இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!! (மருத்துவம்)

Read Time:19 Minute, 31 Second

இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் மிகச் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

ஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர். எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியை தாங்கிக்கொள்ளும் சிறப்புத் தன்மை கொண்டது. பழங்காலத்திலும் சரி, இன்றும் கிராமப்புறங்களில் அநேக வீடுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் குளிர்ச்சியையும் இந்த எண்ணெய் தரும். கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை எள் முற்றிலுமாக தடுக்கின்றது. அதிலும் சுத்திகரிப்பு செய்யாத, மரச்செக்கிலிருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது. தினமும் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்படும். நல்லெண்ணையைவிட அதிகம் பலன் தரக்கூடியது எள் தான்.

எள்ளை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் அல்லது சமையலில் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். பருவமடைந்த பெண்களுக்கு எள் உருண்டை, எள்சாதம் செய்து கொடுப்பதால் இரும்புச்சத்து இழப்பு தடுக்கப்படுகிறது. எள் விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள் விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள் விதைகளை
சாப்பிடலாம்.

இதயத்திற்கு நல்லது

எள் விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சீசேமோலின் (Sesamolin), அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

ரத்த சோகையைத் தடுக்கும்

இரும்புச் சத்தினால் ஏற்படும் ரத்த சோகை குறைபாட்டினை நீக்கும் தன்மை எள் விதையில் உள்ளது. வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்துக்களை உடலுக்கு அதிக அளவில் தருகின்றது.

ஆற்றல் தரும்

எள்ளில் புரதச் சத்து அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 சதவீதம் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஃபோலிக் அமிலம் தேவையோ அதில் 25 சதவிதத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் புரதச் சத்து மற்றும் நார் சத்துக்கள் உள்ளதாக விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படி நீண்ட சத்துக்கள் அட்டவணையைக் கொண்ட எள்…

1. சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
2. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
3. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது
4. கொழுப்பின் அளவை குறைக்கிறது
5. ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பானாக செயல்படும் (Act As A Antitode)

எள், சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் முற்றிலுமாக நீக்கி நல்ல பளபளப்பை தரக் கூடியது.

மாமிசத்திற்கு பதிலாக

மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள்ளை தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.

சர்க்கரை நோய்

எள் விதையில் மெக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எள் விதை அல்லது எள் எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும். தினமும் 1 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நீரிழிவு நோய்க்கான செல்கள் முற்றிலுமாக இறந்துவிடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரத்த அழுத்தத்தை குறைக்க

எள் விதை மற்றும் சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த எள் விதைகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்தது. ஏனெனில், எள் விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும். கொலஸ்ட்ராலை குறைக்கிறது

எள் விதைகள் கொலஸ்ட்ரால்

அளவைக் குறைக்கவும் உதவும். ரத்தத்தில் படிந்திருக்கும் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக குறைக்கின்றது. ஏனெனில், இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள் விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள் சாப்பிடுவது மிகவும் நல்லது. குடலியக்க ஆரோக்கியம் எள் விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும். புற்று நோய்க்கெதிரான பண்புகள் எள் விதையானது புற்று நோயை அடியோடு அகற்றவல்லது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் இருப்பதால் இவை புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் எள் விதைகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், மூட்டுகள் மற்றும் ரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.

கல்லீரலைக் காக்கும்

மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் தினமும் எள் விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.

உறுதியான எலும்பிற்கு

ஒரு கையளவு எள் விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள் விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள் விதைகளையாவது சாப்பிட வேண்டும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகம்தான், நம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

மன ஆரோக்கியத்திற்கு

சிலர் எப்போதும் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.

எடை குறைப்பிற்கு சிறந்தது

எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள் எள் பொடியை தினமும் எலுமிச்சை மற்றும் தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் போன்று உருவாக்கி கொள்ளவும். தினமும் ஒரு உருண்ட காலை எழுந்ததும் உண்டு வந்தால் எடை குறைய தொடங்கும்.

வாய் துர்நாற்றம்

நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வாயில் இருக்கும் துர்நாற்றம் குறையும். சிலருக்கு வாயில் அடிக்கடி புண் வந்து அவதிப்படுவார்கள். இவர்கள் நல்லெண்ணெயால் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.

சரும பராமரிப்பு

தினமும் உணவில் எள்ளை அல்லது காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் ஊற வைத்த எள் தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கி சருமம் பொலிவடையும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி போன்ற நோயிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கும்.

முடி ஆரோக்கியம்

எள் எண்ணெயிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை கொண்டு தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். முடியின் அடிப்பகுதியில் இருக்கும் ஸ்கால்ப் நன்கு வளம் பெற்று முடி கொட்டுவது முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.

பற்களுக்கு பாதுகாப்பு

எள் விதை பவுடருடன் சிறிது கிராம்பு பொடியை சேர்த்து தினமும் காலை பல் துலக்கிய பிறகு தடவி வந்தால் பற்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நல்ல பளபளப்பையும் பெறும். எள் விதை பொடியானது பற்களின் மேலுள்ள எனாமலை நன்கு உறுதி பெற செய்கிறது. நாம் உண்ணும் கடின உணவுகள் மற்றும் சத்து கோளாறுகளால் பற்களின் எனாமல் தேய்ந்து விடுகின்றது. இந்த உராய்வை எள் விதையானது சரிசெய்கிறது.

முகச் சுருக்கம் நீங்க

30 வயதை தாண்டியவுடன் பெரும்பாலானவர்களுக்கு முகச் சுருக்கம் ஏற்படும். அப்படியான முகச் சுருக்கம் உடையவர்கள் எள் விதையின் பொடியுடன் தேன் அல்லது பால் கலந்து இரவில் பேஸ் பேக் போட்டு பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள் விதை பொடியை முகத்தில் தடவிய பிறகு சோப்போ, ஃபேஸ் வாஷ் கொண்டோ முகத்தை கழுவக்கூடாது. 4 மணி நேரத்திற்கு முகத்தில் எந்த வித ரசாயனமும் பயன்படுத்த கூடாது. இதை தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்

எள் விதை பவுடரை அரிசி மாவுடன் கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் போன்று தேய்க்க வேண்டும். இது முகத்திற்கு நல்ல பொலிவையும் இளமை தோற்றத்தையும் தருகின்றது. டெட் செல்களை அகற்றி முகத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகின்றது. முகம் எப்போதும் மினுமினுப்புடன் இருக்க நல்ல இளமை தோற்றத்தையும் தந்து பராமரிக்க உதவுகின்றது.

மாதவிடாய் பிரச்னைகளுக்குத் தீர்வு

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். இவ்வளவு நன்மைகளைத் தருவதால்தான், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனாலேயே அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

எள் சாதம்

எள்சாதம் செய்யும் முறையை சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் இங்கே விளக்குகிறார்.

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – 1 கப்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கருவேப்பிலை – 1 கைப்பிடி,
நல்லெண்ணெய் – தாளிக்க.

எள் பொடி செய்ய

எள் – 3 டேபிள் ஸ்பூன்,
உளுந்து- 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 6 to 7,
பெருங்காயம் – ½ டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
மல்லித்தழை – 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது).

செய்முறை

ஒரு கடாயில் எள், உளுந்து, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சூட்டை தணிக்கும் சேப்பைக்கிழங்கு!! (மருத்துவம்)
Next post பெண்களின் கண்ணுக்கு மை அழகு!! (மகளிர் பக்கம்)