்கு பெயர்போனவை. மற்றவர்களைத் துன்புறுத்துவதன் ஊடாக, இன்பமடையும் தன்மைகள் அவற்றில் விஞ்சி நிற்கும். இதனால், பாலுறவில் மற்றவரைத் துன்பப்படுத்துவதன் ஊடாக, இன்பமடைவதற்கு sadism (சேடிஸம்) என்ற சொல் வழங்கலாயிற்று.

காலப்போக்கில் இந்தச் சொல், பாலுறவு என்பதைக் கடந்து, மற்றவர்களைத் துன்பப்படுத்தி அல்லது, மற்றவர்களை அடக்கியாண்டு, அதன் மூலம், அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து, ஒருவகை இன்பத்தைப் பெறுபவர்களைக் குறிக்கும் சொல்லாயிற்று. இதற்கு நிகரான, நியமத் தமிழ்க் கலைச் சொல் உள்ளதா என்று தெரியவில்லை. ஆயினும், ‘துன்புறுத்து வேட்கையாளன்’, ‘தாக்கின்பி’, ‘துன்புறுத்தல் விரும்பி’ ஆகிய சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

உளவியலில் ‘dark triad’ என்று நாஸிஸிஸம் (தற்காதல்), மக்கியாவலியனிஸம், சைக்கோபதி என்ற மூன்று ஆளுமைத் தன்மைகளைக் குறிப்பிடுகிறார்கள். இவை மூன்றும், எதிர்மறையான தீய தன்மைகளாகக் கருதப்படுவதால், ‘மூன்று இருளான தன்மைகள்’ எனப்படுகின்றன.

உளவியலாளர்கள் பக்கள்ஸ், போல்ஹஸ், ஜோன்ஸ் ஆகியோர் மேற்கொண்ட தமது ஆய்வின் முடிவில், dark triad உடன், Sadism உம் இணைத்து ‘dark tetrad’ (நான்கு இருளான தன்மைகள்) ஆக, அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். நிற்க!
அண்மைய நாள்களில், இலங்கையின் சிறுபான்மையினர் தொடர்பான இரண்டு விடயங்கள், உலகின் கவனத்தை ஈர்த்திருந்தன; ஈர்த்து வருகின்றன.

முதலாவதாக, போரில் இறந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூருவதைத் தடை செய்வதற்கு, அரசாங்கம் பகீரதப் பிரயத்தனத்துடன் செயற்பட்டது.

மற்றையது, கொவிட்-19 நோய் காரணமாக இறந்த முஸ்லிம் மக்களின் பூதவுடல்களை, அவர்களது மதநம்பிக்கைக்கு ஏற்ப புதைக்காமல், அவர்களது விருப்பத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறாக, அரசாங்கம் எரிக்கின்றமை ஆகும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினர், மொழி, கலை, கலாசார, மதம் ஆகிய அடையாளங்கள் ரீதியாக அடக்கியொடுக்கப்பட்ட சம்பவங்கள், அழித்தொழிக்கப்பட்ட கொடூரங்கள் என்பவற்றைப் பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே செல்லும்.

மக்களிடையே உள்ள இன, மத, மொழி, கலாசார வேறுபாடுகளை, தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட இன-மதவாத பெருந்திரள்வாத அரசியல் சந்தர்ப்பவாதத்தின் விளைவுதான், இலங்கையின் இனப்பிரச்சினை என்பதை மறுக்க முடியாது.

பெரும்பான்மையின இனவாத அரசியலால், ‘அந்நியர்’களாக அடையாளப்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் மீதான வெறுப்பு, பல தசாப்தங்களாக உரமிட்டு வளர்க்கப்பட்டதன் வினைவுதான், இன்று வேர்விட்டு, வளர்ந்தெழுந்து, விழுதுவிட்டு, அசைக்கமுடியாத விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இதன் நேரடி விளைவுதான், சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்படுதல் ஆகும்.

