சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்? (கட்டுரை)

Read Time:14 Minute, 33 Second

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது.

கணிசமானோர் சாணக்கியன் எம்.பியின் இந்தச் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளின் கனதியும் அவரது உரையுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது.

சாணக்கிய அரசியல் தெரிந்த பெரும் தலைமைகள், அரசியல் ஞானிகள், வித்தகர்கள் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படும் கடந்தகால, நிகழ்கால முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காத்திரமான உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்குத் தவறியிருக்கின்ற சூழலில், தமிழ்த் தரப்பிலிருந்து ஓர் இளம் நாடாளுமன்ற உறுப்பினர், சகோதர சிறுபான்மைச் சமூகத்துக்காகப் பேசியிருக்கின்றார்.

இந்நிலையில், ”இவர் போன்ற தமிழ் அரசியல்வாதிகளுடன், முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டும்” என்று, கணிசமான சமூக வலைத்தள கருத்துப் பதிவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறத்தில், ”அவர், ஏதோ ஓர் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்களின் உரிமை பற்றி, உரைநிகழ்த்தி இருக்கின்றார். இதை நம்பிவிடக் கூடாது” என்ற மாற்றுக் கருத்துகளும் முன்வைக்கப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

இது போன்ற சம்பவங்கள், இடம்பெறுவது புதியதல்ல. உதாரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், முஸ்லிம்களுக்குச் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியமை போன்ற பல சந்தர்ப்பங்களில், இவ்விதமான பாராட்டுகளும் தூற்றுதல்களும் நிறைந்த தோரணையிலான கருத்துகளை, முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்கள் பரிமாற்றிக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி, வஞ்சிக்கப்படுகின்ற அல்லது உரிமை மறுப்புக்கு உள்ளாகின்ற இன்னுமொரு சகோதர சமூகத்துக்காகப் பேசுகின்றார் என்றால், அது பாராட்டுதலுக்கு உரியது. இப்பாராட்டு அப்பிரதிநிதிக்கானது மட்டுமானதல்ல; மாறாக, அப்பிரதிநிதியைத் தெரிவு செய்த சமூகத்துக்குமானதாகும். தமிழ்ச் சமூகத்துக்காக, முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் பேசினாலும், அது, சமூக நல்லிணக்கத்துக்கான சமிக்கை என்ற அடிப்படையில், வரவேற்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து, எந்தவோர் அரசியல்வாதியையும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டியதும் இல்லை. அதேபோன்று, அவரது உள்நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்ற ரிஷிமூலத்தைத் தேடிச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்களை மோசமாக விமர்சிப்பதும், நேரத்தை விரயமாக்கும் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுகளாகும்.

எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ‘கூஜா’ தூக்குபவர்களும், தமது கட்சியின் நிலைப்பாடு சார்ந்து, இவ்விடயத்தை நோக்காமல், ஓர் எம்.பி, நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் உரையாற்றியது, இந்தளவுக்கு ஏன் பேசுபொருளாகின்றது? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பவற்றைத் தேடியறிவதற்கு, நேரத்தைச் செலவிடுவது ஆரோக்கியமானதாக அமையும்.

ஒரு தமிழ் முக்கியஸ்தர் அல்லது, சிங்கள சமூகத்தில் உள்ள பகவந்தலாவ ராகுல் தேரர், வட்டரக்க தேரர் போன்ற முற்போக்குச் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காகப் பேசுவதை, அச்சமூகம் ஒரு முக்கியத்துவம் மிக்க விடயமாகப் பார்ப்பதற்கும் அதனுடன் முஸ்லிம் எம்.பிக்களை ஒப்பிட்டு விமர்சிப்பதற்கும், சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவ்வாறெல்லாம் காத்திரமான உரையை, சபையில் ஆற்றுவதில்லையே என்ற ஏக்கம், இதற்கு முதல் காரணமாகும். இலங்கை அரசியலில், சகோதர இனமொன்றின் பிரதிநிதிகள் மற்றைய இனத்துக்காகக் குரல் எழுப்புவதில், பிற்போக்குத்தனம் காணப்படுகின்றமை அதற்கடுத்த காரணியாகும்.

