சருமம்…சில குறிப்புகள்…!! (மகளிர் பக்கம்)
மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு சருமம். உடலின் மிகப் பெரிய உறுப்பும் சருமம்தான். நம்மைச் சுற்றி நிலவும் சீதோஷ்ணநிலையின் வெப்பம், நமது ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் அதிக குளிர் ஆகியவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும் உன்னத பணியை நம்முடைய சருமமே செய்து வருகிறது. அப்படிப்பட்ட சருமம் பற்றிய சில முக்கிய குறிப்புகள் இங்கே…
* நமது உடலுக்குக் கவசமாக இருக்கும் சருமம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது மேல் பகுதி, கீழ் பகுதி என்ற 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில், மேல் பகுதி தோல் எபிடெர்மிஸ்(Epidermis) எனவும், கீழ் பகுதி தோல் டெர்மிஸ்(Dermis) எனவும் சரும நல மருத்துவர்கள் வரையறுக்கிறார்கள்.
* மேல் பகுதியான எபிடெர்மிஸில் உயிரிழந்த செல்கள் மற்றும் அவற்றின் கீழே வளரக்கூடிய செல்கள் போன்றவை காணப்படும். வியர்வை சுரப்பிகள், உணர்ச்சி நரம்புகள், ரத்த நாளங்கள், சிறுதசைகள் போன்றவை கீழ்தோலான டெர்மிஸுக்கு அடியிலும் இருக்கும்.
* நமது உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்லாதவாறு தடுத்தல், நச்சுப்பொருட்களை வியர்வை மூலமாக வெளியேற்றுதல் போன்ற பணிகளை சருமம் இடையறாது செய்து வருகிறது. அத்துடன் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின்-டியை உற்பத்தி செய்து ரிக்கெட்ஸ் போன்ற எலும்பு தொடர்பான பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது.
* அடித்தோலின் கீழே அமைந்துள்ள உணர்ச்சி நரம்புகள் மேல் தோலில் படுகிற அளவுக்கு அதிகமான வெப்பத்தை நமக்கு உணர்த்துவதோடு, உடலை பாதுகாக்கவும் செய்கிறது.
* சிராய்ப்புகள் மற்றும் கீறல்கள், சிறு புண்கள் போன்றவை தோலை மட்டுமே பாதிக்கும். இதன் எதிரொலியாகவே வலி, எரிச்சல் உண்டாகிறது. ஆனால் படர்தாமரை, அக்கி, சொறி, சிரங்கு, கட்டி போன்ற தோலைப் பாதிக்கும் காரணிகள் உடலின் உள்ளே ஏற்பட்டிருக்கிற நோய்களின் அறிகுறிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதால் எண்ணற்ற சரும பாதிப்புகளைக் குணப்படுத்தலாம். குறிப்பாக, நமது சருமம் மிகவும் வறண்டுபோன நிலையில் சோப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, வாசலின், கிளிசரின், பருத்தி எண்ணெய் ஆகியவற்றை குளித்த பின் உபயோகிக்கலாம். இது போன்ற சமயங்களில் ஆடைகளை இறுக்கமாக அணியக் கூடாது.
* அழற்சி(பாதிப்புக்குள்ளான இடம் சுற்றி சிவந்து காணப்படுதல்), சீழ் பிடித்தல், வீக்கம் போன்ற தொற்றுக்கள் தோலில் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை எந்த காரணத்துக்காகவும் சுய மருத்துவம் செய்வது போல தொந்தரவு செய்யக் கூடாது. மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதே சரியான முறை. அதிலும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மற்ற உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கும் அளவு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
* சருமத்தொற்று உள்ளவரின் ஆடைகள், படுக்கைகளைத் தொடுவதால் நோய் பரப்பும் கிருமிகள் மற்றவருக்கும் பரவும். குடும்பத்தில் யாராவது ஒருவர் சொறி மற்றும் சிரங்கால் அவதிப்பட்டால், மற்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உடமைகளைப் பயன்படுத்தக் கூடாது.
Average Rating