இறந்தோரை நினைவில் கொள்ளல் என்பது, மனித இனத்தின் மிகப்பழைய மரபுகளில் ஒன்று. குறிப்பாக, தமிழ் மக்களிடையே 2,700 ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கிறது என்பதற்குப் பழந்தமிழ் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ சான்று பகர்கின்றது. ‘காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்’ என்கிறது தொல்காப்பியம். தாம் வீரனாகக் கருதுவதைப் போற்ற, வீரனுக்கு அவன் நினைவு போற்ற, நடுகல் வைப்பது தமிழ் மரபு. அதற்குரிய கல்லை, போர் நிகழ்ந்த இடம், உயிர் துறந்த இடம் போன்ற இடங்களில் தேடி எடுப்பது, ‘காட்சி’ என்பதாகும். தாம் கண்டு, காட்சிப்படுத்திய நடுகல்லைக் கொணர, திரளாகச் சென்று எடுத்து வருவது கால்கோள். கால்கோள் கல் கொணர்ந்தும், ஊர் நீரால் உவப்புடன் கழுவிச் சுத்தப்படுத்துவது நீர்ப்படை என்பதாகும். நீர்ப்படையால் ஊரார் உதவியுடன் சுத்தம் செய்து, ஊரின் மய்யத்திலோ, வீரருக்கு உகந்த இடத்திலோ, ஊர் எல்லையிலோ நடுவதே நடுகல் ஆகும். நடப்பட்ட நடு கல்லுக்குச் சிறப்பு செய்யும் வகையில், அந்நடுகல்லை வீரரின் உருவாகவே பாவிப்பதால், விரும்பிய உணவைப் படைத்து, படையலிடுவது பெரும்படை; பெரும்படை எனும் உணவுப் படையலிட்டு, ஊர்க்கூடி வழிபடுவது என்பது வாழ்த்தல்.

இது, தமிழர்களின் 2,700 ஆண்டுகள் பழைமையான பாரம்பரியம். ஆனால், இங்கு இறந்தோரை நினைவுகூருவதும் போற்றுதலும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய பாரம்பரியம் என்று மட்டும், சொல்லிவிட முடியாது. உலகம் எங்குமுள்ள கிட்டத்தட்ட அனைவருமே, ஏதோ ஒரு வகையில் முன்னோரை நினைவில் கொள்கிறார்கள்; இறந்தவர்களை நினைவில் கொள்கிறார்கள்.

தான் போரிட்டு விழுத்திய, தான் எதிரியாகக் கருதிய எல்லாளனுக்கு, நினைவுக்கல் எழுப்பிய துட்டகைமுனுவை நாயகனாகக் கருதும் தேசம், துட்டகைமுனுவின் அந்த மாண்பைக் கூடக் கடைப்பிடிக்கத் தவறி, பெற்றதாய், தனது மகனை, அவன் யாராயிருப்பினும் கூட, நினைவு கொள்வதைக் கூடத் தடுக்க, கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டது. இதுதான் இனவெறி. எல்லாமிழந்த அந்தத் தாய், தன் மகனை நினைவு கூர்வதைத் தடுப்பதைத் தமது வெற்றியாகக் கருதுவதும் அதில் இன்பம் காண்பதும் ஒரு வகை sadism தான்.

“பயங்கரவாதிகள் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள்; அவர்கள் தோற்கடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டாலும் அவர்களை நினைவுகொள்ள அனுமதிப்பது நாட்டுக்கு ஆபத்தானதாகும். நாம் தமிழர்களின் மரபையோ, உணர்வையோ தடுக்கவில்லை. பயங்கரவாதிகள் போற்றப்படுவதைத்தான் தடுக்கிறோம். இது இனவாதம் அல்ல” என்ற தர்க்கம் சிலரால் முன்வைக்கப்படலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால், இதுகூட நியாயமான தர்க்கமெனத் தோன்றலாம். ஆனால், இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்க ஆயுதமேந்திப் போராடிய, எத்தனையோ ஆயிரம் சிங்கள மக்களின் உயிர்களைப் பலியெடுத்த ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி, இன்றுவரை அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய, தம் தலைவர்களை இலங்கையின் தலைநகரில் நினைவு கூர்கிறது. அவர்களது ஆளுயர்ந்த படங்கள், வீதிபவனிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வேறுபாடுதான், இந்த வேறுபட்ட நியாயங்கள்தான், இனவெறி ஆகின்றன. தாம் விரும்பாத, ‘அந்நியர்’ ஆகக் கருதும் சமூகத்தின் மேல், அரசாங்க இயந்திரத்தின் அத்தனை பலத்தையும் கொண்டு கட்டவிழ்த்து விடுவதுதன் மூலம், பெரும்பான்மை இனம் திருப்தியடையும் என்ற மனப்பாங்குதான் sadism.

