முஸ்லிம் நாடுகளின் மெத்தனப் போக்கு !! (கட்டுரை)
தென்னாசிய நாடுகள் உள்ளடங்கலாக, உலகின் பல நாடுகளிலும் ஆட்புலப் பிராந்தியங்களிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பு சார்ந்த இனவாதம், மதவாதம் ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும், முஸ்லிம் நாடுகள் இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், ஒருவித மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.
முஸ்லிம்கள் மீது என்னதான் நெருக்குவாரங்களைப் பிரயோகித்தாலும், கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தை உலக பொலிஸ்காரர்கள், நாட்டாமைகள் தொடக்கம் உலக அரசியலின் புல்லுருவிகள் வரை, எல்லோருக்கும் ஏற்படுத்த இது காரணமாகி இருக்கின்றது எனலாம்.
மறுபுறத்தில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய அவநம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது. இலங்கை முஸ்லிம்களும் இதில் இணைந்து கொள்வர்.
முஸ்லிம் நாடுகளின் வலையமைப்பு, மிகப் பெரியதும் பரந்துபட்டதுமாகும். உலகில், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 50 நாடுகள் உள்ளன. உலக மக்கள் தொகையில் 25 சதவீதமானோர், இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்கள், மேற்படி 50 நாடுகள் உள்ளடங்கலாக, சுமார் 200 நாடுகளை உட்பட, பல சுயாட்சிப் பிராந்தியங்களில் வாழ்கின்றனர். இது ஒருவகையில், எல்லைகள் கடந்த ஒரு பலமாகும்.
ஆனால், என்ன நடக்கின்றது?
இன்றைய நிலைவரப்படி, சர்வதேச அளவில், தேவையற்ற நெருக்கடிகளைச் சந்தித்துள்ள மக்கள் பிரிவினராக, முஸ்லிம்களே காணப்படுகின்றனர். ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாதிகளை ஒழித்தல், அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்தல், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் உள்ள பெரும்பான்மை இனத்தின் நலனைப் பேணுதல், அங்குள்ள முஸ்லிம்களை அடக்கியாளுதல் என்ற தோரணைகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தவிர, முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்தல், அங்குள்ள எண்ணெய், கனிய வளங்களைச் சுரண்டுதல், அந்த நாட்டு மக்களின் நிம்மதியைக் கெடுத்தல், ஆயுத விற்பனை செய்தல், முஸ்லிம் நாடுகளை மேற்குலகில் தங்கியிருப்பவர்களாக மாற்றியமைத்தல் என்பவற்றுடன், மத ரீதியான ஒரு நிழல் யுத்தமும் இந்த நகர்வுகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருப்பது உலகறிந்த விடயம் ஆகும்.
முன்னைய காலங்களில் தமக்கு ஏதாவது அநியாயம் நடந்தால், முஸ்லிம் நாடுகள் தட்டிக் கேட்கும் என்ற நம்பிக்கை, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இருந்தது. ஆனால், கடந்த இரு தசாப்தங்களில், இது வெகுவாக மாறிப் போனது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உடனான வர்த்தக, இராஜதந்திர மற்றும் இன்னோரன்ன உறவுகளில் சேதாரம் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காகவே, முஸ்லிம் நாடுகள் குறிப்பாக, பலம் பொருந்திய அரபு நாடுகள் இவ்விதம் மெத்தனமாகவும் கண்டும் காணாதது போலும் செயற்படுகின்றன என்பது பொதுவான கணிப்பாகும்.
ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகள் மீது போர் தொடுக்கப்பட்டது. சதாம், கடாபி மட்டுமன்றி, பொது மக்களும் கொல்லப்பட்டனர். ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வுகளால், துருக்கி போன்ற நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளால், அங்குள்ள மக்களுக்கு நிஜமாகவே நிம்மதி கிடைத்திருக்கின்றதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், அரபுலகம் இதை எதிர்க்கவில்லை. பெரும் தியாகங்களைச் செய்தது மட்டுமன்றி, இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதொரு நிலப்பரப்பில் வாழ்கின்ற பாலஸ்தீன மக்கள் இன்று வரையும் இராணுவ அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் விடிவு கிடைக்கவில்லை.
ஆனால், இவற்றையெல்லாம், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார் போன்ற முஸ்லிம் நாடுகள் கண்டு கொள்ளவில்லை; கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, கண்டும் காணாதது போல நடந்து கொண்டன என்பதே சரியாகும். கடந்த சில வருடங்களாக மியன்மார், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் முகம்கொடுத்து வரும் இனவாத, மதவாத சவால்களுக்குக் கைகொடுக்கவும் மேற்குறித்த அரபு நாடுகள் முன்வரவில்லை. தம்மை மேற்குலகுக்கு நல்ல பிள்ளையாகக் காட்டுவதற்காக, சற்றுத் துணிச்சலான நகர்வுகளைச் செய்த கட்டார் போன்ற ஓரிரு நாடுகள் மீது, பொருளாதாரத் தடை விதிப்பதில் காட்டிய முனைப்பை, முஸ்லிம் விரோத நாடுகளுக்குத் தடை விதிப்பதில் வெளிக்காட்டவில்லை.
