பெண்களையும் குறிவைக்கும் பாலி ஜெனிக் இன்ஹெரிடன்ஸ்!! (மருத்துவம்)
சமீபத்தில் முப்பது நாற்பது வயதில் இருப்பவர்கள் இருதய பிரச்னையால் அவதிப்பட்டது மட்டுமல்லாமல், மாரடைப்பு காரணமாக உயிரிழக்கவும் நேரிடுகிறது. பொதுவாக இருதயத்திற்கு ரத்தம் எடுத்து செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் இருதய நோய் ஏற்படும். இது சுற்றுப்புறச்சூழல், புகை மற்றும் மது
பழக்கம், நீரிழிவு நோய், அதிகளவு கொழுப்புச் சத்து போன்ற காரணத்தால் ஏற்படும் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது வழக்கம். மேலும் இது மரபணு நோய் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது எந்த ஒரு பிரச்னை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களையும் இருதயநோய் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்கிறார் இருதய நிபுணர் டாக்டர் அஜித் முல்லாசாரி.
‘‘மரபு ரீதியாக இருதய பிரச்னை ஏற்படும் என்று நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதே சமயம் அதிக அளவு கொழுப்பு பிரச்னை ஒருவரின் குடும்ப மரபணுக்களில் இருந்தால், அவர்களுக்கு சிறு வயதிலேயே இருதயநோய் ஏற்பட வாய்ப்புள்து. அதே சமயம் இந்த பாதிப்பு ஏற்படுபவர்கள் மிகவும் குறைவு. அதே சமயம் மரபணு காரணமாக ஏற்படும் இருதயநோய் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. இருதயத்தில் பிரச்னை ஏற்பட ஒரு குறிப்பிட்ட மரபணு தான் காரணம் என்று சொல்ல முடியாது. அது பலத்தரப்பட்ட மரபணுக்களால் ஏற்படுகிறது. இதனை ‘பாலி ஜெனிக் இன்ஹெரிடன்ஸ்’ என்று மருத்துவ மொழியில் குறிப்பிடுவோம். நம்முடைய உடலில் லட்சத்துக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன.
முன்பு இந்த மரபணுக்களை ஆய்வு செய்வது மிகவும் கடினம். அதிக செலவும் கூட. ஆனால் இப்போது மருத்துவத் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து இருப்பதால் இதனை ஏளிதாக கண்டறிய முடியும். ஐரோப்பிய மருத்துவ ஆய்வில் சில மரபணுக்கள் ஒன்றாக இணையும் போது, அது மாரடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை, ‘பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர்’ மூலம் கண்டறியலாம்’’ என்றார். ‘‘தற்போது 40 வயதிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவங்க டயபெட்டிக் நோயாளியாக இருக்க மாட்டார்கள். குண்டாகவோ, புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கமும் இருக்காது.
நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தில் யாருக்காவது குறைந்த வயதில் இருதய பிரச்னை ஏற்பட்டு இருக்கும். ஆனால் இவர்களுக்கு மாரடைப்புக்கான எந்த வித அறிகுறியும் இருக்காது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு முதல் அட்டாக்கிலேயே இவர்கள் இறக்க நேரிடும். இவர்களுக்கு ஏன் வருகிறது என்ற காரணமும் தெரியாது. மருத்துவ ஆய்வுப் படி குறைந்த வயதில் எந்த பிரச்னை இல்லாமல் இருந்தாலும், இவர்களின் பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர் அதிகமாக இருந்திருக் கக் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது அவர்கள் பிறக்கும் போதே இருதய பிரச்னைக்குண்டான மரபணுவுடன் பிறந்திருக்கக்கூடும்.
அதை பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர் என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, அவர்களின் பிரச்னைக்கான தீர்வினை அறிந்து அவர்களின் வாழ்க்கை முறையினை மாற்றி அமைக்கலாம். உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி தன்னை ஆய்வு செய்து கொண்டபோது, அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணு 99% இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனால் அவர் புற்றுநோய் தாக்காமல் இருக்க தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் நீக்கிவிட்டார். அதே போல் மாரடைப்பு ஏற்படுத்தக்கூடிய மரபணுக்களை கண்டறிந்து அதற்கான வாழ்க்கை முறை மற்றும் சிகிச்சையினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் மார்பகத்தை நீக்குவது போல் இருதயத்தை மாற்றவோ அல்லது மரபணுக்களை நீக்கவோ முடியாது.
அதே சமயம் ரிஸ்க் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்றவர் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒருவகை மரபணுக்கள் உண்டு என்றார். ‘‘நம்முடைய உடல் பலதரப்பட்ட மரபணுக்களால் அமைக்கப்பட்டது. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், நீரிழிவு… என ஒவ்வொன்றும் ஒரு மரபணுக்களால் இணைக்கப்பட்டு இருக்கும். எல்லா மரபணுவும் சரியாக அமைக்கப்பட்டு இருக்கும் என்று சொல்லிட முடியாது. அவ்வாறு சரியாக அமைக்கப்படாத மரபணுக்கள் ஒன்றோடு ஒன்றாக இணையும் போது அவை பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். மரபணுவை மாற்றி அமைக்க முடியாது. ஆனால் மரபணுவில் பிரச்னை ஏற்படுத்தும் பகுதியினை நீக்க முடியும்.
மேலும் அந்த மரபணுக்கள் மீண்டும் தோன்றவோ அல்லது வளரவோ செய்யாது என்று மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவில் கெட்ட மரபணுக்களை நீக்கி அங்கு நல்ல மரபணுக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சியும் செய்ய வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும், பிரச்னை அறிந்து அதற்கான சிகிச்சை முறையை கடைப்பிடித்து, வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால், கண்டிப்பாக இருதய நோய் குறித்த பிரச்னையில் இருந்து தீர்வு காணமுடியும்’’ என்றார் இருதய நிபுணர் டாக்டர் அஜித் முல்லாசாரி.
Average Rating