கொவிட்-19 நோய் தொற்றால் உயிரிழந்தவர்கள், அவர்களது நம்பிக்கையின் படி புதைக்கப்படுவதைத் தடுக்கச் சொல்லி, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிக்கவில்லை. உலக நாடுகளில், கொவிட்-19 நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை அரசாங்கம், கொவிட்-19 இனால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அதை வலுக்கட்டாயமாக எரியூட்டி வருவதாக ஊடக அறிக்கைகளும் நாடாளுமன்றப் பேச்சுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையை விட, கொவிட்-19 நோய் தொற்று மரணங்கள் கூடியதும் குறைவான நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் தடைசெய்யாத ஒன்றை, இலங்கை அரசாங்கம் எந்தவித நிச்சய விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுமின்றித் தடை செய்வது, ஏன் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இதற்குச் சிலர் அச்சம், தடுப்பு நடவடிக்கை என்று பதிலளிக்கலாம்.

அச்சம் என்பதில், சாதாரணமாக அனைவருக்கும் எழக்கூடிய அச்சம் என்பது ஒன்று; paranoia (ஐயப்பித்து) என்பது வேறு. அளவுக்கு மீறிய ஐயத்தாலோ அச்சத்தாலோ வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்ளுதல், தற்செயலான அல்லது, மிகச் சாதாரணமான அல்லது, நிகழாத நிகழ்வுகளுக்கு எல்லாம் மிகையான ஐயங்களாலும் அச்சத்தாலும் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வது, இல்லாதவையெல்லாம் இருப்பதுபோல் தோன்றும் போலி நம்பிக்கை என்பவற்றை paranoia என்கிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக, சடலங்களை அடக்கம் செய்வது ஆபத்தானது என்றால், அதை விஞ்ஞான ரீதியில், வளர்ச்சி அடைந்த நாடுகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் உடனடியாகத் தடைசெய்திருக்கும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இந்த நிலையில், கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை, விஞ்ஞான ரீதியாக உலக நியமங்களின்படி, ஏற்புடைய நியாயங்கள் எதுவுமின்றி வலுக்கட்டாயமாக எரியூட்டுவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும்.

மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் புதைப்பதுதான் அச்சம் என்றால், அதற்கு எத்தனையோ மாற்று வழிகளை ஏற்பாடு செய்திருக்கலாம். ஆளரவமற்ற வறண்ட நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்து, அதை இந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தி இருக்கலாம். அது, அந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையாக ஆறுதலைக் கொடுத்திருக்கும். இதைத்தான், ஒரு பொறுப்பான அரசாங்கம் செய்திருக்கும். அச்சம் கொள்ளக்கூடிய மற்றைய மக்களைக் கூட, அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்க, நடவடிக்கை எடுப்பதனூடாக அவர்களது அச்சத்தைக் களையவும் நடவடிக்கை எடுத்திருக்கும்.

இதற்கு, இனவெறியும் சிறுபான்மையினரை மேலும் மேலும் துன்பப்படுத்தும் எண்ணமும் அல்லாது, வேறென்ன நியாயங்கள் இருக்க முடியும்?

ஆள்பவர்கள், வள்ளுவன் சொன்ன ஒரு நியதியை, ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ‘கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானும் அசிங்கமா பேசுவேன்!! (வீடியோ)
Next post பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.!! (அவ்வப்போது கிளாமர்)