தியவன்ன ஓயாவுக்கு மத்தியிலுள்ள நாடாளுமன்றத்தில், சில எம்.பிக்களின் செயற்பாடுகள், முகம்சுழிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், நாடாளுமன்றத்தில் உரையாற்றினால் மட்டும், என்ன நடந்து விடப் போகின்றது என்ற கேள்வி, கீழ்நிலை அரசியல் ஆதரவாளர்கள் சிலருக்கு இருந்தாலும், நாடாளுமன்றம் என்பது மீயுயர் சபை என்பதையும் அதில் உரையாற்றுவதற்கான வாய்ப்பு, எம்.பி ஒருவருக்கு விசேடமானது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிமோ, தமிழரோ, ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது எதற்காக? நாடாளுமன்றத்துக்குச் சென்று, தமக்கு வாக்களித்த மக்களின் உரிமைகளைப் பேசுவதற்காகவும் அதற்காக, ஜனநாயக வழியில் பாடுபடுவதற்காகவும் ஆகும். வேட்பாளர்களாக வாக்குக்கேட்டு வரும் போது, என்ன கூறுகின்றார்கள்?… ”என்னை வெற்றிபெற வைத்தால், நாடாளுமன்றத்தில் இந்தச் சமூகத்துக்காக எனது குரல் ஓங்கி ஒலிக்கும்” என்றுதானே சொல்கின்றார்கள். அப்படியென்றால், அதைச் செய்துதானே ஆக வேண்டும்?

இதைத் தமிழ் அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து செயற்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் உரையாற்றியதால், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு, முழுமையான தீர்வு கிட்டிவிடவில்லை என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் காத்திரமான உரைகள், வியூகங்கள் ஆகியவற்றின் ஊடாக, அந்தப் பிரச்சினைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளதுடன், தீர்வுக்கான சாத்தியங்களையும் அதிகரித்திருக்கின்றன.

நீண்டகால அரசியல் அனுபவமுள்ள இரா. சம்பந்தன் முதல் புதிய எம்.பிக்கள் வரை, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்களின் நாடாளுமன்ற உரைகள், திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்படுகின்றன. இதனால், இவை விடயதானம் கொண்டவையாகவும் நிறையத் தரவுகளை உள்ளடங்கியவையாகவும் இருப்பதை முஸ்லிம் சமூகமும் அவதானித்துள்ளது.

ஆனால், அநேகமான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற உரைகள் இவ்விதம் அமைவதில்லை. ‘உப்புக் சப்பாக’த் தாம் சார்ந்த கட்சிக்குச் சார்பாக உரையாற்றுகின்றவர்கள், வசனங்களை நீட்டி நேரத்தை வீணடிப்பவர்கள், பேசாமலேயே காலத்தைக் கடத்துபவர்கள் எனப் பல ரகமானோர் உள்ளனர். ஆயினும், விரல்விட்டு எண்ணக் கூடிய சில முஸ்லிம் எம்.பிக்கள், ‘அத்தி பூத்தாற்போல்’ சற்றுக் கவனிப்புக்குரிய உரைகளை நிகழ்த்தியதையும் மறந்து விட முடியாது.

முன்னைய காலத்தில், பல முஸ்லிம் எம்.பிக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியே, சமூகத்துக்குப் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்தனர். மு.கா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், பல மணிநேரம் ஆற்றிய உரையும் அதனது கனதியும், வரலாற்றுப் பதிவாக அமைந்தது. அவ்வாறான உரைகள், பெருந்தேசியவாதிகளால் உற்றுநோக்கப்பட்டன.

ஆனால், அண்மைக் காலத்தில் முஸ்லிம் அரசியலானது, முஸ்லிம்களுக்கான அரசியலாகத் தம்மைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில், முஸ்லிம் எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் காத்திரமாக உரையாற்றியது மிகக் குறைவாகும். பலர் சமூகத்துக்காகப் பேசப் பயந்தனர்; பலர் பின்வாங்கினர்.

