கிழியும் கால் மூட்டு ஜவ்வு… கடந்து வர என்ன வழி? (மருத்துவம்)
‘‘போன மாசம் வண்டியில இருந்து கீழ விழுந்திட்டேன். பெருசா ஒண்ணும் அடி படல. அப்போ சாதாரண வலியும், வீக்கமும்தான் இருந்துச்சு. விழும்போது பட்டுன்னு முட்டிக்குள்ள இருந்து ஒரு சத்தம் வந்துச்சு. மாத்திரையும், மருந்தும் வாங்கிப் போட்ட போது, சரியாயிடுச்சு. ஆனா, நடக்கும்போது மட்டும் கால் முட்டி அப்பப்போ கண்ட்ரோல் இல்லாம மடங்குது… என்ன செய்யறது? எந்த டாக்டரப் போய் பாக்குறதுன்னு தெரியல”… இது போன்ற பிரச்னைகளை பலர் சந்தித்து இருப்பார்கள். அந்த பிரச்னை என்ன? அதற்கான தீர்வு பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கால் மூட்டின் அமைப்பு
ஓர் எலும்பு இன்னோர் எலும்புடன் இணையும் இடத்தையே மூட்டு என்போம். அப்படி தொடை எலும்பும், கால் எலும்பும் இணையும் இடமே கால் மூட்டு (knee joint). நம் உடம்பில் கால் மூட்டு தான் பெரிய மூட்டு. அதனால் இதனைப் பலப்படுத்த இதைச் சுற்றிலும் பாதுகாப்பாய் மென் திசுக்களான ஜவ்வுகள் (Ligament), திரவப் பைகள், மஜ்ஜை என பல உறுப்புகள் அமைந்திருக்கிறது. அத்துடன் தொடையின் முன் மற்றும் பின் பக்கமுள்ள தசைகளும் வலு சேர்க்கின்றன. ஆனாலும் எளிதில் ஜவ்வுகள் கிழிய வாய்ப்புள்ள மூட்டுகளில் கால் மூட்டு எப்போதும் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவ்வு கிழிவது என்பது..?
மேலே சொன்னது போலவே இரு எலும்பு முனையும் இணைந்தே மூட்டு ஆகிறது. அந்த எலும்புகளை எல்லா திசைகளிலும் இணைத்து இறுக்கமாகப் பிடித்திருக்கும் மென் திசுவே ஜவ்வு எனப்படும். கால் முட்டியில் முக்கியமாக, அதிகமாக கிழியும் ஜவ்வுக்களாக இரு புறங்களிலும் இரு ஜவ்வுகள், இரு எலும்புகளுக்கு நடுவே இரண்டு ஜவ்வுகள், இரண்டு குஷன் தட்டுக்கள் இருக்கின்றன. இது இல்லாமல் மற்ற மென்திசுகளும் இருக்கின்றன. இந்த ஜவ்வுகளில் விரிசல் விழுவது, பாதிக் கிழிவது, முழுவதுமாக கிழிவது, ஒன்று மட்டும் கிழிவது, இரண்டு மூன்று சேர்ந்து கிழிவது என அனைத்தும் கால் முட்டிக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனையே ஜவ்வு கிழிவது எனலாம்.
ஜவ்வின் முக்கியத்துவம்
நம் கால்களின் மூட்டை வலிமைப்படுத்தவும், நாம் நடக்கும் போதும், உட்காரும் போதும், ஓடும் போதும் என அனைத்து அசைவுகளிலும் பக்கபலமாக இருப்பதும் ஜவ்வுகள் தான். அத்தகைய ஜவ்வில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அசைவுகள் ஏற்படும்போது திடமாய் இல்லாமல் முட்டியானது தடுமாறும். இதனால் நாம் மேலும் விழுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பது அனைவரும் அறிய வேண்டிய தகவல்.
எப்படி ஏற்படும்?
*மூட்டு எதிர்பாராமல் அதீத விசையை எதிர்கொள்வதால்.