இலங்கை முஸ்லிம்கள் விடயத்திலும் அரபுலக நாடுகள் மெத்தனமான ஓர் அணுகுமுறையையே கையாள்கின்றன. திகண, அளுத்கம, பேருவளை, அம்பாறை கலவரங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், வடமேல் மாகாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், முஸ்லிம்களின் இன, மத, கலாசார நடைமுறைகளை இலக்குவைத்த நெருக்குவாரங்கள் எனப் பல இன்னல்களை, முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகின்றது.
இவ்வாறான நெருக்கடிகள் தோற்றம் பெற்ற காலத்தில், பிரதான முஸ்லிம் நாடுகள் அவை பற்றி அக்கறை செலுத்தி, இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். ஆனால், கலரவங்கள் விடயத்தில், குறைந்தபட்சமான அழுத்தங்களே பிரயோகிக்கப்பட்டதுடன், மத விடயங்களில் பெரியளவான அக்கறையை அரபுலகம் வெளிப்படுத்தவில்லை.
இந்த வரிசையில், ஜனாஸா எரிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதை, யாரும் மறுக்க முடியாது. கொவிட்-19 நோயின் தாக்கம், இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனவே, அக்காலம் முழுக்க மரணங்கள் நிகழ்கின்ற போது, அவ்வுடலை எரிப்பதா, புதைப்பதா என்ற இழுபறி தொடரப் போகின்றது. இந்த நிலையில், தொடர்ந்தும் இவ்வுரிமை மறுக்கப்படுமாயின், முஸ்லிம்கள் எவ்விதம் பதில் செயற்பாடு ஆற்றுவார்கள் என்பதையும் ஊகிக்க முடியாதுள்ளது.
எனவே, பலம் பொருந்திய அரபு நாடுகள், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை வழங்குமாறும் அவர்களைச் சரிசமமாக நடத்துமாறும் அரசாங்கத்துக்குக் கோரிக்கையொன்றைக் கூட்டாக முன்வைத்திருக்கலாம். அரபு நாடுகள் இலங்கைக்கு பெரும் நிதியுதவிகளையும் நன்கொடைகளையும் வழங்குகின்றன. இலட்சக்கணக்கான இலங்கையர் அங்கு பணிபுரிகின்றனர். உலக அரங்கில், இலங்கைக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது, முஸ்லிம் நாடுகளின் உதவி அரசுக்கு தேவைப்படுகின்றது.
ஆகவே, முஸ்லிம் நாடுகள் இவ்வாறான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தால், ஜனாஸா நல்லடக்கம் உள்ளிட்ட முஸ்லிம்களின் கோரிக்கைகள், இழுபறியின்றி நிறைவேறி இருக்கும். குறைந்தபட்சம், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன, மத நெருக்குவாரங்கள் குறித்து, முஸ்லிம் நாடுகள் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தினால் கூட, அரசாங்கம் அதன் கனதியைப் புரிந்து கொண்டிருக்கும்.
முஸ்லிம் நாடுகள், இவ்வாறு அக்கறையை வெளிக்காட்டுவதில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கின்றமை, முஸ்லிம்களை அடக்கியாள நினைப்போருக்குத் தைரியத்தைக் கொடுப்பதுடன், இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு, வெளிநாட்டு உதவிகள் பற்றிய நம்பிக்கை இன்மை ஏற்படவும் காரணமாகின்றது.
இங்கு இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, இந்த நிலை ஏற்படுவதற்குத் தனியே முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களோ, கொள்கைகளோ, இலங்கையிலுள்ள தூதரங்களோ காரணம் எனக் கூறிவிட முடியாது. மாறாக, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும் கூட இதற்குக் காரணமாகும்.
தமிழர்கள் வளர்த்துக் கொண்டதைப் போன்ற ஓர் உறவை, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுடனும் தூதுவராலயங்களுடனும் கட்டியெழுப்பவில்லை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தனை நாடுகளும் சனத்தொகையும் ஒற்றுமையும் முன்னுதாரணங்களாக இருக்கின்றன. ஆயினும் ஆன பலன் ஒன்றுமில்லை. தமது சொந்த இராஜதந்திர உறவுகளும் பொருளாதார நலன்களும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்கே, முஸ்லிம் நாடுகள் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகின்றது.
அதேபோல், ஒன்றிணைவும் ஒருவருக்கொருவர் குரல்கொடுக்கும் தன்மையும் முஸ்லிம் சமூகத்துக்குள் இல்லாமல் போயுள்ளது. இதனாலேயே இலங்கையில் மட்டுமன்றி ஏனைய பல நாடுகளிலும் முஸ்லிம்கள் அளவுக்கதிகமான நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இனிமேலாவது இந்நிலைமை மாற வேண்டும்.
Average Rating