இவற்றையும் தாண்டிப் பேசியவர்களின் உரைகள், ஒன்றில் உணர்ச்சியைத் தூண்டுவனவாக அமைந்திருந்தன. அன்றேல், போதுமான தரவுகள், ஆதாரங்களுடன் அமையவில்லை. இன்னும் சில எம்.பிக்கள், கடைசியாக எப்போது உரையாற்றினர் என்பது கூட நினைவில் இல்லை.

சபையில் உரையாற்றுவதில் மட்டுமன்றி, நாடாளுமன்றச் செயற்பாடுகளிலும் முஸ்லிம் எம்.பிக்கள், பல தடவைகள் தவறு விட்டிருக்கின்றார்கள். சபைக்கு ஒரு திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்படும் போது, அதனால், தாம் சார்ந்த சமூகத்துக்கு என்ன அனுகூலம், பிரதிகூலம் கிடைக்கும் என்பதைப் பார்க்காமல், தமக்கு ‘என்ன’ கிடைக்கும் என்பதைப் பொறுத்தே, அநேகமான முடிவுகளை எடுத்தனர்.

ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள், அரசாங்கத்துக்கு ஒத்துஊதுவதும் எதிரணியில் உள்ளவர்கள் எதிர்ப்பு அரசியல் செய்வதும் தவிர, வேறு எந்த வியூகங்களோ சாணக்கியங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோதாது என்று, ‘சமூக நன்மைக்காகவே ஆதரவளித்தோம்’ என்று, பொய்க் காரணம் கூறி, சட்ட மூலங்களுக்கு ஆதரவளித்துத் தாமும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றிய சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

இதனாலேயே, சாணக்கியன் எம்.பி உரையாற்றுகின்ற போது, இந்தளவுக்குக் கவனம் குவிக்கப்படுகின்றது. அத்துடன், தமிழ் அரசியல்வாதிகளும் ஒருவகையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றாலும் அதையும் கடந்து, சமூகத்தின் பிரச்சினைகளைத் தேசிய மயப்படுத்தல் என்ற விடயத்தில் தமிழர் அரசியல், முஸ்லிம் அரசியலை விட நீண்டதூரம் பயணித்திருக்கின்றது.

அந்தவகையில், தமிழ் எம்.பியைப் புகழ்வதோ இகழ்வதோ, இங்கு முக்கியமல்ல. மாறாக, முஸ்லிம் சமூகத்துக்காகக் குரல்கொடுப்பது, முஸ்லிம் எம்.பிக்களின் கடமை என்பதை உணர்ந்து செயற்படுவதே அதிமுக்கியமானதாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், உரிமைக் கோரிக்கைகளை, நாடாளுமன்றத்தில் காத்திரமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். எம்.பி பதவிக்கு அத்தனை கௌரவமும் கொடுப்பனவுகளும் வெகுமதிகளும் வழங்கப்படுவது, சபைக்குச் சென்று வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு வருவதற்கல்ல என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, ஒரு முஸ்லிம் எம்.பி, தமிழ் மக்களுக்காகப் பேசினால், தமிழ் அரசியல்வாதி முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தால், அதை முதலில் நேரிய மனதுடன் அங்கிகரிக்க வேண்டும். அதை வைத்து, நாம் எதைச் சாதிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

எந்த உள்நோக்கமும் இல்லாமல், ஒரு சமூகத்துக்கு அநியாயம் நடக்கின்ற போது, மற்றைய இரு சமூகங்களின் அரசியல், சமூகத் தலைமைகள் குரல் கொடுக்கும் கலாசாரம் ஒன்றை உருவாக்க, அது அடித்தளமாக அமையும் என்பது திண்ணம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்கள் சேவை கட்சி?! | பாண்டே பார்வை!! (வீடியோ)
Next post இணை தேர்வு வழிமுறை!! (அவ்வப்போது கிளாமர்)