*திடீரென தன்னை அறியாமல் கால் திரும்பி (twist) நடப்பதாலும், விழுவதாலும்.
எதனால் ஏற்படும்?
*வாகன விபத்தில், குறிப்பாக இரு சக்கர வாகன விபத்தால்.
*விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும் போது காயம் ஏற்படுவதால்.
*மாடிப் படிகளில் கால் தவறி விழுவதால்.
யாருக்கெல்லாம் நிகழலாம்?
* ஆண், பெண் இருவருக்கும் நிகழலாம். எனினும் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.
* 20 வயது முதல் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்.
* தசைகள் பலவீனமாய் இருப்பவர்கள் மற்றும் கால்பந்து, கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்
*அடிபட்ட போது மூட்டில் ‘கடக்கு’ என்று ஒரு சத்தம் ஏற்பட்டால் ஜவ்வு சார்ந்த காயம் ஏற்பட்டிருக்கலாம்.
*ஜவ்வில் காயம் ஏற்பட்டவுடன் மூட்டில் வலி, வீக்கம், தோல் சிவப்பாய் மாறுவது, நடக்க முடியாமல் போவது போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றும்.
*பிறகு நடக்கும் போது, மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போது மூட்டு வலுவாய், இறுக்கமாய் இல்லாமல் மடங்குவது போன்று தோன்றும்.
*விளையாட்டு வீரர்களால் மீண்டும் இயல்பாய் விளையாட முடியாமல் போவது. அப்படியே விளையாடினாலும் நடுநடுவே கால் மடங்கி தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் உண்டாவது.
எப்படி கண்டறிவது?
*மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் மூட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவ்வு, தசைகள் ஆகியவற்றை அசைவுகள் (special tests) மூலம் சோதித்துப் பார்த்து ஜவ்வு கிழிந்து உள்ளதா என்று உறுதி செய்வார்.
*பிறகு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிந்துரை செய்வார் (இதன் உதவியால் எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அறுவை சிகிச்சை அவசியமா?
என்பதனை தெரிந்துகொள்ளலாம்).
*எக்ஸ்-ரே மூலம் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதையும் அறியலாம்.
தீர்வுகள்
*வலி அதிகமாய் இருந்தால் எலும்பு மூட்டு மருத்துவர் வலி நிவாரணி மாத்திரைகள் வழங்குவார்.
*ஜவ்வு முழுவதும் கிழிந்து, பயிற்சிகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்.
*அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு முழுவதுமாக திரும்ப இயன்முறை மருத்துவரின் ஆலோசனையும், பயிற்சியும் அவசியமாகிறது.
*விரிசல் அல்லது பாதி கிழிந்த நிலையில் இருக்கும் ஜவ்வுகளை போதிய ஓய்வோடுக் கூடிய இயன்முறை மருத்துவ பயிற்சிகள் மூலமாக எளிதில் குணப்படுத்த முடியும். அதே சமயம் விரிசல் தான், பாதி தான் கிழிந்திருக்கிறது என்று அலட்சியமாக எண்ணி பயிற்சிகள் செய்யாமல் இருந்தால் முழுவதுமாக கிழிய 100 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தடுக்க உதவும் வழிகள்
*உடற்பயிற்சிகள் மூலம் தசைகளை பலமாய் மாற்றிக் கொண்டால் இவ்வாறான சிக்கல்கள் வராது.
*விளையாடுவதற்கு முன்னும், பின்னும் சில பயிற்சிகள் (warm up, warm down) செய்ய வேண்டும். அவை ஜவ்வு, தசைகளில் காயம் ஏற்படாமல் தவிர்க்க உதவும். இதனை விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றி தினசரி வழக்கமாக உடற்பயிற்சி செய்வதை வாழ்வியல் நடைமுறையாக வைத்திருப்பவர்களும் கடைப்பிடிப்பது அவசியம்.
Average Rating